எஸ்.எப்.ஐ கூட்டணி அமோக வெற்றி
புதுச்சேரி,செப்.4- புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் பேரவைத் தேர்தலில் இந்திய மாணவர் சங்கம் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் மாணவர் பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டு இறுதியில் நடைபெற்றுவரும், இத்தேர்தலை பாஜக -வைசேர்ந்த மாணவர் அமைப்பான ஏபிவிபி யின் நிர்பந்தத்தால் ஆகஸ்ட் மாதம் 28ல் நடைபெற்றது. அந்தமான், மாஹே, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிமாணவர்கள் என 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்தனர்.
தலைவர்,செயலாளர் என மொத்தம் 11 பதவிகளுக்கு நிர்வாகிகளை தேர்வு செய்யும் இந்ததேர்தலில், இந்திய மாணவர் சங்கம்(எஸ்.எப்ஐ), அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (ஏஐஎஸ்எஃப்), அம்பேத்கர்-பெரியார் மாணவர் அமைப்பு ஆகிய சங்கங்கள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதேபோல் தேசிய மாணவர் காங்கிரஸ் (என்எஸ்யுசி) ,இதர பிற்படுத்தப்பட்ட மாணவர் அணி என்ற போர்வையில் மறைமுகமாக பாஜக மாணவர் பிரிவான ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவர்களின் ஆதரவோடு எதிராக போட்டியிட்டனர். மொத்தம் உள்ள 10 இடங்களில் தலைவர்,செயலாளர் என அனைத்து இடங்களிலும் இந்திய மாணவர் சங்கம் தலைமையிலான அணியின் வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றனர். ஒரு இடத்தை மட்டும் சுயோட்சையாக போட்டியிட்டவர் வெற்றி பெற்றார்.
பரிட்சை யாதவ் தலைவராகவும், துணைத் தலைவராக (பெண்) மமதா, துணைச் செயலாளராக குரியாகோஸ் ஆகியோர் இந்திய மாணவர் சங்கம் சார்பிலும், திமுகவின் அம்பேத்கர்-பெரியார் மாணவர் அமைப்பின் சார்பாக போட்டியிட்ட குரல் அன்பன் பொதுச்செயலாளராகவும், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் துணைத் தலைவர் பொறுப்பிற்கு போட்டியிட்ட குமார், செயற்குழு உறுப்பினர்களாக ரூபம் ஹசாரிக்கா, அல் ரிஷால் ஷாநவாஸ், ரித்தீஷ், சுவேதா, அனகா, தனவர்தினி ஆகியோர் மாணவர்களின் பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவுடன் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அனைத்து மாணவர் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என உறுதி ஏற்றனர். மேலும் பல்கலைக்கழக வளாகத்தில் சாதி மத இன மொழி வேறுபாடுகள் இன்றி தொடர்ந்து ஒற்றுமையோடு பணியாற்றுவோம் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர். (ந.நி)