tamilnadu

img

மரபணுவின் ஆச்சரியங்களை அறிய படியுங்கள்

டி என் ஏ என்பதன் தமிழாக்கம் தாயனை. 
நம்மோடு நம் வாழ்வியல் முறையில் பின்னிப் பிணைந்து இருக்கும் மரபணுவின் ஆச்சரியங்களை இந்த நூலினை வாசிப்பவர்கள் உணர்வார்கள்.
மரபணு குறித்த அடிப்படை அறிவை மிக எளிமையாக 15 கட்டுரைகள் மூலம் மிக அருமையாக அறிவியல் பூர்வமாக விளக்கியுள்ளார் நூலாசிரியர் வெண்பா.
நம் பள்ளிக்கூட பாடப் புத்தகங்கள் தேர்வு நோக்கில் தான் அமைந்துள்ளது.
அறிவை வளர்க்கும் நோக்கில் இல்லை என்பதை அனைவரும் அறிவோம்.
டி என் ஏ என்றால் என்ன? 
நடைபயிற்சி, உடல் ஆரோக்கியத்தை பேணும் உடற்பயிற்சிகள், சிறுதானிய உணவு என்பதை தாண்டி அறிவியல் கண்ணோட்டத்துடன் நம்மை நாம் தெரிந்து கொள்ள முயற்சித்துள்ளோமா ?
டி என் ஏ எனப்படும் தாயனை குறித்து இளைய சமுதாயத்தினரும் புரிந்து கொள்ளும் வகையில் சிறப்பான தமிழ் நடையில் மிக எளிமையாக நூலை படைத்துள்ளார் நூலாசிரியர்.
இந்தியாவில் 70சதவீத மக்களுக்கு பாலை செரிக்கும் சக்தி கிடையாது. 
குடும்ப சொத்துக்கள் வெளியே போகக்கூடாது என்று கருதி நெருக்கமான உறவுகளுக்குள் திருமணம் செய்வதால் எதிர்கால சந்ததிகளின் ஆரோக்கியம் எப்படி பாதிக்கிறது ?
ஏன் பெர்டிலிட்டி மருத்துவமனைகள் அதிகரித்து வருகிறது?
மரபணு மாற்றங்களால் புற்றுநோய், நீரழிவு நோய் ஏற்படுமா? 
ஒருவரின் தாயனையை வைத்து அவருக்கு பிற்காலத்தில் வரும் நோய்களை கண்டறிய முடியுமா ?
மரபணு  மாற்றப்பட்ட உணவு கலப்பு, காய்கறிகள் பழங்கள், உண்பதால் இளம் வயதில் உடல் பருமன் ஏற்படுமா ?
குழந்தையின்மைக்கு விதைக்குள் இருக்கும் வளங்கள் சுருங்கிப் போனதன் காரணமா ?
பெண்களுக்கு ஏன் ஹீமோபிலியா நோய் தாக்குவதில்லை?
நிறக்குருடு என்றால் என்ன ? இந்த நோயால் ஏன் ஆண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் ?
இது போன்ற கேள்விகளுக்கு முழுமையான அறிவியல் ரீதியான விடை இந்த நூலை வாசிக்கும் போது கிடைக்கும்.
குழந்தை என்பது கணவன் மனைவிக்கு இடையில் இருக்கும் தனிப்பட்ட விஷயம். இந்தியா போன்ற நாடுகளில் குழந்தை என்பது ஒரு சமுதாய கட்டமைப்புக்கு இன்றியமையதாக உள்ளது. “வீட்டில் என்ன விசேஷம்” என்ற கேள்வி சமுதாய எதிர்பார்ப்பாக மட்டுமின்றி, அறிவியல் ரீதியான முறையில் நாம் அணுக வேண்டும்.
பெண்ணுக்கும் ஆணிற்கும் உடல் ரீதியாக இருக்கும் தனித்துவங்கள் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். குறிப்பாக பருவமடைதல், கருத்தரித்தல், தனிப்பட்ட சுகாதாரம் போன்றவற்றை அறிந்து கொள்வது அவசியம்.
இதுகுறித்து வெளிப்படையாக பேசி, தயக்கங்களை உடைத்து இளம் தலைமுறையினருக்கு இவை பற்றிய புரிதலை ஏற்படுத்துவது நமது கடமை. அடுத்த தலைமுறை ஆரோக்கியமாக வாழ இதுவே சிறந்த முயற்சியாகும்.
டி என் ஏ என்னும் தாயனை குறித்து சிறந்த அறிவியல் அறிவை பலரும் அறியாத மருத்துவ தகவல்களை எளிய நடையில் வழங்கியுள்ள நூல் ஆசிரியருக்கு பாராட்டுக்கள்.
 

- எம்.ஜே.பிரபாகர்
 

“தாயனை” (தலைமுறைகளின் கதை) 
நூலாசிரியர் :  பொறியாளர் வெண்பா 
விலை ரூ: 120/- 
வெளியீடு : ஹெர் ஸ்டோரீஸ் பதிப்பகம் 
சென்னை -600004-தொடர்பு எண் : 7550098666