இயற்கை ஏமாற்றவில்லை. தென்மேற்கு பருவமழை என்னும் கொடையை அது கொடுத்தது. தண்ணீர் மாறுவேடத்தில் வரும் பால் போல் தாவிக் குதித்தது. 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடி இல்லை. கஜா புயல் மதயானையின் பிளிறலோடு வாழ்க்கையை நிர்மூலமாக்கி இருந்தது. இந்த நிலையில்தான் 13-08-2019ல் மேட்டூர் திறக்கப்பட்டது. வழக்கமாக அடுத்த 15 நாட்களுக்குள் கடை மடையை காவிரி தொடும். ஆனாலும் இதுவரை கடைமடை நதிகளும், வாய்க்கால்க ளும், கண்மாய்களும் ஏரிகளும் குளங்களும் வறண்டே கிடக்கின்றன. சம்பா சாகுபடியும் பொய்த்து விடுமோ என்ற பீதியில் கடைமடை கண் கலங்குகிறது. இயற்கை கொடுப்பதை எந்த செயற்கை தடுக்கிறது? எடப்பாடி அர சாங்கத்தின் புதிய நீர் கொள்கையே இதற்கு காரணம். காவிரி வரலாற்றில் இரு ஒப்பந்தங்கள் முக்கிய மானவை. 1. 1892ஆம் வருடத்தியது. 2. 1924ஆம் வருடத்தி யது. 1924ம் ஆண்டு ஒப்பந்தப்படி தமிகத்திற்கு மேட்டூரும் கர்நாடகத்திற்கு கிருஷ்ணராஜ சாகரும் கிடைத்தன. இந்த ஒப்பந்தத்தின் ஷரத்துகளில் இரண்டு முக்கியமானவை. 1. தமிழகம் காவிரியின் குறுக்கில் மேட்டூரில் அணை கட்ட லாம். அதன் கொள்ளளவு அல்லது பயன்படுத்தும் நீரின் அளவு 93470 மில்லியன் கனஅடி என்றும், பாசனப்பரப்பு 3,01,000 ஏக்கர் என்றும் நிர்ணயிக்கப்பட்டது. 2. இதே போல் கர்நாடகம் கிருஷ்ணராஜசாகரில் அணை கட்டிக் கொள்ளலாம். அதன் கொள்ளளவு 45,051 மில்லியன் கன அடி தண்ணீராகும். இதில் 1,10,000 ஏக்கர் கர்நாடகா சாகுபடி செய்யலாம் என்றும் ஒப்பந்தமானது.
காவிரி, வெண்ணாறு போன்றவை பழைய ஆற்றுப் பாசனமாகும். மேட்டூர் அணை மூலம் கிடைக்கும் தண்ணீ ரைப் பயன்படுத்த புது ஆற்று பாசனம் உருவானது. தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து தென்கிழக்கில் பாயும் வகையில் கல்லணைக்கால்வாய் வெட்டப்பட்டது. தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, ஆவுடையார் கோவில், புதுக்கோட்டை பகுதிகளில் 3,01,000 ஏக்கர் பாசனம் பெறும் வகையில் புதிய திட்டம் வடிவமைக்கப் பட்டது. இவற்றுள் புதுக்கோட்டை மட்டும் மன்னரின் சமஸ்தானத்தில் இருந்தது. காவிரி அங்கு பாய்ந்தால் வரி மற்றும் நீர் நிர்வாகத்தில் பிரிட்டன் அதிகார குறுக்கீடு செய்யும் என்பதால் புதுக்கோட்டை தவிர்க்கப்பட்டது. கல்ல ணைக்கால்வாய் பகுதியில் 2,56,000 ஏக்கர் பாசனம் உரு வானது. 45,000 ஏக்கருக்கான நீர் மிஞ்சியது. தமிழக அரசு வேறு முறையை கையாண்டது.
கிழக்கு, மேற்கு கால்வாய்கள்
மேட்டூருக்கும் பவானிக்கும் இடையே காவிரியின் வலது கரையிலும் மேட்டூரிலிருந்து பள்ளிப்பாளையம் ஜேடர் பாளையம் வரையிலுமான காவிரியின் இடது கரையிலும் தரிசு நிலம் கிடந்தது. அங்கு விவசாயிகள் பாசன வசதி கோரினர். மேற்கூறிய எஞ்சிய 45,000 ஏக்கர் பாசனப்பகுதி இங்கு மாற்றப்பட்டது. 1955-56ல் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்கள் தமிழக அரசால் அனுமதிக்கப்பட்டன. கரிகாலன் கட்டிய கல்லணையின் பாசன முறைக்கும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கும் வேறுபாடு உண்டு. கல்லணை பாசனமுறைக்கு ஜுன் 12ல் மேட்டூரில் தண்ணீர் திறந்து ஜனவரி 28ல் மூடப்படும். முப்போகம் சாகுபடி வாகு அங்கு இருந்தது. கிழக்கு மேற்கு கால்வாய்களுக்கு ஆகஸ்ட் 1ல் தண்ணீர் திறக்கப்பட்டு டிசம்பர் 15வரை தரப்படும். அங்கு ஒருபோகம் சாகுபடி செய்யப்பட்டது. மேலும் இவ்வேறுபாட்டுக்கு காரணம் கல்லணையி லிருந்து காவிரி டெல்டா பாசனம் மட்டுமே சமவெளி பகுதி யில் அமைந்தது. 1902-03ல் இந்திய நதிகளிலேயே அரசுக்கு அதிக வருவாய் ஈட்டியது டெல்டா சாகுபடியே ஆகும். தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்று காவிரி டெல்டா பெயர் ஈட்டியது. உள்ளபடியே சேலம், நாமக்கல், மாவட்டங்கள் நெல் சாகுபடியை மட்டுமே நம்பியவை அல்ல. சோளம், கம்பு, தினை, நிலக்கடலை உள்ளிட்ட புஞ்சைப் பயிர்கள்தான் அங்கு பிரதான சாகுபடி ஆகும் என்று சேலத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி வையாபுரி கூறுகிறார்.
கிழக்கு மேற்கு கால்வாய் மட்டுமல்ல கரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பாயும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், புள்ளம்பாடி உள்ளிட்டவற்றுக்கும் ஆகஸ்ட் 1ல் தண்ணீர் திறக்கப்பட்டு டிசம்பர் 15 வரை தண்ணீர் வழங்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி முதல்வரான பின் இதனை மீறினார். கிழக்கு மேற்கு கால்வாய்களுக்கு எப்போது வேண்டுமானாலும் இருந்த தண்ணீரை வாரி வழங்கினார். ஏனெனில் அது அவரின் சொந்த பூமியும் ஆகும். உற்றார் உறவினருக்கும் அங்கு நிலபுலம் தோப்பு துரவு மிகுந்திருந்தது. ஆகஸ்டு 13ல் மேட்டூர் தண்ணீர் திறப்பில் முதல்வர் இதனை ஒத்துக் கொண்டார். இப்போது மரபுக்கு மாறாக கிழக்கு மேற்கு கால்வாய்களிலும் தண்ணீரை திறக்க செய்தார். முன் குறிப்பிட்டதுபோல் இந்த தண்ணீர் எனது தோட்டத்திற்கும் கிடைக்கும் என்றும் கூறினார். தமிழக முதல்வரின் புதிய நீர்க்கொள்கையானது தமிழக வேளாண்மையை விசாரப்படுத்திவிட்டது.தமிழில் அவருக்கு பிடித்த வார்த்தை உபரி நீரானது. தமிழகமோ தனது மாமூல் நீரையே இழந்து தவிக்கிறது. மேட்டூர் அணைக்கு 86 ஆண்டுகால வரலாறு உண்டு. இதில் 16 முறை மட்டுமே ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்கப் பட்டுள்ளது. 50 முறைக்கு மேல் தாமதமாகவே மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. 22.03 லட்சம் ஹெக்டேர் நிலம் பாழ்பட்ட நிலமாகி விட்டது. தமிழகத்தின் ஓராண்டிற் கான அரிசி தேவை 91 லட்சம் டன் ஆகும். இதில் 35 லட்சம் டன் இதர மாநிலங்களிலிருந்து தமிழகம் வாங்கு கிறது. தமிழகத்தின் நெல் தேவை 1.25 கோடி டன் ஆகும். விளைவதோ 80 லட்சம் டன்தான். தமிழகம் தன்னி றைவை இழந்தது. அட்சய பாத்திரங்கள் அன்னதான கியூவில் நிற்கின்றன. அமுதசுரபிகள் கஞ்சிப் பந்தலில் கையேந்துகின்றன. அதனைப் போலவே தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டமும் அதலபாதாளம் போய்விட்டது.
தண்ணீர்ப் பற்றாக்குறையில் தமிழகம் முதலிடம்
நாட்டில் 17 நகரங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவு கிறது. தேசிய அளவில் தமிழகம் முதலிடம் பெறுகிறது. தமிழகத்தில் 2008 முதல் 2017 வரை 1139 இடத்தில் நிலத்தடி நீர் மட்டம் ஆராயப்பட்டது. 358 தாலுக்காக்களில் நிலத்தடி நீர் முற்றிலும் வறண்டும் 105 இடங்கில் அபாய நிலையிலும் 35 இடங்களில் நிலத்தடி நீர் உப்பு சேர்ந்து பயன்படுத்த முடியாமலும் உள்ளது. கர்நாடகம் சொல்லும் உபரி நீருக்கும் தமிழகம் சொல்லும் உபரி நீருக்கும் அடிப்படையில் வேறுபாடு உண்டு. இரண்டு மாநில சில அணைகளின் நீர் அளவு ஒப்பீடு இதனை உணர்த்தும்.
கர்நாடக அணைகளின் நிலவரம்: (ஆகஸ்ட் 18 நிலவரம்)
வ.எண் அணையின் மொத்த நீர் இருப்பு
பெயர் கொள்ளளவு (டி.எம்.சி)
(டி.எம்.சி)
1 கேஆர்எஸ் 45.05 45.05
2 துங்கபத்ரா 100.86 100.86
3 அலமாட்டி 119.26 97.85
4 நாராயணபுரா 26.14 15.39
5 லிங்கனமக்கி 147.42 138.11
6 சுபா 145.33 138.47
7 வராகி 31.10 17.90
8 ஹேரங்கி 8.07 7.71
9 ஹேமாவதி 35.76 35.28
10 கபினி 15.67 15.49
11 பத்ரா 63.04 60.16
12 கதபத்ரா 48.98 48.53
13 மலப்பிரா 34.35 33.23
தமிழ்நாடு அணைகள் கணக்கீட்டையும் ஆராய்வோம்.(ஆகஸ்ட் 14 நிலவரம்)
வ.எண் அணையின் மொத்த நீர் இருப்பு
பெயர் கொள்ளளவு (டி.எம்.சி)
1 முல்லை பெரியாறு 107.00 47.00
2 வைகை 67.00 27.00
3 மணிமுத்தாறு 57.00 0.97
4 பேச்சிப்பாறை 47.00 17.00
5 கிருஷ்ணகிரி 1.67 0.67
6 சாத்தனூர் 7.30 0.70
7 திருமூர்த்தி 1.70 0.20
உபரி நீர் என்பது கர்நாடகத்திற்கு பாதாம்கீர் பருகுவதாகும். தமிழகமோ உமிழ்நீரே வற்றிக்கிடக்கிறது.
அம்மாவின் ஆட்சியை மீறும் எடப்பாடி
அம்மாவின் ஆட்சியை நடத்துவதாக கூறும் எடப்பாடி அம்மாவின் ஆட்சியை மீறுகிறார். உதாரணமாக 2015ஆம் ஆண்டில் மேட்டூர் அணை அப்போதைய முதல மைச்சர் ஜெயலலிதாவால் ஆகஸ்ட் 9இல் திறக்கப்பட்டது. பிறகு புள்ளம்பாடி, புதிய கட்டளை மேட்டூர் வாய்க்கால், கிழக்கு மேற்கு கால்வாய்களுக்கு 20-08-2015ல் ஒரே நாளில் தண்ணீர் திறக்கச்செய்தார். டெல்டா பாசனத்திற்கும் இதர பாசனத்திற்கும் ஜெ. வேறுபாடு காட்டினார். சேத்தி யாதோப்பு அணைக்கட்டு பாசனப்பகுதி நடுவர் மன்றத்தால் புறக்கணிக்கப்படுவதாக அவர் பிரதமருக்கு கடிதம் எழுதினார். எடப்பாடியோ கிழக்கு மேற்கு கால்வாய்களுக்கு மட்டும் 13-08-2019ல் தண்ணீர் திறந்து விட்டு புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், புள்ளம்பாடிக்கு 28-08-2019ல்தான் தண்ணீர் திறந்தார்.
எடப்பாடி தங்களுக்கு பொற்காசுகளின் காலத்தை தந்திருப்பதாக கூறும் அவர் அமைச்சர்களோ சேலம் மாவட்டத்தில் தானே மேட்டூர் இருக்கிறது. சேலத்திற்குதானே முன்னுரிமை தரமுடியும் என்று பக்கவாத்தியம் வாசிக்கின் றனர். காவிரிக்கு நீர் கஜானாவாக விளங்குவது கபினி ஆகும். இது கேரளாவின் வயநாடு ஜில்லாவில் உற்பத்தி ஆகிறது. கபினி கேரளாவிற்குத்தான் சொந்தம் என்று அவர்கள் உரிமை கொண்டாடுவதில்லை. எடப்பாடியின் புதிய நீர்க்கொள்கை கடைமடையின் வேளாண்மையை பொட்ட லாக்குகிறது. பழந்தமிழர் மரபிலேயே காலுக்கு மேல் கல்லல் ஆகாது என்று குருவித்துறை பெருமாள் கோவில் கல்வெட்டு கூறுகிறது. ஆற்றிலிருந்து நீர் எடுத்துவரும் வாய்க்காலுக்கு மேல்பகுதியில் மற்றொரு புதிய வாய்க்கால் வெட்டக்கூடாது என்பது இதன் பொருள் ஆகும். உள்ள ஏரிகளை தூர்வார முடியாத எடப்பாடி புதிய ஏரிகளைப் பற்றி தேன் ஒழுகப் பேசுகிறார்.
இந்திய அரசியல் சட்டத்தின் 51A பிரிவு ஏரிகளின் பரா மரிப்புப் பற்றி பேசுகிறது. ஏரிகளும் குளங்களும் உயிரி னங்களே! என்று ஏரிகள் சர்வதேச சுற்றுச்சூழல் மாநாட்டு ஜெய்ப்பூர் பிரகடனம் கூறுகிறது. என் தோட்டத்தில் என்னு டைய மாட்டை எங்கு வேண்டுமானாலும் மேய்ப்பேன் என்பது எடப்பாடியின் புதிய அணுகுமுறை ஆகும். கடைமடை ஏரிகளும் நீர் நிலைகளும் கண்ணில் நீர் ததும்ப சீதையாக நிற்கின்றனர்.