பிணையில் விடுவித்தார் நீதிபதி
கோயம்புத்தூர், டிச. 8 – வேளாண் பல்கலைக்கழக அரியர் தேர்வு முடிவுகளில் குளறுபடியைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் வேளாண் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் செவ்வாயன்று காவல்துறை யினர் வலுக்கட்டாயமாக மாணவர் சங்க தலைவர்களை தாக்கி அராஜக மாக கைது செய்தனர். இதனையடுத்து நீதிபதி முன்பு புதனன்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அனைவரையும் பிணையில் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார். வேளாண் பல்கலைக்கழகத்தில் சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் அரியர் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 90 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் தோல்வியுற்றதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது. பல்கலைக்கழக தேர்வு வாரியத்தின் குளறுபடிகள்தான் காரணம் என மாணவர்கள் குற்றம்சாட்டினர்.
இதனையடுத்து மாணவர்கள் கடந்த மூன்று நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் செவ்வாயன்று இரவு இந்திய மாண வர் சங்கத்தின் நிர்வாகிகள் 7 பேரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக தாக்கி கைது செய்தனர். ஒரு பெண் நிர்வாகி உள்ளிட்ட 7 பேரை இரவு முழுவதும் காவல்துறை தங்களது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தனர். மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அசார், செயலாளர் தினேஷ்ராஜா, துணை செயலாளர் கயல்விழி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாணவர் சங்க மாநில செயலா ளர் வீ.மாரியப்பன், வாலிபர் சங்க கோவை மாவட்டச் செயலாளர் கே.எஸ்.கனகராஜ், மாணவர் சங்க மாநில துணை தலைவர் நிருபன் சக்கரவர்த்தி உள்ளிட்ட தலைவர்கள் காவல்நிலையம் முன்பு குவிந்தனர்.
இதனையடுத்து புதனன்று காலை கோவை ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகத்தில் உள்ள ஜே3 நீதிமன்றத்தில் மாணவர் சங்க தலைவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து நீதிபதி மாணவர்கள் அனைவரை யும் பிணையில் விடுவித்து உத்தரவிட்டார்.இந்நிலையில், புதனன்று பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி யது. இதில் மாணவர் சங்க மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வீ.மாரியப்பன் கூறு கையில், மாணவர்கள் தேர்ச்சி அடையாதது குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கேட்கும் பொழுது மாணவர்கள் முறைகேடு செய்ததாக விளக்கம் அளித்திருக்கிறார்கள் என்றனர்.
எனவே அந்த மாணவர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர 90 சதவீதம் மாணவர்களை தேர்ச்சி இல்லை என கூறுவது நியாயமில்லை என தெரிவித்தோம். மாண வர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் இந்த தேர்வு முடிவுகளை வெளியிட கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு பதிலாக தேர்வை தள்ளி வைப்பதாக கூறுகிறார்கள். இனி எழுத இருக்கும் தேர்வுகளுக்கு கட்ட ணம் செலுத்த வேண்டாம் என நிர்வாகம் தெரிவிக்கிறது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முடிவுகள் குறித்து அறிவிக்க தடையாணை பெற முயற்சி மேற்கொள்ள உள்ளோம். நீதிமன்றம் மேல் உள்ள நம்பிக்கை யின் காரணமாக இந்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள் ளோம். ஆன்லைன் மூலம் தேர்வு வைத்தால் பல்வேறு குளறுபடிகள் வரும் என தெரிந்தும் பல்கலைக்கழக நிர்வாகம் ஏன் ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும்?
மாணவர்களின் நலன்களோடு விளையாடுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அதேபோன்று நியாயமான கோரிக்கைக்காக களத்தில் நின்ற எங்களது இந்திய மாணவர் சங்கத்தின் பெண் நிர்வாகி உள்ளிட்ட 7 பேரை காவல்துறை யினர் அராஜகமாக கைது செய்து ஒரு நாள் இரவு முழுவதும் தனது கட்டுப் பாட்டில் வைத்திருந்தது. இதனை இந்திய மாணவர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.