tamilnadu

img

மார்ட்டின் நிறுவன காசாளரின் மரணம் கொலைதான்

சென்னை,ஜூலை 30- லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனத்தைச் சேர்ந்த காசாளரின் மரணம் கொலையே என்று இரண்டாவது பிரேதப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், உருமாண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி.  தொழிலதிபர் மார்ட்டின் நிறுவன அலுவலகத்தில் காசாளராகப் பணியாற்றி வந்தார். அந்நிறுவனத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி வருமானவரி சோதனை மேற்கொள்ளப்பட்டது.  இதுதொடர்பாக பழனிசாமியிடமும் விசாரிக்கப்பட்டது.  இந்நிலையில்  பழனிசாமி மே 3 ஆம் தேதி காரமடை பகுதியில் உள்ள குளத்தில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.  தனது தந்தை மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பழனிசாமியின் மகன் ரோகின்குமார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் வழக்கை விசாரித்த கோவை மாவட்ட நீதித் துறை நடுவர் , பழனிசாமியின் சடலத்தை மறு பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து 3 பேர் அடங்கிய மருத்துவர் குழுவினர், பழனிசாமியின் சடலத்தை மே 28 இல் மறு பிரேதப் பரிசோதனை செய்தனர். இதன் முடிவுகள் வரும்வரை பழனிசாமியின் உடலைப் பதப்படுத்தி வைக்க வேண்டும் என்றும், அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்றும் அவரது மனைவி, மகன்கள் மற்றும் உறவினர்கள் தெரிவித்து வந்தனர்.  இந்நிலையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவன காசாளரின் மரணம் கொலையே என இரண்டாவது பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.