கிருஷ்ணகிரி, டிச. 5- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளராக ஆர்.ஜி. சேகர் தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட 23 ஆவது மாநாடு ஊத்தங்கரையில் டிசம்பர் 3, 4 தேதிகளில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் மாநாட்டை துவக்கிவைத்து உரையாற்றினார். மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.ஜெயராமன் அரசியல் ஸ்தாபன வேலை அறிக்கை சமர்ப்பித்தார். புதிய மாவட்டக்குழு தேர்வு மாநாட்டில் 31 உறுப்பினர் கொண்ட புதிய மாவட்ட குழு தேர்வுசெய்யப்பட்டது. மாவட்டச் செயலாளராக ஆர்.ஜி.சேகர் தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக எக்ஸ். இருதயராஜ், வி.சாம்ராஜ், சி.சுரேஷ், ஜி.கே.நஞ்சுண்டன், வி.கோவிந்தசாமி, எஸ்.ஜேம்ஸ் ஏஞ்சலா மேரி, சி.பி.ஜெயராமன், ஆர்.மகா லிங்கம், சி.பிரகாஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன் நிறைவுரை ஆற்றினார். மாவட்ட குழு உறுப்பினர் அண்ணாமலை நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
ஊத்தங்கரை, சிங்காரப் பேட்டை, போச்சம்பள்ளியை மையப்படுத்தி அரசு கலைக் கல்லூரி அமைத்திடவேண்டும். ஊத்தங்கரை, போச்சம்பள்ளி வட்டங்களில் தொடர் மழை யின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் நெல் வயல்கள் மற்றும் இடிந்த வீடுகளுக்கும் அரசு முழுமை யான நிவாரணம் வழங்கிட வேண்டும். ஓசூரில் உள்ள மாவட்ட அரசு கால்நடைப் பண்ணையை புனரமைத்து பால், கால்நடை கள், கோழிகள் உற்பத்தியை அதிகரித்து அதன்மூலம் வேலைவாய்ப்பையும் அதிகரிக்கவேண்டும். ஓசூர் மாநகராட்சியால் உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும். கிருஷ்ணகிரி நகராட்சி, ஓசூர் மாநகராட்சி வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்கு ஏற்ப சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்களை பணியமர்த்தி, மக்கள் தொகைக்கேற்ப பாது காப்பிற்கு காவலர்களை நியமிக்கவேண்டும். மலைவாழ், இருளர், பழங்குடி மக்களுக்கு சாதிச் சான்று குடிநீர் அடிப்படை சுகாதார வசதிகளையும் உடனடியாக செய்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.