2006 வன உரிமை பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படும் மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
2006ஐ வன உரிமை பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படும் மத்திய பாஜக மோடி அரசை கண்டித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்களன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய பாஜக மோடி அரசு 2006ஐ வன உரிமை பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்து பழைய வனப்பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. இதில் திருத்தம் செய்யப்பட்டால் 2006ஐ வன உரிமை சட்டத்திற்கும், மலைவாழ் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும். இந்த சட்ட திருத்தத்தால் மலைவாழ் மக்கள் வன நிலங்களில் இருந்து வெளியேற்றப் படுவதோடு வன நிலங்களில் கொடுக்கப்பட்ட பட்டாக்கள் ரத்து செய்யப்படும் நிலை ஏற்படும். எனவே மலைவாழ் மக்களுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசை கண்டித்தும் 2006ஐ வன உரிமை பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய கூடாது என்று வலியுறுத்தியும், வன உரிமை சட்டப்படி பட்டா கேட்டு விண்ணப்பம் செய்துள்ள அனைவருக்கும் நில அளவை செய்து பட்டா வழங்க வேண்டும்; நில அளவை என்ற பெயரில் மலைவாழ் மக்களிடம் பணம் வாங்கும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன்ஒருபகுதியாக சேலம் மாவட்டம், ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை மலைவாழ் மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாநிலப் பொருளாளர் எ.பொன்னுசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, வி.சின்னமணி, விவசாய சங்க மாவட்ட பொருளாளர் எ.அன்பழகன் மற்றும் பெண்கள் உள்பட 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஆத்தூர் கோட்டாட்சியர் அருளிடம் மனு அளித்தனர்.