விருதுநகர், ஜன.1- தனியார் மருத்துவமனையில் வெறும் 720 கிராம் எடையில் பிறந்த குழந்தையை தாயின் துணையின்றி விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் 830 கிராமாக உயர்த்தி சாதனை படைத்தனர். விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ளது எட்டக்காபட்டி. இப்பகுதியைச் சேர்ந்தவர் பால முருகன்(24). இவரது மனைவி காயத்ரி (23). இவர்களுக்கு கடந்த 2019 நவ.,18 அன்று தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தை வெறும் 29 வாரத்திலேயே பிறந்தது. இதனால், வெறும் 720 கிராம் மட்டுமே இருந்தது. இது சராசரி எடையை விட மிகவும் குறைவாகும். இந்த தகவல் விருதுநகர் அரசு தலைமை மருத்துவ மனைக்கு கிடைத்தது. இதையடுத்து, இதை சவாலாக எடுத்துக் கொண்டு அரசு மருத்துவர்கள், எடை குறைவாக பிறந்த அக்குழந்தையை விருதுநகர் அரசு தலைமை மருத்துவ மனையில் உள்ள பிரசவ பிரிவில் அனுமதிக்க கேட்டுக் கொண்டனர். இந்நிலையில், குழந்தையின் தாய் காயத்ரிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனவே, அவர் தனது தாய் வீட்டிற்கு சென்றார்., குழந்தை விருதுநகர் தலைமை மருத்துவ மனையில் உள்ள இன்குபேட்டரில் வைத்து பாதுகாக்கப் பட்டது. மேலும், அங்குள்ள தாய்ப்பால் வங்கி மூலம் குழந்தைக்கு தாய்ப்பால் வழங்கப்பட்டது. இதில் சிறிது, சிறிதாக முன்னேற்றம் ஏற்பட்டது. இந்தநிலையில், 43 வது நாளன்று குழந்தையின் எடையை அளக்க மருத்துவர்கள் ஏற்பாடு செய்தனர். அதில் குழந்தையின் எடையானது 830 கிராமாக உயர்ந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அரசு மருத்துவமனை மருத்துவர்கள், பெற்றோர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். இதுகுறித்து குழந்தைகள் நல மருத்துவர் ஜவஹர் கூறியதாவது : வெறும் 720 கிராம் எடையில் பிறந்த பெண் குழந்தை 43 நாட்களில் 830 கிராமாக எடை அதிகரித்துள்ளது. இதில் தாய்ப்பால் வங்கியின் பங்கு முக்கியமானதாக கருதப் படுகிறது. மேலும், மருத்துவமனையில் சிறந்த முறையில் பராமரித்த மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்க ளின் சேவை மிகவும் சிறப்பு மிக்கதாகும் என தெரிவித்தார்.