tamilnadu

img

ஏரிக்கு மதகு அமைத்துத் தந்த பெண் சலவைத் தொழிலாளி - சேலம் சோபனா

சேலம் பாரா மஹால் நாணய சங்கத்தின் இயக்குநரான சுல்தான் மிகச் சிறந்த வரலாற்று ஆய்வாளர். பழங்கால நாணயங்கள், தபால்தலைகள் மற்றும் கல்வெட்டுகளை ஆராய்ச்சி செய்து நம் கடந்தகால வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் கடுமையாக உழைப்பவர். இந்நூலில் சேலத்தில் ஆண்ட மன்னர்கள் வெளியிட்ட நாண யங்கள், அமைத்த கோவில்கள் மற்றும் கிருத்துவ தேவாலயங்கள், இன்றைய சேலம் நாமக்கல் மாவட்டத்தில் (தர்மபுரி - கிருஷ்ண கிரி இணைந்த ஒன்றுபட்ட சேலம்)  கிடைத்த கற்சிலைகள், கல்வெட்டு கள் ஆகியவற்றை ஆவணப்படுத்தி யுள்ளார். இவை குறித்த தகவல் களைத் தேடி சரிபார்த்து, அதன் மூலம் சேலத்தை ஆண்ட மன்னர் களின் வரலாற்றைச் சொல்வதன் மூலம் சாதாரண மக்களின் வர லாற்றையும் சேர்த்துப் பதிவு செய்துள்ளார். முதல் பகுதியில் விஜயநகரப் பேரரசின் கீழ் 12-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டு வரை சேலத்தை ஆண்ட சிற்றரசர்கள் கட்டிய கோவில்கள் தேவால யங்கள், அவர்கள் வெளியிட்ட நாணயங்கள் குறித்த தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாண யங்களின் ஒரு புறத்தில் மீன்  சின்னமும் மறுபுறத்தில் நாண யத்தை வெளியிட்ட அரசர்களுடைய பெயரின் முதல் எழுத்தும் தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. சில  காசுகளில் மீனுக்கு பதிலாக அனு மன் சின்னமும் இடம்பெற்றுள்ளது. ஆத்தூர் பகுதிகளை ஆண்ட ராம் நாயக்கர் வெளியிட்ட செப்புக்காசில் ஒருபுறம், அமர்ந்த நிலையில் நரசிம்மமும், மறுபுறம் நடுவில் குத்துவாள் இருபுறமும் சந்திரன் சூரியன் அதன் கீழ் தெலுங்கில் ராமா  என்ற எழுத்துக்களும் காணப்படு கின்றன. தாரமங்கலத்தில் கெட்டி முதலிகள் என்று அழைக்கப்படும் சிற்றரசர்கள் சிவன் கோவில் அமைத்து மண்டபத்தின் சுற்றுச் சுவர்களில் ராமாயணக் காட்சி களை வடித்துள்ளனர். கருவறை அமைத்துள்ள விதம் மிகச்சிறந்த கட்டிடக்கலைக்கும் சிற்பக் கலைக்கும் எடுத்துக்காட்டாக உல களவில் புகழ்பெற்றுத் திகழ்கிறது. இவர்கள் இந்து மன்னர்களாக இருந்தபோதிலும், இராமச்சந்திர நாயக்க மன்னர், ராபர்ட் டி நொபிலி என்ற கிருத்துவ மதத் துறவியின் வேண்டுகோளுக்கிணங்க சேந்த மங்கலம், காக்காவேரியில் தேவா லயம் ஒன்றை அமைத்துள்ளார். தேவாலயம் இன்றும் நல்ல நிலை யில் பயன்பாட்டில் உள்ளது. அவ ரது கற்சிலையும் கல்வெட்டும் தேவாலயத்தில் காணப்படுகிறது. இது இவர்களது மதநல்லிணக் கத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

இரண்டாம் பகுதியில் கல்வெட்டு கள் குறித்து ஆவணப்படுத்தப் பட்டுள்ளது. இம்மன்னர்கள் பெரும்பாலும் தெலுங்கு மொழி பேசுபவர்களாக இருந்த போதிலும் கல்வெட்டுகளில் தகவல்களைத் தமி ழிலும் பொறித்துள்ளனர். 18-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டு வரை உள்ள கல்வெட்டு களின் தகவல்கள் இந்நூலில் உள் ளன. சோழ, பாண்டிய, பல்லவர் காலத்துக் கல்வெட்டுகள் இவை. போர்களில் வெற்றி, ஆநிரை கவர்தல் - மீட்டல், புலி போன்ற காட்டு  மிருகங்களை எதிர்த்தல் ஆகிய வற்றிலும் வீரமரணம் அடைந்த வர்கள், ஏறு தழுவுதல், நடுகற்கள் இவை தவிர, பெருவழி மைல் கற்கள், கோவில்களுக்குத் தரப்பட்ட மானியங்கள், ஏரிகள் பராமரிப்பு ஆகியவை குறித்தும் கல்வெட்டுகள் உள்ளன. சேலத்தில் கிடைத்துள்ள வட்டெழுத்துக் கல்வெட்டுகள் இரண்டுமே பல்லவர் காலத்தைச் சேர்ந்தவை. கல்வெட்டுகள் குறித்துப் படிக்கும் பொழுது என் கவனத்தைக் கவர்ந்த இரண்டு கல்வெட்டுகள், பனிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இவையிரண்டும். இன்று பேளூர் என அழைக்கப்படும் ஊரில், ஏரியை வெட்டிச் சீர் செய்து,  நீர் வெளியேறும் மதகை அமைத்துக் கொடுத்த சலவைத் தொழிலாளி “பிச்சன் சொக்கன்” என்பவரைப் பற்றிய தகவலும், அதைவிட ஆச்சரியமூட்டும் விதமாக, அதே ஊரைச் சேர்ந்த பெண் சலவைத் தொழிலாளி ‘தாழி வடுகி என்பவரும் ஏரி ஒன்றுக்கு நீர் வெளியேறும் மதகை அமைத்துக் கொடுத்தார்கள் என்கிற தகவலும் ஆகும். இது சாதாரணத் தொழி லாளர்களும் பெண்களும் தமிழ்ச்சமூகத்தில் பெற்றிருந்த நன்மதிப்பை உணர வைக்கிறது. குறிப்பிடத்தக்க மற்றொரு கல்வெட்டு, மூன்றாம் இராஜேந்திர சோழன் காலத்துக் கல்வெட்டு. கி.பி. 1251-ஐச் சேர்ந்த இதில் ஒரு கலவரத்தில் பல கோவில் களுக்குச்சொந்தமான சொத்து கள் களவாடப்பட்டு மலை மண்டலத்திற்குக் (திருவண்ணா மலை திருக்கோவிலூர் பகுதிகள்) கொண்டு சென்றதாகக் கூறப் பட்டுள்ளது. படி எடுக்கப்பட்டுள்ள கல்வெட்டின் படத்தில் ‘மலை மண்டலத்துக்குள் குந்து கண்ட  கோவிந்தச் சமண வான்னேன் என்னூரான்’ என்று குறிப்பிடப் கட்டுள்ளது. இதிலிருந்து, திரு வண்ணாமலை திருக்கோவிலூர் பகுதிகளிலும் சமணர்கள் இருந்தனர் என்பது உறுதியாகிறது. கி.பி. 1138. பிரதிகண்டதாச சோழன் கல்வெட்டு, கொல்லி மலையிலுள்ள கோவில் குறித்தது.  அறப்பளீஸ்வரர் என வடமொழி யில் அழைக்கப்படும் அக்கோவி லிலுள்ள கடவுளின் பெயர் தமிழ்ப் பெயரான திருவறப்பள்ளியாழ்வார் என்று பதிவாகியுள்ளது. 

அடுத்த பகுதியில் சேலத்தை ஆண்ட மன்னர்களின் கற்சிற்பங்கள் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன. இதில் குறிப்பாக தாரமங்கலம் கோவிலில் திரு கைலாசநாதர் கோவிலுக்கு தமிழும் கிரந்தமும் கலந்த எழுத்திலுள்ள தான சாசன கல்வெட்டு. இது 29 அடி நீளம் 5 அடி அகலம் உள்ள கன்னிமார் பாழிபாறை கல்வெட் டாகும். இதுதவிர நீர் மேலாண்மை குறித்த கல்தூண், சமண மட சாசனம் ஆகியவை குறிப்பிடத் தக்கன. இணைப்பாக, சேலத்தின் மிகத் தொன்மையான, நாலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி கல்வெட்டு மற்றும் கிபி 682-இல் தமிழ் வட்டெழுத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு குறித்தும் ஆவணப்படுத்தியுள்ளார். தமிழ் பிராமி கல்வெட்டு வழிப்போக்கர்களின் தண்ணீர் தாகத்தைப் போக்க 68 அடி ஆழம் கொண்ட சுனை வெட்டியதைப் பாறையில் பதிவு செய்துள்ள முக்கிய கல்வெட்டாகும். இதன் மூலம் தமிழகத்தில் மன்னர்கள் மட்டுமல்லாது சாதாரண மக்களும் சமூகப் பணி செய்துள்ளதையும், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மொழியறிவு பெற்றிருந்ததையும் அறிய முடிகிறது. இது போன்ற முயற்சிகள் நமது உண்மையான வரலாற்றை மீட்டெடுக்க உதவும் என்ற புரிதலை புத்தகம் நமக்கு ஏற்படுத்துகிறது என்றால் அது மிகையல்ல.

சேலம் தமிழ் மன்னர்கள் (வரலாறு)
ஆசிரியர் - சம்சுதீன் 
(எ)சுல்தான்,
வெளியீடு : ஜீ சுரையாபேகம் பதிப்பகம், க.எண். 104, பழைய எண் 17-ஏ1, சோமன் சடகோபர் தெரு, பொன்னம்மாபேட்டை, 
சேலம் - 636001
அலைபேசி - 9443912804
நூலின் விலை ரூ.300

 

;