tamilnadu

img

லட்சுமி விலாஸ் வங்கி நெருக்கடி - தீர்வு என்ன? 

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதில் மத்திய பாஜக கூட்டணி அரசுதீவிரம் காட்டி வருவது எந்தளவுக்கு ஆபத்தானபோக்கு என்பதை தனியார் வங்கியான லட்சுமி விலாஸ் வங்கி (எல்விபி) நெருக்கடியில் சிக்கியுள்ளது உணர்த்துகிறது. 
அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் ரூ.25ஆயிரத்திற்கும் மேல் தங்களது கணக்கிலிருந்து எடுக்கக்கூடாது என்றும், தேவையெனில் அனுமதி பெற்றபிறகு குறிப்பிட்ட அளவு தொகையை மட்டுமே எடுக்க வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளதோடு அந்த வங்கியின் வர்த்தக நடவடிக்கைகளுக்கும் ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. 

94 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அந்தவங்கி 16 மாநிலங்களிலும் 3 யூனியன் பிரதேசங்களிலும் 563 கிளைகளுடன் விரிந்து பரந்து வளர்ந்திருந்தது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வகை தொகையின்றி கடன் வழங்கிய நிலையில்அந்த நிறுவனங்கள் கடனை திரும்பச் செலுத்தாமல் ஏப்பம் விட்டதாலும், திறமையற்ற நிர்வாகத்தாலும் இந்த நெருக்கடி ஏற்பட்டதாகவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.வாடிக்கையாளர்கள் எந்த வகையிலும் இதற்கு பொறுப்பல்ல; ஆனால் தங்களது முதலீடு திரும்ப கிடைக்குமா என்கிற பேரச்சத்தின் பிடியில் அவர்கள் சிக்கியுள்ளனர். ஏற்கெனவேஎஸ் வங்கி இதேபோல நெருக்கடியில் சிக்கியது. வங்கித்துறையை முற்றிலும் தனியார்மயமாக்கினால்தான் சிறப்பான சேவை கிடைக்கும் என்று மத்திய ஆட்சியாளர்கள் உருவாக்கி வரும்மாயையை இது கலைத்துவிட்டது.வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும்,சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்ட டிபிஎஸ் என்ற பன்னாட்டு வங்கியுடன் லட்சுமி விலாஸ் வங்கியை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அந்த வங்கிக்கு 33 கிளைகள் மட்டுமே உள்ளன. விரிந்து பரந்துள்ள எல்விபி வங்கியை அதனுடன் இணைப்பதால் டிபிஎஸ் வங்கி தன்னுடைய சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திக் கொள்ளுமேயன்றி எல்விபியில் பணியாற்றி வரும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் பணி பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.இதற்கு மாறாக ஏதேனும் ஒரு பொதுத்துறை வங்கியுடன் எல்விபியை இணைப்பதே பொருத்தமாக இருக்கும் என்று இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். 

பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள்நெருக்கடியில் சிக்கும் போது, கடன் வாங்கிவிட்டு செலுத்தாத கார்ப்பரேட் மற்றும் பெரும் நிறுவனங்கள் எளிதாக தப்பிவிடுகின்றன. பாதிக்கப்படுவது சாதாரண வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள்தான். எனவே கடனை திருப்பிச் செலுத்தாதகார்ப்பரேட் நிறுவனங்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்து கடன் தொகையை வசூலிக்கவேண்டும். தனியார் வங்கிகளின் செயல்பாடு குறித்து கடுமையான கண்காணிப்பு  அவசியமாகும். தனியார் வங்கிகளில் ஏற்படும் நெருக்கடியைபயன்படுத்தி மேலும் தனியார்மயத்தை ஊக்குவிப்பது ஆபத்தான போக்காகும்.