மதுரை:
சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டைக்கொலை வழக்கு விசாரணை தொடர்பாக குற் றம்சாட்டப்பட்ட ஒன்பது காவல்துறையினரும் மதுரை மத்திய சிறையிலிருந்து மதுரை மாவட்டநீதிமன்றத்திற்கு வியாழனன்று விசாரணைக்காக அழைத்துவரப்பட்டனர்.
இதை ஊடகத்துறையினர் நீதிமன்ற நுழைவாயில் பகுதியில் நின்று ஒளிப்பதிவு செய்தனர்.விசாரணை முடிவடைந்து மீண்டும் அவர்களை சிறையிலடைக்க காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றியுள்ளனர். அப்போது மதுரை மாநகர காவல்துறை உளவுப்பிரிவினர் சிறையிலுள்ள காவலர்களிடம் ஊடகத்தினர் குறித்து தவறான தகவல்களைக் கூறியுள்ளனர். இதனால் வேனியில் ஏறிய அவர்கள் ஊடகத்துறையினரை அவதூறாகப் பேசி, தகாத வார்த்தைகளால் திட்டினர்.
மாவட்ட நீதிமன்றத்தில் பணிபுரியும் மதுரைமாநகர காவல்துறை உளவுப்பிரிவினர் சிறையிலடைக்கப்பட்டுள்ள காவலர்கள் குறித்த செய்தி ஊடகங்களில் வெளியாவதை தடுக்கும்நோக்கில் செயல்பட்டனர். சிறையிலுள்ளவர்கள் தங்களது குடும்பத்தினரை சந்தித்துப் பேசுவதற்கு உளவுத்துறையினர் உதவினர். இதையும் படம்பிடிக்க முயன்றவர்களை அவதூறாகப் பேசி தாக்க முயன்றனர்.