மையப்படுத்தப்பட்ட நுழைவுத் தேர்வுகளை அறிமுகப்படுத்து வது, ஒற்றைத்துறையுடன் இருந்து வரும் கல்லூரிகளை பல்துறை கொண்ட கல்வி நிறு வனங்களாக மாற்றுவது போன்ற ஒன்றிய அரசின் திட்டங்கள் குறித்து கல்வியாளர்கள் பலரும் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தி வருவதால் புதிய கல்விக் கொள்கைக்கான எதிர்ப்பு அதிகரித்திருக்கிறது. புதிய கல்விக் கொள்கையை அப்படியே நடைமுறைப்படுத்தினால் 2030ஆம் ஆண்டுக் குள் நாட்டிலுள்ள கல்லூரிகளில் பாதி அழிந்து போகும் என்று ஜனநாயக ஆசிரியர் முன்னணி என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இணைய வழிக் கருத்தரங்கில் நீட் மற்றும் அதன் விளைவு கள் குறித்து தீவிரமாக இயங்கி வருகின்ற முன்னணி கல்வியாளரான பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு பேசினார். கருத்தரங்கில் உரை யாற்றிய அவர் ‘கூடுதல் நிதி ஒதுக்கீடுகளைச் செய்யாமல், ஒற்றைத் துறையுடன் இயங்கி வருகின்ற கலை மற்றும் வணிகக் கல்லூரிக ளை பல்துறை கொண்ட கல்லூரிகளாக மாற்ற வேண்டும் என்று ஒன்றிய அரசு பரிந்துரைத் துள்ளது. உயர்தர தனியார் கல்லூரிகளால் பல்வேறு ஆதாரங்கள் மூலம் தங்களுக்கான நிதியைத் திரட்டிக் கொள்ள முடியும் என்றா லும் ஏற்கனவே போதிய நிதியின்றி நலிவடைந்த நிலையில் இருந்து வருகின்ற மாநில அரசு களால் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறுகின்ற கல்லூரிகளை எவ்வாறு தரம் உயர்த்த முடியும்?’ என்ற கேள்வியை எழுப்பினார்.
கல்வி வாய்ப்பு பறிப்பு
மேலும் தங்களுடைய மாணவர்களை மையப்படுத்தப்பட்ட தேர்வுகளுக்கு மாநில அரசுகள் தயார்ப்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருப்பதன் மூலம் மற்றொரு பாகுபாட்டையும் ஒன்றிய அரசு அறிமுகப் படுத்தியுள்ளது என்றார். ‘தமிழ்நாட்டில் மட்டும் சுமார் எட்டு லட்சம் மாணவர்கள் மேனிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள். பன்னி ரண்டாம் வகுப்பு வரை அவர்கள் இலவசமா கப் பயின்று வருகின்றனர். திடீரென்று அவர்களி டம் மத்தியப் பல்கலைக்கழகங்களில் சேருவ தற்கு நுழைவுத் தேர்வில் தேர்ச்சியடைய வேண்டும் என்று கூறுவதன் மூலம் ஒன்றிய அரசு அந்த மாணவர்களின் கல்விப் பயணத்தை தேவையற்ற ஒன்றாக மாற்றுகிறது.
இதுபோன்ற நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு ஏழைக் குழந்தைகள் கட்டாயம் பயிற்சி மையங்களுக்கு செல்ல வேண்டியி ருக்கும். பணக்காரர்கள் மட்டுமே உயர்கல்வி க்கு வர முடியும் என்பதை நீட் அனுபவம் நமக்கு உணர்த்தியிருக்கிறது. எனவே ஒருபுறம், மாண வர்களின் கல்வி வாய்ப்பைப் பறித்து விட்டு மறுபுறம் மாநில அரசுகளிடம் பொறுப்புகளைத் தள்ளி விடுவதன் மூலம் கூட்டாட்சி கட்டமைப்பு கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. அனைவ ருக்கும் கல்விக்கான (சர்வ சிக்சா அபியா னுக்கான) நிதியைக் கூட மாநிலங்களால் பெற முடியவில்லை. ஏற்கனவே சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பங்கிற்காக ஒன்றிய அரசிடம் மாநிலங்கள் போராடி வரு கின்றன’ என்கிறார் பிரின்ஸ் கஜேந்திர பாபு. பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதி யுதவி பெறுகின்ற மத்திய பல்கலைக்கழகங்கள் இப்போது கூசெட் (CUCET) என்ற பொதுத் தேர்வுக்கான முயற்சியில் இறங்கியுள்ள நிலையில், அதுபோன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்காக பயிற்சி மையங்களில் சேர வேண்டிய அழுத்தம் மாணவர்களிடையே அதி கரித்து வருவதாக ஆசிரியர்களும், மாணவர்க ளும் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி யுள்ளனர்.
சமூகப் புரிதல் இல்லாத அதிகாரிகளை உரு வாக்குகின்ற நுழைவுத் தேர்வு என்கிற சிந்த னையை பிரின்ஸ் கஜேந்திர பாபு கடுமை யாகக்குறைகூறினார். ஒன்றிய அரசு பணியா ளர் தேர்வாணையத்தின் (UPSC) விண்ணப்ப தாரர்களை மேற்கோள் காட்டிய பிரின்ஸ் கஜேந்திர பாபு, தங்கள் சொந்த கிராமங்களி லிருந்து பெருநகரங்களுக்கு வெகுதூரம் பயணித்து, மூச்சுத் திணறுகின்ற அறைகளில் தங்களை அடைத்துக் கொண்டு மாணவர்கள் தேர்வுகளுக்குத் தயாராகி வருகிறார்கள் என்று குறிப்பிட்டார். தங்கள் வேலைக்காக சமூ கத்திலிருந்து அந்நியப்படுகின்ற அந்த மாண வர்கள் அதிகாரிகளாக மாறுகின்ற போது, முற்றிலுமாக தங்களுடைய களத்தில் இருந்து வெளியேறி இறுதியில் தற்போதைய நிலையை ஏற்றுக் கொள்ளும் அவர்கள் அந்த நிலைமை க்கு எதிராக ஒருபோதும் இருப்பதில்லை என்றார்.
முப்பது மடங்கு கல்விக் கட்டணம்
மேற்கு வங்கத்தில் உள்ள காஜி நஸ்ருல் பல்கலைக்கழகப் பேராசிரியரான தேவ் ஆதித்ய பட்டாச்சார்யா கூறுகையில், அமைப் பிலுள்ள குறைபாட்டின் அறிகுறிகளாகவே மையப்படுத்தப்படும் தேர்வுகள் இருக்கின் றன. ஒன்றிய அரசு 2011ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஒரே சட்டத்தின் மூலமாக பதினோரு மத்திய பல்கலைக்கழகங்களை நிறுவியது. கிராமங்களிலும், புறநகர்ப் பகுதிகளிலும் இருக்கின்ற மாணவர்கள் பயன்பெறும் வகை யில் அந்தப் பகுதிகளில் மத்திய பல்கலைக் கழகங்களை நிறுவுவது என்ற சிந்தனை இருந்தது. ஆனால் மாணவர்கள் சேராததால் இருக்கைகள் நிரப்பப்படாமல் காலியாகவே இருந்தன. தெற்கு பீகார் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் குறித்த பாடம் ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள முப்பது இடங்களில் சேர்ந்துள்ள ஆறு மாணவர்களுக்கு மட்டுமே நாங்கள் கற்பித்து வந்தோம். அந்த இடங்களை நிரப்புவதற்கு ஒரேயொரு தேர்வை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. ஆனால் ஜவஹர் லால் நேரு பல்கலைக்கழகம் போன்ற மத்தியப் பல்கலைக்கழகத்துடன் ஒப்பிடும் போது கல்விக் கட்டணம் முப்பது மடங்கு அதிகமாக இருப்பதாலேயே அந்தப் புதிய மத்திய பல் கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர வில்லை என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. மாணவர்கள் இங்கே எப்படி வருவார்கள்?
மையப்படுத்தப்படும் தேர்வுகளுக்காக முந்தைய தவறுகளை மறைப்பதற்கான மற்றொரு பொய்யை அரசு கூற வேண்டி யுள்ளது. கெடுவாய்ப்பாக புதிய கல்விக் கொள்கை, ஏழைகள் அதிகம் பேச முடியாதிருக்கும் நாடு முழுவதும் இந்த தேர்வு முறையையே பின்பற்ற வேண்டும் என்று விரும்புகிறது.
நியாயப்படுத்தும் கட்டுக்கதைகளும் அபாயகரமான நச்சு கழிவுகளும் நுழைவுத் தேர்வு
நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்குத் தேவையான தளவாடங்கள், உள்கட்டமைப்பு கள் ஆகியவற்றைப் பற்றி பேசுகையில் ஜவ ஹர்லால் நேரு பல்கலைக்கழக சர்வதேச உறவுகள் துறையைச் சார்ந்த பேராசிரியை நிவேதிதா மேனன், டிஜிட்டல் முறைகள் மூல மாக நடத்தப்படுகின்ற மையப்படுத்தப்பட்ட நுழைவுத் தேர்வுகளை நியாயப்படுத்துவ தற்காக பல கட்டுக்கதைகள் சொல்லப்படு கின்றன என்றார். ‘இணையவழித் தேர்வுகள் சுற்றுச்சூழ லுக்கு உகந்தவை என்பது அந்தக் கட்டுக் கதைகளில் ஒன்றாக உள்ளது. ஆனால் அவை அவ்வாறாக இல்லை. இணையவழித் தேர்வுகளுக்காக எளிதில் மறுசுழற்சி செய்ய முடியாத ஆயிரக்கணக்கான டன் அளவிலான அபாயகரமான நச்சு மின் கழிவுகளை உற்பத்தி செய்ய வேண்டி வருகிறது. பேனா, காகிதம் கொண்டு எழுதப்படுகின்ற தேர்வு முறையுடன் ஒப்பிடுகையில் இணையவழித் தேர்வுகள் மிகவும் மலிவானவை என்பது கல்வியாளர்களிடையே காணப்படுகின்ற இரண்டாவது கட்டுக்கதையாகும். நூலகம், சம்பளம் ஆகியவற்றிற்கான நிதியைக் குறைத்தே பல்கலைக்கழகங்கள் எட்-டெக் நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தைச் செலுத்துகின்றன என்பதால் அதுவும் தவறானதாகவே இருக்கிறது. பல்க லைக்கழகங்களிடமிருந்து அந்த எட்-டெக் நிறுவனங்கள் அதிக அளவில் பணத்தைப் பெற்றுக் கொள்வதால் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் தங்கள் சம்ப ளத்தை மிகவும் தாமதமாகப் பெறுகிறார்கள் என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. மூன்றாவதாக இந்த நிறுவனங்களின் மேலா திக்கம், பிற நாடுகளில் அவை எவ்வாறு தண்டனையின்றி செயல்படுகின்றன என்பது போன்ற ஆபத்துகளும் உள்ளன’ என்று நிவேதிதா மேனன் விளக்கினார்.
டெக்சாஸ், புளோரிடா உள்ளிட்ட அமெ ரிக்காவின் பல மாநிலங்களில் இணையவழி வகுப்புகள், தேர்வுகள், மதிப்பீடு என்று அனைத்துப் பணிகளும் பிரிட்டிஷ் தொழில் நுட்ப நிறுவனமான பியர்சனிடம் ஒப்ப டைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், லட்சக்க ணக்கான மாணவர்களின் தனிப்பட்ட தரவு களை அந்த நிறுவனம் பயன்படுத்திக் கொள்வ தற்கு மிகச் சில தடைகளே இருந்ததாக விசார ணையில் கண்டறியப்பட்டது என்றார். ‘இந்தி யாவில் பைஜூஸ் நிறுவனம் வேண்டப்ப டாத தனிநபர் கடனைக் கொடுத்து மாணவர்க ளையும், அவர்களது பெற்றோரையும் எவ்வாறு கொள்ளையடித்தது என்ற எடுத்துக்காட்டு நம்மிடமே உள்ளது’ என்றார் நிவேதிதா மேனன்.
நன்றி : நியூஸ்க்ளிக், தமிழில் : பேரா.தா.சந்திரகுரு