சென்னை, மே 18- இலங்கை வாழ் மக்களுக்கு உதவிடும் வகையில் அரிசி உள்ளிட்ட மருந்துப் பொருட்களை சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு எடுத்துச் செல்லும் கப்பலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து புதனன்று (மே 18) அனுப்பி வைத்தார் முதற்கட்டமாக 9,000 மெட்ரிக் டன் அரிசி, 200 மெட்ரிக் டன் ஆவின் பால் பவுடர், 24 மெட்ரிக் டன் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை இலங்கை நாட்டிற்கு சரக்குக் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டது. முதல் கட்டமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ள இந்த உதவிப் பொருட்களின் மதிப்பு 45 கோடி ரூபாயாகும். “வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன்!” என்றார் ராமலிங்க அடிகளார். அதேபோல் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கணியன் பூங்குன்ற னாரின் பொன்மொழிக்கும் ஏற்ப நீராலும் நிலத்தாலும் பிரிந்திருந்தாலும் துன்புறும் உயிர்கள் அனைத்தும் நம் உறவினர்களே என்ற தாயுள்ளத்தோடு, இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பொருள் தட்டுப்பாட்டில் சிக்கித் தவித்து இன்னலுறும் இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தமிழக மக்களின் சார்பில் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் இலங்கை வாழ் மக்களுக்கு உதவிடும் வகையில் அரிசி, ஆவின் பால் பவுடர் மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு எடுத்துச் செல்லும் கப்பலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார் இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, அர.சக்கரபாணி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சா.மு.நாசர், செஞ்சி.கே.எஸ்.மஸ்தான்,சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் துணைத் தலைவர் எஸ்.பாலாஜி அருண்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.