சென்னை,டிச.24- இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் சென்னையில் 26 பேர் அரசு ஆஸ்பத்திரி களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உயிர் பிழைத்துள்ளனர். இவர்களுக்கான செலவு ரூ.3 லட்சத்து 47 ஆயிரத்து 850-ஐ அரசே ஏற்றுள்ளது. சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்கவும், விபத்து ஏற்பட்ட 48 மணி நேரத்துக்கு கட்டணம் இல்லாத அவசர சிகிச்சை அளிக்கும் வகையிலும் “இன்னுயிர் காப்போம்” என்ற திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 18-ந்தேதி மேல்மருவத்தூரில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மிக முக்கியமான அம்சமாக சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனை களில் முதல் 48 மணி நேரத்துக்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை அரசே ஏற்றுக் கொள்கிறது. இந்த திட்டத்தின் மூலம் கடந்த 6 நாட்களில் 971 பேர் பயன் அடைந்துள்ளனர்.
இதில் அதிகபட்சமாக அரசு மருத்துவமனைகளில் 778 பேருக்கு ரூ.66 லட்சத்து 89 ஆயிரத்து 850 செலவிடப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் 193 பேருக்கு ரூ.24 லட்சத்து 15 ஆயிரத்து 250 செலவிடப்பட்டுள்ளது. மொத்தம் 971 பேருக்கு ரூ.91 லட்சத்து 5,100 செலவிடப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 26 பேர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உயிர் பிழைத்துள்ளனர். இவர்களுக்கான செலவு ரூ.3 லட்சத்து 47 ஆயிரத்து 850-ஐ அரசே ஏற்றுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் 53 பேரும், தனியார் மருத்துவமனையில் 15 பேரும் சிகிச்சை பெற்று பயன் அடைந்துள்ளனர். இவர்களுக்காக மொத்தம் ரூ. 6 லட்சத்து 23 ஆயிரத்து 450 செலவழிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 19 பேரும் சிகிச்சை பெற்று பயன் அடைந்துள்ளனர். இவர்களுக்கான செலவு ரூ.59 ஆயிரத்து 600-ஐ அரசு ஏற்றுள்ளது.