விருதுநகர்:
விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பாதாளச் சாக்கடையில் அடைப்புகளை பல நாட்களாக அகற்றாத காரணத்தால் கழிவு நீர் முழுவதும் தாழ்வான குடியிருப்பு பகுதி வழியாக வெளியேறி வருகிறது. இதனால், அப்பகுதி முழுவதும் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.விருதுநகர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இதில் சுமார் 50 சதவீத வீடுகளில் பாதாளச் சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, கழிவு நீரேற்று நிலையங்கள், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. மேலும், அடிக்கடி பாதாளச்சாக்கடையில் ஏற்படும் அடைப்புகளை அகற்ற 2 ஜெட் ராடு வாகனங்கள் நகராட்சியில் உள்ளன.இந்நிலையில், அந்த வாகனங் கள் மூலம் முக்கிய வீதிகளில் ஏற் படும் அடைப்புகள் உடனுக்குடன் அகற்றப்பட்டு வந்தன. இதனால், குடிநீருடன் கழிவு நீர் கலப்பது தடுக்கப்பட்டு, சுகாதாரமான குடிநீர் வழங் கப்பட்டு வந்தது.
பழுதான ஜெட்ராடு வாகனங்கள்
கடந்த ஒரு மாத காலமாகவே இரு ஜெட் ராடு வாகனங்களிலும் பழுதுஏற்பட்டுள்ளது. இதனால் அடைப்புகளை எடுக்க இயலாத நிலை ஏற் பட்டுள்ளது. ஆனால், பழுதுகளை சீர்செய்ய நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால், விருதுநகர் நகராட்சி அருகே உள்ள பாத்திமாநகர், பிள்ளையார் கோவில் தெரு, கட்டையாபுரம், மல்லாங்கிணறு சாலை, கண்மாய் பட்டி ஆகிய இடங்களில் அடைப்புகள் ஏற்பட்டு ஒரு மாத காலம் ஆகியும் இன்னும் அகற்றவில்லை. எனவே,இப்பகுதிகளில் தாழ்வான குடியிருப்புகள் உள்ள பகுதி வழியாக கழிவு நீர்வெளியேறி வருகிறது. இதனால் அப் பகுதி முழுவதும் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, அங்கு வசிக்கும் பொது மக்கள் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் தவித்துவருகின்றனர். தற்போது தொடர் மழை பெய்து வருவதால், இப்பகுதிகளில் தொற்று நோய் பரவும் அபாய நிலை உள்ளது.மேலும், பாத்திமாநகர் பகுதியில் குடிநீர் விநியோகத்தின் போது, கழிவு நீரும் சேர்ந்து வீடுகளுக்கு வருகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும்உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென பொது மக்கள் புகார் தெரிவிக் கின்றனர். எனவே, விருதுநகர் நகராட்சி பகுதிகளில் பாதாளச் சாக்கடை அடைப்புகளை அகற்றி சுகாதாரத்தை பாதுகாத்திட மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய நடவடிக்கை வேண்டுமென பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.