ஹைட்ரோ கார்பன் திட்டம்
சென்னை,ஜன. 20- ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பிற்கு எதிராக ஒன்றுபட்டு போராடுவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கிணறு தோண்ட சுற்றுச்சூழல் அனுமதி பெறவேண்டியதில்லை என்றும் இது சம்பந்தமாக மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டியதில்லை எனவும் மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு தமிழக மக்களையும் குறிப்பாக டெல்டா விவசாயிகளையும் மனம் பதற வைத்துள்ளது. மோடி அரசு, பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு முன் அனுமதி தேவையில்லை என கூறியிருப்பது டெல்டா மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும். ஏற்கனவே, ஹைட்ரோ கார்பனுக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியில் மத்திய அரசு இறங்கியபோது விவசாயிகள் சங்கங்களும், சிபிஐ(எம்) உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், ஜனநாயக இயக்கங்களும் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்த காரணத்தினால் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன.
தற்போதை அறிவிப்பினால், ஹைட்ரோ கார்பன் திட்டம் டெல்டா விவசாயிகளை கடுமையாக பாதிக்கும். அவர்களது வாழ்வாதாரங்களை முற்றிலும் நாசப்படுத்திவிடும். இதனால் தான் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், ஜனநாயக இயக்கங்களும் இதனை அனுமதிக்கக்கூடாது என டெல்டா விவசாயிகளுடன் இணைந்து குரல் கொடுத்து வருகின்றன. தமிழ்நாட்டின் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியில்லை என சட்டப்பேரவையில் உறுதியளித்த அதிமுக அரசு, மத்திய அரசின் அறிவிப்பிற்குப் பிறகு மௌனம் சாதிப்பது டெல்டா விவசாயிகளை கடுமையாக ஆத்திரமடைய வைத்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசு இத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மை யாக கண்டிக்கிறது. மத்திய அரசு இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென்றும் இதற்கான நிர்ப்பந்தத்தை மத்திய அரசிற்கு அதிமுக அரசு கொடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்து கிறது. தமிழக மக்களையும், விவசாயிகளையும் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த முனையும் மத்திய அரசின் அனைத்து முயற்சி களுக்கும் எதிராக இணைந்து போராட முன்வருமாறு அனைத்து பகுதி மக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவி அழைக்கிறது.