பெங்களூரு:
பாலியல் புகார் மற்றும் சிறுமிகள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள போலிச்சாமியார் நித்தியானந்தாவிற்கு சொந்தமாக இந்தியாவில் உள்ள அனைத்து சொத்துக்களின் பட்டியலையும், 2 வாரங்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று கர்நாடகமாநில சிஐடி காவல்துறையினருக்கு ராம்நகர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நித்தியானந்தாவிற்கு எதிரான பாலியல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதி கூறுகையில், நீதிமன்றம் உத்தரவிட்டும் பலவாரங்களாக நேரில் ஆஜராகாத நித்யானந்தா மற்றும் அவர் தரப்பினருக்கு, இனியும் விலக்கு அளிக்க முடியாது. தொடர்ந்து நித்தியானந்தா மட்டுமின்றி, அவருக்கு ஜாமீன் மற்றும் அடைக்கலம் கொடுத்த அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்என்று சிஐடி காவல்துறையினருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.கர்நாடகா சிஐடி காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நித்தியானந்தாவை உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் கைது செய்து ஆஜர் படுத்த ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வரும் 23 ஆம் தேதியன்று நித்தியானந்தா ஆஜராகாவிட்டால் அவரது சொத்துக்கள் முடக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.