தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரானா வைரஸ் சிகிச்சைக்காக 1200 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாவது :-
கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க, பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியில் வருவதை தவிர்ப்பதற்கு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநில மற்றும் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நகரம், 29-ஆவது வார்டு மாதப்பா தெருவில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு யாரும் செல்லாத வகையிலும், பாதிக்கப்பட்டவரின் வீட்டிலிருந்து யாரும் வெளியே வராத வகையிலும், வீட்டிற்குள் யாரும் செல்லாத வகையிலும், தெருவின் இரு வாயில்களும் காவல் துறை மூலமாக தடை செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவரின் வீடு அமைந்துள்ள தெருவில் உள்ள 62 வீடுகளுக்கும் நகராட்சி மூலமாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுள்ளது.
பாதிக்கப்பட்டவரின் வீட்டினை மையமாக வைத்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவு குறையாமல் சுகாதாரப் பணியாளர்கள், நகராட்சி பணியாளர்கள், வருவாய் துறை பணியாளர்கள் ஆகியோர் கொண்டு 50 வீடுகளுக்கு ஒரு குழு அமைக்கப்பட்டு 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கும் மற்றும் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கும் நோய் அறிகுறிகள் உள்ளதா என கள ஆய்வு மேற்கொள்ளவும், அவர்களுக்குத் தேவையான கையுறை, முகக்கவசம் வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 22 நபர்கள் தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1,200 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு தவிர்க்க முடியாத காரணங்களுக்காக மாவட்ட எல்லையை தாண்டி செல்ல வேண்டியவர்கள் coronatnj@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
மேலும், கொரோனா நோய் முன்னெச்சரிக்கை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு 9345336838(வாட்ஸ்அப்), 04362 - 230121, 1077(கட்டுப்பாட்டு அறை) ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.