புதிய பாடத்திட்டத்தின் படி உருவான பன்னிரெண்டாம் வகுப்பு தமிழ் பாடநூலின் அட்டைப்படத்தில்
இடம் பெற்ற மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் தலைப்பாகை காவி நிறத்திலிருந்ததால் சர்ச்சைக்கு உள்ளானது. அப்படத்தில் மாற்றமோ திருத்தமோ நிபுணர் குழுவே முடிவு செய்யும் என
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா.வளர்மதி தெரிவித்துள்ளார்.
காவி என்றொரு நிறம் சங்க இலக்கியத்தில் உண்டா, காவி என்பதற்கு தமிழ்ப்பெயர்தான் என்ன? காவி - Saffron. இச்சொல், Za’feran (பாரசீகம்) - Safranum ( இலத்தீன் ) - Safran (பிரெஞ்சு) வழியில் ஆங்கிலத்தில் Saffron எனத் திரிந்திருக்கிறது.
மஞ்சள் என்னும் பொருள் தரும் அஸ்பார் asfar என்னும் சொல்லில் இருந்து தோற்றம் பெற்றது சேஃப்ரன் (Saffron) என்கிறது ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் எழுதிய ‘The Book of General Ignorance’ என்கிற நூல். (தமிழில் - பொதுவான அறியாமைகள்: த.க.பாலகிருட்டினன்.)
Saffron கிரேக்க இதிகாசத்தில் முக்கியமான நிறமாக இருந்திருக்கிறது. ஈயாஸ் என்கிற தெய்வத்தின் நிறம் மற்றும் ரோமில் அரோரா தெய்வத்தின் நிறம் காவி.
மாவீரன் அலெக்ஸாண்டர் தனது தலைமுடி காவி வண்ணத்தில் அழகாக விளங்கவேண்டும் என்பதற்காக குங்குமப்பூ சாற்றில் தனது தலை மயிரை கழுவியிருக்கிறார். ரோமாபுரி ஆட்சிக்காலத்தில் காவி என்பது அரசர்களுக்குரிய அதிகார நிறம். குங்குமப்பூவின் ஆங்கிலப் பெயர் - SAFFRON. இதல் அறிவியல் பெயர் - SAFFRON CROCUS. முற்காலத்தில் குங்குமப்பூவின் சந்தை - பிரிட்டன். saffron walden , அந்நாட்டின் முக்கியமான ஒரு நகரம்.
நிறக்கோட்பாட்டின் படி RGB (Red, Green, Blue) தனி நிறங்கள்; CMYK (Cyan, Magenta, Yellow, Key) கலவை நிறங்கள். ஈர்நிறக் கலவை - உதாரணம் பழுப்பு, ஊதா, மஞ்சள்; மூநிறக் கலவை - உதாரணம் வெண்மை, காக்கி, காவி போன்றவை - காவி (Saffron) என்கிற நிறம் RGBயின் படி - சிவப்பு:பச்சை:நீலம் - விழுக்காடு முறையே 100:60:40 என்பதால் ஆனது. CMYK கூட்டுக்கலவையின் படி - C:M:Y:K (0:40:80:0)
கர்ப்பிணிப் பெண்கள் பாலில் கலந்து சாப்பிடும் குங்குமப்பூ (மகரந்தம், சூல்முடி) காவி நிறமுடையது. மராட்டிய பேரரசின் ( 1674 - 1818) அதிகாரப் பூர்வ கொடி காவி நிறத்தினலானது. இக்கொடிதான் இன்று இந்து கோவில்களில் பறக்கவிடப்படுகிறது. இந்தியில் இக்கொடி Bhagwa Dhwaj என்றும் Kesariya Pataka என்றும் அழைக்கப்படுகிறது. கேசரியா என்றால் காவிமயத்தானவர்கள் என்று பொருள்.
சுதந்திரப் போராட்டக் காலத்தில் பால கங்காதர திலகர் மராட்டிய மொழியில் ஒரு நாளிதழ் நடத்தினார். அதன் பெயர் ‘கேசரி’. இதற்கு சமஸ்கிருதத்தில் ‘சிங்கம்’ என்றும் மராட்டி மற்றும் இந்தியில் ‘காவி’ என்றும் பொருள்.
தமிழக சமையலில் கேசரி பவுடர் என்றால் காவி நிற மாவைக் குறிக்கும். இங்கு கேசரி என்பது மராட்டிய சொல்.
இந்தியாவில் காவி அரசியல் என்பது அபினவ் பாரத் (இளைய பாரதம்) -1904 லிருந்து தொடங்குகிறது. துவங்கி வைத்தவர் வினாயக் தாமோதர் சாவர்க்கர்.
காவி என்பதற்கு க்ரியா தமிழ் அகராதி செங்கல் நிறம், துறவிகள் அணியும் ஆடை, பழுப்பு அல்லது மங்கிய சிவப்பு - Saffron அல்லது yellowish brown என விளக்கம் தந்துள்ளது.
காவி என்பதன் பொதுவான குறியீடு - குங்குமப்பூ(தமிழ்). இது சஃப்ரன் (ஆங்கிலம்), கும்குமா (சமஸ்கிருதம்), குகமபூ (மலையாளம்), கும்கும்பூவ (தெலுங்கு), கேசர் (இந்தி) என்பதாக அழைக்கலாகிறது.
சரி, சங்க இலக்கியத்தில் காவிக் குறித்த விளக்கம் இருக்கிறதா ?
குறிஞ்சிப்பாட்டில் கபிலர் 99 பூக்களைப் பற்றி பாடியுள்ளார். அதில் இலவம்பூ, ஞாழல், பலாசம் மூன்றும் காவியுடன் தொடர்புடைய மலர்கள்.
ஞாழல் என்பது குங்குமப்பூ என்பதாக தமிழாய்வாளர்கள் சொன்னாலும் தமிழ்நாட்டின் நெய்தல் நில பூவான இது தங்க நிற முடையது. பலாசம் என்கிற கல்யாண முருங்கை இளஞ்சிவப்பானது. இலவம்பூ ஓரளவு காவி நிறத்துடன் ஒத்தது. இந்நிறத்தை சங்க இலக்கியம் துவரி என்கிறது.
‘துவரி கனிவாய் இளமங்கை’
துவரி யாடையர் மட்டையர் சமண் தொண்டர்கள் (நாலாயிர திவ்விய பிரபந்தம்).
அந்துவராடைப் பொதுவனொடு (கலித்தொகை).
துவர் - சிவப்பு ; துவரி (Salmon colour) - காவி ; துவராடை - காவி ஆடை ( தமிழ் லிப்கோ அகராதி)
காவி என்பது மலபார் மொழிச் சொல். இதற்கு நிகரான தமிழ்ச்சொல் துவரி எனச் சொல்லலாம்...