tamilnadu

img

சாதியை வைத்து யாரும் முன்னேறிவிட முடியாதாம்!

நாக்பூர்:
சாதியை முன்னிறுத்தி யாரும் சாதித்து விட முடியாது என்றும், இடஒதுக்கீட்டால் மட்டுமே ஒரு சமூகம் முன்னேறிவிடும் என்பது தவறான கருத்து என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேசியுள்ளார்.“இதுவரை அரசியலில் சாதித்தவர்கள் யாரும் சாதியை முன்னிறுத்தி சாதிக்கவில்லை. ஜார்ஜ் பெர்னாண்டஸ் கிறிஸ்தவர். அவர் எந்த சாதியையும் சாராதவர். ஆனால் பெரிய இடத்தை அடையவில்லையா? இந்திரா காந்தி சாதியை வைத்து ஆட்சிக்கு வரவில்லையே. இப்போதுகூட ராஜஸ்தான் முதல்வராக இருக்கும் அசோக் கெலாட் அனைத்து சாதி மக்களின் ஆதரவோடுதான் ஆட்சியமைத்திருக்கிறார்.

ஒருகாலத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என முழங்கப்பட்டது. நானும் ‘ஆமாம்’ என்று ஆமோதித்தேன். ஆனால், இந்திரா காந்தி, வசுந்தர ராஜே, சுஷ்மா ஸ்வராஜ் எல்லாம் எப்படி இட ஒதுக்கீடு இல்லாமல் முன்னேறினர்? என்ற கேள்வியைக் கேட்காமல் எப்போதும் இருந்ததில்லை. இடஒதுக்கீடு அளிப்பதால் மட்டுமே ஒரு சமூகம் முன்னேறிவிடும் எனக் கூறுவது தவறு.” என்று கட்காரி கூறியுள்ளார். இந்தியாவில் சாதியின் அடிப்படையிலேயே குறிப்பிட்ட சமூகங்கள் இப்போது வரை ஆட்சி அதிகாரம் செலுத்தி வருவதையும், மற்ற பிரிவினர்தாழ்த்தப்பட்டு, தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுவதையும், சமூக, பொருளாதார ரீதியில் ஒடுக்கி வைக்கப்பட்டிருப்பதையும் சாமர்த்தியமாக மறைத்து, கட்காரி இவ்வாறு நீட்டி முழக்கியுள்ளார்.