கே.வி. என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் தோழர் கி. வரதராசன் அவர்களின் மரண செய்தி மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. அவருடன் நெருங்கி பழகிய தோழர்களுக்கு இந்த துயரத்திலிருந்து மீள்வது பெரிய கடினமாக இருக்கும். அவரது மறைவு கட்சிக்கு குறிப்பாக தமிழகத்திற்கு பெரும் இழப்பாகும். ஒரு சமூகப் போராளியாக, ஒரு சிறந்த கம்யூனிஸ்டாக, ஊழியர்களை உருவாக்கிய தலைவனாக, அந்தஊழியர்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்த கே.வி. அவர்களின் வாழ்வு பன்முகத்தன்மை கொண்டது ஆகும்.
உழைப்பால் உயர்ந்த தலைவர்
1970கள் வரை தமிழகத்தில் சுமார் 12 பாலிடெக்னிக் கல்லூரிகள்தான் இருந்தன. அவற்றில் ஒன்றான புகழ்பெற்ற சேஷசாயி கல்லூரியில் கே.வி. அவர்கள் சிவில் இஞ்சினியரிங் பிரிவில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுதேறினார். அப்பொழுது கை நிறைய ஊதியம் கொண்ட பொதுப்பணித் துறையில் வேலை கிடைத்தது. அத்தகைய வேலையை உதறிவிட்டுதான் 1971ஆம் ஆண்டு தோழர் கே.வி. அவர்கள் முழுநேர ஊழியர் ஆனார்.
அன்றைய திருச்சி மாவட்டம் என்பது கரூர்/அரியலூர்/பெரம்பலூர் ஆகியவையும் உள்ளடக்கியது ஆகும். திருச்சி நகரச் செயலாளராக திறம்பட பணியாற்றிய அவர் அவசரநிலை காலத்திற்கு பிறகு ஒன்றுபட்ட திருச்சி மாவட்டக் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் மாநிலக்குழு/ மாநில செயற்குழு/ மத்திய குழு/மத்திய செயற்குழு/ அரசியல் தலைமை குழு என படிப்படியாக உயர்ந்த நிலைக்கு சென்றார். எந்த பொறுப்பில் இருந்தாலும் அதில் திறம்படச் செயல்பட்டார்.
பி.எச்.இ.எல்./ போக்குவரத்து ஆகிய தொழிற்சங்கங்களிலும் செயலாற்றினார். விவசாயிகள் சங்கத்திலும் செயலாற்றினார். பிற்காலத்தில் விவசாயிகள் சங்கத்தின் மாநிலமற்றும் அகில இந்திய பொது செயலாளராக பணியாற்றினார். கிராமப்புற உழைப்பாளிகளை திரட்டாமல் கட்சி விரிவடைவதோ அல்லது புரட்சி வெல்வதோ சாத்தியமில்லை என்பதில் உறுதியாக இருந்தார்.அவர் உயர்பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது
அவருடைய கடுமையான உழைப்பின் காரணம்தான் என்பதை எவரும் மறுக்க இயலாது.
திருச்சியில் கட்சியை கட்டிய சிற்பி
அன்றைய ஒன்றுபட்ட மாவட்டத்தில் கட்சியை விரிவாக்கம் செய்ததிலும் உறுதிப்படுத்தியதிலும் தோழர் கே.வி. யின் பங்கு தீர்மானகரமானது ஆகும். தோழர்கள் பாப்பா உமாநாத்/ டி.கே.ரங்கராஜன்/ ஜி.ரத்தினவேலு மற்றும் பலர் கொண்ட கூட்டுத்தலைமைக்கு கே.வி. அவர்கள் மாவட்டச் செயலாளர் என்றமுறையில் தலைமைவகித்தார். இந்த கூட்டுத்தலைமையின் சீரிய முயற்சிகள் காரணமாக கட்சி வேகமாக விரிவடைந்தது எனில் மிகை அல்ல.
அன்றைய திருச்சி மாவட்டத்தில் சில முக்கியமான நீண்ட வர்க்க போராட்டங்கள் நடந்தன. சிம்கோ போராட்டம்/ கரூர் எல்.ஜி.பி. போராட்டம்/ புலியூர் சிமெண்ட் போராட்டம் ஆகியவை நீண்ட நாட்கள் நடந்த தொழிற்சங்க போராட்டங்களில் முக்கியமானவை. செந்துறை மற்றும் இலால்குடி விவசாய தொழிலாளர்கள் போராட்டங்களும் குறிப்பிடத்தக்கவை. இந்த போராட்டங்களில் களத்தில் பங்கேற்றது மட்டுமல்ல; அரசியல் வழிகாட்டல் அளித்ததில் தோழர் கே.வி.யின் பங்கு தீர்மானகரமானது. திருச்சிமாவட்டத்தின் அனைத்து கிளைகளும் இந்த போராட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வைப்பதில் இடைவிடாத முனைப்பை தோழர் கே.வி. வெளிப்படுத்தினார்.
கே.வி. அவர்கள் கட்சியின் விரிவாக்கத்திற்கு கூடுதல்அக்கறை காட்டினார். சிம்கோ போராட்டம் முடிவிற்கு வந்த பொழுது அதில் முன்னணியில் நின்ற பல தொழிலாளர்களின் பட்டியலை தயார் செய்து அவர்களை கட்சியில் இணைப்பதற்கு திட்டமிட்டு செயலாற்றினார். ஒவ்வொரு போராட்டத்திலும் அவர் இந்த அணுகுமுறையை வெளிப்படுத்தினார். போராட்டங்களின் முடிவில் கட்சி வளரவில்லை எனில் போராட்டங்களின் நோக்கம் என்ன எனும் கேள்வியை எழுப்புவது அவரது வழக்கம். புரட்சிக்காக கட்சியை நடத்துபவர்கள் என அடிக்கடி கூறுவார்.
தமிழகத்தின் தனித்தன்மையில் கவனம்
அகில இந்திய அளவிலான கட்சியின் கொள்கைகளில் உறுதியாக நின்று தோழர் கே.வி. செயலாற்றினார். அதே சமயம் திராவிட இயக்கம் மற்றும் சீர்திருத்த இயக்கங்களின் தாக்கம் காரணமாக தமிழக அரசியல் களம் விசேடமானது என அவர் நினைத்தார். இந்தச் சூழலுக்குஏற்றவாறு அரசியல் உத்திகள் தமிழகத்தில் இருக்க வேண்டும் என நம்பினார்.அய்யா வைகுண்டர் இயக்கம் குறித்து கே.வி. மிகப்பெரிய மதிப்பு கொண்டிருந்தார். அது பற்றி ஒரு நூல் எழுதவும் திட்டமிட்டார். அதற்கான விவரங்களையும் சேகரித்தார். ஆனால் அவர் கட்சியின் மத்திய தலைமையகத்திற்கு சென்றுவிட்டதால் இந்த விருப்பம் நிறைவேறவில்லை.
தந்தை பெரியார் மீதும் கே.வி மிகப்பெரிய மரியாதை கொண்டிருந்தார். 1980களில் பெரியார் ஒளி-ஒலி நிகழ்ச்சிகள் திருச்சியில் நடந்தன. நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் பல முறை அந்த நிகழ்ச்சிக்கு சென்று மெய்மறந்து இரசித்தார். பொதுவாழ்வில் ஒரு மனிதன் தன் இறுதி நிமிடம் வரை வாழ்ந்து காட்டியதில் பெரியார் நமக்கு ஒரு முன்மாதிரி என அடிக்கடி கூறுவார். பெரியாரின் பணி தமிழகத்தில் உருவாக்கிய தாக்கம் குறித்து இன்னும் ஆழமாக ஆய்வு செய்வது கட்சியை விரிவாக்கம் செய்ய உதவும் என நம்பினார்.
பன்முகத்தன்மை
சிலர் சிறந்த பேச்சாளர்களாக இருப்பார்கள்; சிலர்சிறந்த மார்க்சிய வகுப்பு எடுப்பதில் திறமையை வெளிப்படுத்துவார்கள்; சிலர் கட்சி அமைப்பை வழிநடத்துவதில் சிறந்தவர்களாக இருப்பார்கள். ஆனால்கே.வி. கிளர்ச்சி/பிரச்சாரம்/ ஸ்தாபனம் ஆகிய மூன்று பணிகளிலும் அசாத்திய திறமையை வெளிப்படுத்தினார். ஒவ்வொரு கம்யூனிஸ்டும் பன்முகத்தன்மை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். கலை இலக்கியப் பிரிவிலும் கூடுதல் கவனம் செலுத்தினார்.
அவருடன் நெருங்கிப் பழகிய தோழர்கள் அதிகம் கற்றுக் கொண்டது ஸ்தாபன பணிகள்தான் எனில் மிகை அல்ல. தோழர்களின் திறமையை ஒருமுகப்படுத்துவதில் திறமையை வெளிப்படுத்தினார். கமிட்டி கூட்டங்களில் வெளிவரும் முரண்பட்ட கருத்துகளை ஒருங்கிணைத்து அவர் வழங்கும் தொகுப்புரைகள் அனைவரும் ஏற்றுகொள்ளும்வகையில் அமையும். கட்சி கமிட்டியின் செயலாளர் எந்த மட்டத்தில் இருந்தாலும் விவாதங்களை கூர்மையாக கவனித்து பொருத்தமாக தொகுப்புரை வழங்கவேண்டும் எனவும் அவ்வாறு தொகுப்புரை வழங்குவதில் அகநிலை கண்ணோட்டம் வெளிப்படுத்தப்படக்கூடாது எனவும் அறிவுரை வழங்குவார். அதற்கு முன்மாதிரியாகவும் திகழ்ந்தார். அவரது கூர்மையான, ஆனால் நகைச்சுவையான வாதங்களும் பழமொழிகளை அவர் கையாண்ட விதமும் அனேகமாக அவரை தலைசிறந்த தொகுப்புரை வழங்குபவராக நிலை நிறுத்தியது எனில் மிகை அல்ல.
கட்சிக் கூட்டங்களுக்காக கிராமப்புறங்களுக்கு செல்லும் பொழுது கமிட்டி கூட்டத்தை நடத்திவிட்டு உடனேதிரும்பமாட்டார். இரண்டு அல்லது மூன்று நாட்கள் அங்கேயே தங்குவார். கிளைகள் மற்றும் விவசாயிகள் சங்க பணிகளை செய்வதில் தோழர்களுக்கு வழிகாட்டுவார். ஒன்றுபட்ட திருச்சி மாவட்டத்தில் அவரது கால்படாத கிராமமே இல்லை எனலாம்.
தோழர்களிடம் அவரது பழக்கம் என்பது மிகவும் நெருக்கமாக இருந்தது. அவருடன் பழகும் எவருக்கும் அவர் தலைவர் எனும் எண்ணம் தோன்றாது. நம்மில் ஒருவர் எனும் உணர்வுதான் இருக்கும். இரவுகளில் சுவர் எழுத்து எழுதும் பொழுதும் சுவரொட்டி ஒட்டும் பொழுதும் ஊழியர்களுடன் அவரும் இரவு முழுவதும் இருப்பார். சில சமயங்களில் இரவில் பணிபுரியும் தோழர்களுக்கு கடையிலிருந்து தேநீர் வாங்கி வந்து அவர் கொடுத்த உதாரணங்களும் உண்டு. அவரிடம் எந்த தோழரும் எந்த பிரச்சனை குறித்தும் எப்பொழுது வேண்டுமானாலும் விவாதிக்கலாம். அரசியல்/ சித்தாந்தம்/ ஸ்தாபனம்/ கலை இலக்கியம்/ திரைப்படங்கள்/ தனிப்பட்ட குடும்பப் பிரச்சனைகள்/ காதல் என அனைத்தையும் அவருடன் தோழர்கள் விவாதிப்பார்கள். மாவட்டச் செயலாளர் என்ற முறையில் அவரது அறை என்றும் திறந்தே இருக்கும். எவருக்கும் எந்த தடையும் இருந்தது இல்லை.
கமிட்டிக்குள் தோழர்களை விமர்சிக்கும் அதே நேரத்தில்கமிட்டிக்கு வெளியேயும் அவர்களுடன் விவாதிப்பார். தவறான அணுகுமுறையை களைய முயல்வார். தனது கருத்து தவறானது எனில் அதனை மாற்றிக்கொள்ளத் தயங்கியது இல்லை. முழு நேர ஊழியர்களிடம் அர்ப்பணிப்பை எதிர்பார்ப்பார். அதே சமயம் அவர்களின் பொருளாதார தேவைகளை முடிந்த அளவு தீர்க்க முயல்வார். மாத ஊதியம் வாங்கும் கட்சி உறுப்பினர்கள் தீபாவளி அல்லது பொங்கல் பண்டிகைகளின் பொழுதுதமது குடும்பத்திற்கு துணி வாங்கும் பொழுது ஒரு முழுநேர ஊழியருக்காவது கூடுதல் துணி வாங்குமாறு கூறுவார். அப்படி வாங்கப்படும் துணிகள் மாவட்ட மையத்திலிருந்து முழுநேர ஊழியர்களின் குடும்பங்களுக்கு தருவதை உத்தரவாதம் செய்தார். 1980ஆம் ஆண்டிலேயே முழுநேர ஊழியர்களின் ஊதியத்தை மாவட்ட அளவில் மையப்படுத்தி அமலாக்கிய மாவட்டம் அனேகமாக திருச்சியாகத்தான் இருக்கும். அதன் மூலம் கிராமப்புற ஊழியர்களுக்கு ஊதியம் செல்வது உத்தரவாதப்படுத்தப்பட்டது.
இத்தகைய பன்முகத்தன்மை கொண்ட தோழர் கே.வி.யின் மறைவு பெரும் இழப்பு ஆகும். மார்க்சிய- லெனினிய கொள்கைகளுக்காக உழைப்பதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வலுவாகக் கட்டுவதும்தான் அவரின்மறைவுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்க முடியும்.
===அ.அன்வர் உசேன்===