பீகார் மாநிலத்தில், பெகுசராய் தொகுதியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கன்னையா குமார் போட்டியிடுகிறார். இவருக்காகக் கடுமையான முறையில் தேர்தல் வேலைகளைப் பார்த்த கட்சி ஊழியர், ஃபாகோ டண்டி, என்பவர் பாஜக குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டிருப்பதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
பெகுசராய் தொகுதியில் பாஜக குண்டர்கள், கிரிமினல்களுடன் சேர்ந்துகொண்டு வேட்பாளர் கன்னையா குமாருக்காக வேலை செய்த கட்சி ஊழியர் ஃபாகோ டண்டி என்பவரை இழுத்துச் சென்று தாக்கி, கொன்றுள்ளார்கள்.
ஃபாகோ டண்டி கிரிமினல்களால் கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்தை உடனடியாகக் காவல்துறையினரிடம் தெரிவித்திருந்தும், காவல்துறையினர் அவரைக் காப்பாற்றிட எவ்வித நடவடிக்கையும் எடுத்திடவில்லை.
நிதிஷ் குமார் அரசாங்கம், ஃபாகோ டண்டியைக் கொன்ற கிரிமினல்களை உடனடியாகக் கைது செய்திட வேண்டும் என்றும், இறந்த ஃபாகோ டண்டி குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
(ந.நி.)