tamilnadu

img

எளியது ஆயினும் வலியது கண்டாய் - சு.பொ.அகத்தியலிங்கம்

கடைசி பெஞ்ச்
இளையோருக்கான கவிதைகள்
ஆசிரியர் : ந.பெரியசாமி,
வெளியீடு : ஓங்கில் கூட்டம், 
தொடர்புக்கு : 044 24232424, 24332924,24356935
பக்கங்கள் : 32, விலை : ரூ.30/

‘‘இளையவர்களுக்கான கவிதைகள்’’ என அட்டையிலேயே தெளிவாக அச்சிட்டுவிட்டு, அதனை இந்த முதியவரிடம் ஏன் கொடுத்தார் தோழர் ந.பெரியசாமி? இந்த முதியவருக்குள்ளும் இன்னும் ஓர் இளைஞர் இருப்பாரென நம்பி இருப்பாரோ? அவர் நம்பிக்கையை வீணாக்கலாமோ? நானும் கவிதைகளுக்குள் மூழ்கினேன். பரந்த வாசிப்பும் கூர்த்த பார்வையும் கொண்டவர் ந.பெரியசாமி என்பதை அவரின் ‘‘மொழியின் நிழல்’’ உட்பட இவரின் முந்தைய ஐந்து நூல்களும் சொல்லும். எனவே எதிர்பார்ப்புடன் தான் உள் நுழைந்தேன். ஏமாற்றவில்லை.  ‘‘மாம்பழக் கொட்டையினுள் இருக்கும் வண்டாக மனதுக்குள் கேள்விப்புழு’’. இந்தக் கவிதை அரசு வேலை, அரசு கல்லூரி கேட்போர் அரசு பள்ளியெனில் முகம் சுழிப்பதை அழுத்தமாகச் சொல்லுகிறது. இந்த ‘‘கேள்விப்புழு’’ கவிதையை தமிழ் நாட்டு கல்வி அமைச்சருக்கு சமர்ப்பிக்கிறேன்.  ‘‘கன்றெனத் துள்ளி கடுகெனப் பொரிந்து கலகலப்பாக வகுப்பில் இருப்பவள் கண் சோர்வுற்று அசதியாக அமர்ந்து தவிப்போடு இருப்பவளைக் கண்ட ஆசிரியை அருகில் சென்று ரகசிய உரையாடலில் கொண்டுவராததை அறிந்து தன் கைப்பையைத் தாய்மையோடு கொடுத்தனுப்பினார். நாப்கின் மலர்ச்சியைத் தந்தது’’.  ‘‘வகுப்பறை விலக்கு’’ எனும் இக்கவிதை சொல்லும் உளவியல் அற்புதம். இப்படிப்பட்ட ஆசிரியர்களைக் கொண்டாடத்தானே காத்திரு க்கிறோம். அரசுக்கும் இந்த தாய்மை உணர்வு வேண்டும். இலவச நாப்கின் என கேலி பேசும் மூடர்கூட்டத்திற்கு இந்த வலியெல்லாம் புரியவே புரியாது. இக்கவிதையை வாசித்த போது நல்ல எழுத்தாளரும் ஆசிரியருமான தோழர் இரா.எட்வின் நினைவுக்கு வந்தார்.

 ‘‘உன்னிடம் சொல்லத் தோன்றியது என் உடலின் மாற்றங்களுடன் பிரியமும் பெருகுகிறது

வலியவரும் அன்பை இனி அடையாளம் காண வேண்டும்’’. ‘‘டியர் வாகினி’’ எனும் இக்கவிதை பதின்ம வயதில் உளவியலை உரக்கச் சொல்கிறது. ‘‘வகுப்பாசிரியை எதுக்கெடுத்தாலும் யாருடனாவது ஒப்பிட்டே பேசுறாங்க ஒவ்வாமையா இருக்குப்பா. என் திறமை எனக்கானதுதானே…’’

‘‘ஒவ்வாமை’’ எனும் கவிதை எழுப்பும் கேள்வி மிக முக்கியமானது. ஒப்பிட்டு பேசும் கெட்ட வழக்கம் பள்ளிகளில் மட்டுமா? வீட்டினுள்ளும் பாடாய்ப் படுத்துகிறதே! ‘பலரறிய பாராட்டுவதும், தனியாக விமர்சிப்பதும்’ எனும் அருங்குணம் எங்கும் அருகிவருகிறதே! சில மாதங்கள் முன்பு நானும் இணையரும் மெரினா பீச்சுக்கு போய் வந்த பின் முகநூலில், கடற்கரையை குப்பை களமாக்கும் பொறுப்பற்ற குடிமக்களின் செயல் குறித்தும், அரசின் செயலின்மை குறித்தும் கவலைப் பட்டிருந்தேன். ‘‘கடலென்னும் அற்புதம்’’ கவிதையை வாசித்த போது ந.பெரியசாமிக்கும் எனக்கும் ஒத்திசைவு இருந்ததை எண்ணி மகிழ்ந்தேன். அவர் அக்கவிதையின் இறுதியில் சொல்கிறார்; ‘‘குப்பைகளைக் கொட்டிடாது குதூகலித்திருந்து வந்திடுவோம்’’. தலைமுறை, ரகசியப் பொய், கரோனா கொடுமை, குளோரின் நீர் என ஒவ்வொரு கவிதையையும் பேசத்தான் ஆசை. நீங்களே வாங்கிப் படித்து அனுபவிக்க வேண்டுமே! ஆகவே இன்னும் ஒரே ஒரு கவிதையோடு நிறுத்திக் கொள்கிறேன்.

‘‘கடைசி பெஞ்ச்’’ கவிதை என்னுள் நேற்றைய நினைவை மீட்டியது. ஆசிரியர் எத்தனை முறை  இழுத்து வந்து முதல் பெஞ்சில் உட்கார வைத்தாலும் நைசாக நழுவி கடைசி பெஞ்சுக்கு தாவிவிடும் என்னைப் பார்த்து என் ஆசிரியர் சொன்னார் ‘‘நீ எங்கே இருந்தாலும் மார்க் வாங்கி விடுகிறாய், தயவு செய்து மற்றவர்களைக் கெடுத்துவிடாதே… நான் அவர்களைத் தனியாக கவனிக்க வேண்டும்’’. இப்படியும் யோசித்த ஆசிரியர்கள் இருந்த காலம் அது. கடைசி பெஞ்சர்களின் தனிப்பட்ட பல்வேறு திறமைகளை அடுக்கிவிட்டு பெரியசாமி கவிதையில் இறுதியில் சொல்கிறார்;

 ‘‘கடைசி பெஞ்ச் குறித்து கவலை கொள்ளாது இருந்தாலும் வேடிக்கை பார்க்க இயலாதது வேதனையாகத்தான் பட்டதாம்’’

முன்னுரையில் தேவசீமா சொன்னது போல பதின் வயது குழந்தைகளின் குரலாய் வெளிப்பட்டு, அவர்களுக்கு குளிர் காய்வதற்கான நெருப்பை அளித்து கதகதப்பை இக்கவிதைகள் ஊட்டியிருக்கின்றன எனில் மிகை அல்ல. தின்ம வயதின் உளவியலை புரிவது எளிதல்ல,  மிகவும் கடினம். பெரியசாமி துணிந்து நுழைந்துள் ளார். ‘எளியது ஆயினும் வலியது கண்டாய்’ எனச் சொல்ல வைத்துவிட்டார். ஓர் நல்ல கவிதை நூல் எது என்பதை, பக்கங் களின் எண்ணிக்கை மற்றும் கவிதைகளின் எண்ணிக்கை இவற்றைக் கொண்டா தீர்மானிக்க வேண்டும்? இல்லை. இல்லவே இல்லை. 32 பக்கங்களில் 25 கவிதைகளில் நல்ல கவிதை நூலைத் தந்த பெரியசாமிக்கு என் வாழ்த்துகள். தொடர்க உம் முயற்சி!

;