நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமானதொரு வரலாற்று கட்டத்தில் நாம் இருக்கிறோம். கடந்த 70 ஆண்டுகளாக நாம் கட்டியெழுப்பிய, நாம் ஆதரித்து நின்ற அனைத்தும் நொறுங்கிப் போயிருக்கும் நிலையில், நாம் உதவியற்று நிற்கிறோம். தெருக்களில் நடைபெறுகின்ற சட்டவிரோதமான செயல்கள், இப்போது அரசாங்கத்தின் சட்டவிரோத செயல்களோடு மிகவும் பொருந்திப் போகின்றன. அரசியலமைப்பு மற்றும் நிறுவனம் சார்ந்த விழுமியங்களிலிருந்து அரசு தன்னை முழுமையாக விலக்கிக் கொண்டுள்ளதாகத் தோன்றுகின்றது.
சக இந்தியர்களில் சிலரை மட்டும் குறிவைத்து, அவர்களைத் துன்புறுத்துவதற்கும், அடக்குவதற்குமான சதி நடப்பதாகத் தெரிகிறது. இவையனைத்தும் 1930களின் பிற்பகுதியில் இருந்த ஜெர்மனியைப் போல பயங்கரமான, தவிர்க்க இயலாத இறுதி நிலைக்கு நம்மை இட்டுச் சென்றிருக்கின்றன. என்ன நடக்கப் போகிறது என்பதை நம்மால் உணர முடிந்தாலும், நம்மால் அதனைத் தடுக்க முடியாது என்பதாகவே தோன்றுகின்றது. இதற்கு எதிராக எதையாவது செய்வதற்கான வழிமுறை தெரிந்தவர்கள் என்று யாருமில்லை. இசையின் பின் நீண்ட வரிசையில் அணிவகுத்துச் செல்லும் எலிகளாகவே நாம் இருக்கிறோம்.
பாஜகவின் இயல்பும், அது வெளிப்படுத்தி வருகின்ற தொடர் வன்மமும் மனிதகுலத்திற்கு இயல்பான சட்டங்களை மட்டுமல்லாது, இந்திய அரசியலமைப்புக் கொள்கைகளையும் கடைப்பிடிக்க அது விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்துவதாகவே இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, குடிமக்கள் என்ற உரிமைக்கு முஸ்லீம்கள் தகுதியற்றவர்கள் என்று எம்.எஸ்.கோல்வால்கர் இழிவான முறையில் கூறியதை நடைமுறைப்படுத்தும் வகையில் முஸ்லீம்களை இரண்டாம் தர குடிமக்களாகவே அவர்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். சிறுபான்மையினருக்காக ஒதுக்கப்படும் சமூகத்துறை சார்ந்த செலவினங்களைக் குறைப்பது, 370ஆவது சட்டப் பிரிவை நீக்குவது, இரு நாடுகள் என்ற கோட்பாட்டை நிலைநிறுத்துகின்ற குடியுரிமைச் சட்டத்தில் அப்பட்டமான சட்டவிரோத திருத்தத்தை முன்னெடுப்பது, படுகொலை செய்பவர்களுக்கு எதிராக விரைவான நடவடிக்கை எடுக்காதது மட்டுமல்லாது அவ்வாறு படுகொலை செய்தவர்களை பாராட்டி தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்குவது என்று தொடர்ந்து முஸ்லீம்களுக்கு எதிரான விரோதப் போக்கையே பாஜக கொண்டிருக்கிறது.
அதே போன்று, பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர்களுக்கான துணைத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை 50% குறைப்பது, தங்கள் தொழில்களைச் செய்கின்ற தலித்துகளை பசு பாதுகாவலர்கள்
குறிவைத்து தாக்குவதற்கு அனுமதிப்பது, இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துவது போன்ற செயல்களின் மூலம். தலித்துகள் தடையற்ற உரிமைகளைக் கொண்டவர்கள் அல்ல, எப்போது வேண்டுமென்றாலும் திரும்பப் பெற்றுக் கொள்கின்ற அரசாங்கத்தின் கருணையால் வாழ்பவர்கள் என்பதாக தலித்துகளுக்கு தொடர்ந்து பாஜக சமிக்ஞை தந்து வருகிறது.
முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏறத்தாழ 130 நாட்களுக்கு மேலாக காஷ்மீர் பூட்டப்பட்டுக் கிடக்கிறது. வடகிழக்கு மாநிலங்கள் தீப்பற்றி எரிகின்றன. பெரும்பாலான இந்திய நகரங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. அப்பாவி மக்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் படுகொலை செய்யப்படுகிறார்கள், பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள், பாரபட்சத்துடன் நடத்தப்படுகிறார்கள். மிக குறுகிய கண்ணோட்டத்துடன் அரசு கடைப்பிடித்து வருகின்ற கொள்கைகளின் மூலம் பொருளாதாரம் அதலபாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் மிக மோசமான புதிய நடவடிக்கைகள் இல்லாமல் ஒரு நாள் கூட கழிவதில்லை.
தவறு செய்து விடக் கூடாது. இந்தியாவின் ஒற்றுமை மற்றும் நேர்மையே இப்பொழுது அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது. இந்தியா குறித்து இருந்து வந்திருக்கின்ற கனவைப் பாதுகாக்க வேண்டும் என்று உண்மையிலேயே உறுதியுடன் இருந்தால், செயல் தொடர்பற்ற அரசியலை நாம் கைவிட வேண்டும். இந்த மோசமான அகழிக்குள் நாம் இருப்பதாக காணுகின்ற எவருமே தங்கள் தோளோடு தோள் சேர்த்து ஒன்றாக அணிவகுக்க வேண்டும்.
பாஜகவிடமிருந்து எவ்வித கருணையையும் எதிர்பார்க்காதீர்கள். அவ்வாறு எதிர்பார்ப்பவர்களுக்கு எதுவும் கிட்டாது. அவர்களிடமிருந்து எந்தவொரு நுட்பத்தையும், அரசியலமைப்பு உரிமையையும் எதிர்பார்க்காதீர்கள். அவர்களிடமிருக்கும் கொடுங்குணத்தை மட்டுமே நம்மால் உணர முடியும். இந்தியாவின் ஆன்மாவின் மீது மற்றொரு தாக்குதல், அதற்கடுத்து மற்றுமொரு தாக்குதல் நடக்கும் என்று நீங்கள் உறுதியாக எதிர்பார்க்கலாம்.
எதிர்ப்பை விட்டுக் கொடுத்து தோல்வியை ஒப்புக் கொள்வது மிகவும் எளிதானதாக இருக்கும். வேறு வழி நோக்கிச் செல்வது இன்னும் எளிதாக இருக்கும். ஆனால் என்ன விலை கொடுத்தேனும் உறுதியுடனும், நம்பிக்கையுடனும் நாம் போராடியே ஆக வேண்டும். போராடுவது என்பது இன்று மிகக் கடினமாகத் தோன்றினாலும், இது அவர்களுடனான கணக்கைத் தீர்த்துக் கொள்வதற்கான ஆரம்பம். ஒற்றை சித்தாந்தத்தை, ஒற்றைத் தலைவரை இந்தியா மீது திணிப்பதற்காக பாஜக கொண்டிருக்கும் ஆர்வம், அதனால் கட்டுப்படுத்த முடியாத மையவிலக்கு சக்திகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. தன்னால் சமாளிக்க முடியாத, கட்டுப்படுத்த முடியாத, அனைவரும் பார்த்து அஞ்சுகின்ற செயல்களை பாஜக அனுமதித்திருக்கிறது. தேசத்தை நெருப்பு தழுவியிருக்கும் வேளையில், தனக்குத் தெரிந்ததைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள பாஜக, எந்தவொரு எதிர்ப்பையும் தணிப்பதற்கான முழுமுதல் நடவடிக்கையாக வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறது.
இந்த நிலைமையில், ஜந்தர் மந்தரில் அடையாள எதிர்ப்பு, சில நூறு பேரிடம் கையொப்பம் பெற்ற திறந்த கடிதம், தங்களுக்குப் பழக்கமான இடங்களில் வட்டமேசை மாநாடு, ஓரிரு ட்வீட்கள் அத்தோடு பாராளுமன்றத்தில் வெளிநடப்பு என்று இந்தியாவின் முற்போக்கு சக்திகள் இன்னும் தங்களின் பழைய பழக்கவழக்கங்களையே தழுவிக் கொண்டிருக்கின்றன. இன்று ஆட்சியில் இருப்பவர்களுக்கு அரசியலமைப்பைப் போன்று அர்த்தமற்றவையாகவே இந்த நடவடிக்கைகள் தோன்றுகின்றன. நாம் எதிர்கொண்டிருக்கும் அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்படுபவர் எவரையும் இதுபோன்ற நடவடிக்கைகள் நிச்சயம் காப்பாற்றாது.
இப்போது நிலவுகின்ற கசப்பான யதார்த்தம் என்னவென்றால், நாடு உண்மையில் எரிந்து கொண்டிருக்கும் நிலையில் நம் அன்றாட நடைமுறைகளில் உள்ள சுகபோகங்கள், இந்தியாவில் இருக்கும் இந்த நெருக்கடியை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது, யாரை விலக்கி வைப்பது, நன்கொடையைப் பெறுவது, அடுத்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றுவது, ட்வீட் செய்வது, அடுத்த பேரணியை எவ்வாறு ஒழுங்கமைப்பது என்பது பற்றியே இன்னும் நாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். இவையனைத்தும் நமக்கான பிரச்சனைகளின் குறியீடாகவே உள்ளன.
"எந்தவொரு அநியாயமான சட்டமும் சட்டமே கிடையாது" என்று புனித அகஸ்டின் கூயுள்ளார். இதைக் கருத்தில் கொண்டு, குடியுரிமைத் திருத்தச் சட்டம், குடிமக்களுக்கான தேசிய பதிவு, கொலை, கற்பழிப்பு மற்றும் அராஜகங்கள் குறித்து அரசிடம் இருக்கின்ற அலட்சியம், இந்தியாவின் பன்மை, ஜனநாயகம் மற்றும் தாராளவாத கட்டமைப்பின் மீது தாக்குதலை ஏற்படுத்துகின்ற சட்டங்கள் அனைத்தையும் மீறுவதே இப்போது நமது தார்மீகக் கடமையாக இருக்கும். ஒருங்கிணைந்த, வன்முறையற்ற சட்ட மீறலே இப்போது நமக்குத் தேவையானது. எல்லா இடங்களிலும் இது ஏற்கனவே தொடங்கி விட்டது என்பதற்கான அடையாளங்கள் தெரிகின்றன.
இந்த உணர்வுகளைத் தூண்டி, அவற்றை வெளிக் கொணர்வதற்கான வகையில் அதை நாம் தொடர்ந்து அதிகரிக்க வேண்டும். அரசியல் கட்சிகளுடன் சேர்ந்தோ அல்லது அவை இல்லாமலோ, இந்தியாவின் ஆன்மாவைப் காப்பதற்கு ஒவ்வொரு மனசாட்சியுள்ள இந்தியனும் எழுந்து நிற்க வேண்டும். உண்மையான தேசவிரோதிகள் வசித்து வருகின்ற கோபுரங்களின் அஸ்திவாரங்களை நாம் அசைத்துப் பார்க்க வேண்டிய நேரம் இது.
பண்டிட் ஜவஹர்லால் நேரு ஒருமுறை கூறியது போல், “எதிர்காலம் என்பது எளிதானதாக அல்லது ஓய்வெடுப்பதாக இருக்காது. இது வரையிலும் நாம் கொண்டிருக்கும் உறுதிமொழிகளையும், இன்று நாம் எடுக்கும் உறுதிமொழிகளையும் நிறைவேற்றுவதற்கான இடைவிடாத முயற்சி எதிர்காலத்தில் தொடர்ந்து தேவைப்படும்.
நன்றி: https://thewire.in/politics/anti-caa-protests-civil-disobedience
தமிழில்: முனைவர் தா.சந்திரகுரு விருதுநகர்