திருவள்ளூர் மே 5 - பீடி, விசைத்தறி, கைத்தறி, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கட்சியின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் எஸ். கோபால் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருவள்ளூர் ஈக்காடு, எறையூர், மெய்யூர், ஊத்துக்கோட்டை, முஸ்லிம் நகர்(பொன்னேரி) போன்ற பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பீடி சுற்றும் தொழிலை நம்பி வாழ்கின்றனர். 15 நாட்களுக்கு ஒருமுறை இவர்களிடமிருந்து நான்கு சப் காண்ட்ராக்டர்கள் பீடியைப் பெற்று வேலூர் செங்கல்பட்டு பகுதிகளுக்கு எடுத்து செல்கின்றனர். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் பீடி சுற்றும் தொழில் செய்ய இயலவில்லை. ஒரு சில இடங்களில் செய்யப்படும் பீடியும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படாததால் ஆங்காங்கே தேங்கியுள்ளது. இதனால் தொழிலாளர்கள் கூலியை கூட பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது பீடியை வேலூருக்கு எடுத்து செல்ல 2 கான்ட்ராக்டர்களுக்கு மட்மே அனுமதி கொடுத்துள்ளனர். செங்கல்பட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதி வழங்கவில்லை. இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட பீடி தொழிலாளர் சங்கத்தின் சார்பிலும் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் சில தளர்வுகள் ஏற்படுத்தி தொழிற்சாலைகள், கடைகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது போல் பீடியை வேலூர், செங்கல்பட்டு போன்ற பகுதிகளுக்கு எடுத்துச் சொல்ல அனுமதி வழங்க வேண்டும். பீடி தொழிலாளர்களுக்கும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.