tamilnadu

img

வெற்று பிம்பத்தை போட்டு உடைக்க... - என்.சிவகுரு

சாவர்க்கரை வரலாறு மன்னிக்காது.
ஆர்.விஜயசங்கர்.
உயிர்மை பதிப்பகம்
விலை: ரூ.100

ஒரு புத்தகம் வாசிக்கும் போது ஏற்படும் உணர்வுகள், நம்மில் பல சிந்தனை மாற்றங்களை உருவாக்கும்.  நாம் பல ஆண்டு காலம் தேக்கி வைத்திருந்த பழைய நம்பிக்கைகளை உடைக்கும். அதுவும் சரித்திர ஆதாரங்களோடு தருவிக்கப்பட்டால், புத்துணர்ச்சி உருவாகும். எதிரிகளை எந்த களத்திலும் நேரிடையாக சந்திக்க புது உத்வேகம் கிடைக்கும். அம்மாதிரியான நூலை நமக்கு தந்துள்ளார் ஆர்.விஜயசங்கர். 79 பக்கங்களில் பல்வேறு தரவுகளோடு வலதுசாரிகள் இன்று கட்டமைக்கும் பிம்பத்தை போட்டு உடைக்க இது ஒரு கருத்து பேராயுதம்.

கலாச்சார தேசியம்

இந்துத்துவ சக்திகளின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவர் சாவர்க்கர். அவர் இந்தி யாவை இந்துத்துவ நாடாக மாற்றிட பல முக்கிய கருத்தோட்டங்களை பரப்பியவர். சனாதன குடும்பத்தில் (சித்பவன பிராமணர்) பிறந்து தீவிர இந்துத்துவ சிந்தனையை தன்னுடைய இளமை காலத்திலேயே வரித்து கொண்டவர்.  இந்தியா என்பது கலாச்சார ரீதியாக இந்துக் கள் மட்டுமே இருக்க வேண்டிய ஒரு நாடு. மற்றைய மதத்தினர் அனைவருமே அயல் நாட்டினர்; இங்குள்ளவர்களை துரத்தி விட்டு,  வஞ்சகமாக நாட்டை பிடித்தனர் என்று பேசிய வர்.  உதாரணமாக, முகலாய ஆட்சியை பற்றிய அவரின் மதிப்பீடு இது தான்: “பழைய முகலாய வம்சாவளியின் ஆட்சி இந்த மண்ணின் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அப்  பட்டமான பலாத்காரம் மூலமாக திணிக்கப் பட்டது. மேலோட்டமாக பார்த்தால் இது சரி என்றே தோன்றும். ஆனால் அதுவா உண்மை... அந்த உண்மையை இந்த புத்தகத்தில் ஆதா ரங்களோடு நிறுவியிருக்கிறார் நூலாசிரியர். இந்து கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டால், இந்து இனம் விரும்பும் வரையில் கிறித்து வர்கள், முஸ்லிம்கள் இங்கு இருக்கலாம் என்பது தான் சாவர்க்கரின் கொள்கையின் சாரம். இதிலிருந்து தான் அவரின் கலாச்சார தேசியத்தை நாம் உள்வாங்க வேண்டும். அது  எவ்வகையானது என்பதை இந்த நூல் பேசுகி றது. தேசியம் எனும் கருத்தாக்கத்தை ஒரு மதம் சார்ந்த கலாச்சாரத்தோடு முன்வைத்து பிற்போக்கு கொள்கைகளை முன்வைத்தார்.  இன்று பாஜக பேசும் இந்த கொள்கைக்கு அடித்தளம் இட்டவர், தீவிர இந்துத்துவத்தை முன்னிலைப்படுத்தியதும் இவரே. 

அந்தமான் சிறையின் வீரரா? 

தற்போதுள்ள ஆளும் பாஜக தங்களின் சுதந்திரப் போராட்டத்தின் அடையாளமாக வினாயக் தாமோதர் சாவர்கரையே முன்னி றுத்துகிறது. அதாவது தங்களின் மேல் உள்ள  தீராப்பழியை இவரை வைத்தே துடைக்க பார்க்கிறது. இந்தியாவின் சுதந்திர போராட்டத் தில் மக்களை திரட்டியோ, பெரும் போராட் டங்களையோ நடத்தியதாக அவர்களிடம் எதுவும் இல்லாத போது, சாவர்கார் அந்த மான் சிறை யில் அடைக்கப்பட்டு, பெரும் துன்ப துயரங்களுக்கு ஆளாகி, அதனாலேயே இங்கே பேரெழுச்சி உருவானதைப் போல ஒரு பெரிய பிம்பத்தை கட்டமைக்கிறார்கள்.  அவர் அந்தமான் சிறையில் இருந்தது, கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது என்னவோ உண்மை தான். ஆனால் சிட்டகாங் எழுச்சி யில் புரட்சிகாரர்களை போல், பிரிட்டிஷ் ஆட்சி யாளர்களுக்கு எதிராக போராடி உயிர் துறக்க வில்லை. பகத்சிங்,குதிராம் போஸ் ஆகி யோரை போல உயிரே போனாலும் சரி என்று தியாகம் செய்யவும் இல்லை என்பதை ஆய்வா ளர் சுபோரஞ்சன் தாஸ்குப்தா கூறுகிறார் எனும் ஆதாரம் இந்நூலில் உள்ளது. மற்றொரு மூத்த பத்திரிக்கையாளர் மானினி சாட்டர்ஜி சாவர்கரின் சிறைவாசம் எப்படிப்பட்டது இரு வரிகளில் அழகுற கூறு கிறார்: “அவரின் சிறை வாழ்க்கை, ஏகாதி பத்திய எதிர்ப்பை ஆழமாக்கவில்லை, மாறாக அதை முடித்து வைத்து விட்டது.”  அவர் மேலும் சொல்கிறார்: “சிறையின் சூழல் மனிதத் தன்மையற்றது, ஆனால் சாவர்க்கரை போல், மற்றைய எவரும் மன் னிப்பு கோரவில்லை. கம்பீரமாக கொடுமை களை எதிர்த்து நின்றனர். உயிர் துறந்தனர். விடு தலை வேள்வியில் தங்களை அர்ப்பணித்த னர்.”

சிறைக் கைதிகளின் ஒப்பீடு

இந்த நூலின் முக்கியமான சிறப்பு அந்த மான் சிறையில் சாவர்க்கரோடு இருந்த 8 போராட்ட தியாகிகளை பற்றி இதில் பதிவு செய்துள்ளார் ஆசிரியர். அந்த பக்கங்களை அவ்வளவு எளிதில் கடந்து விட முடியாது, சர்வ  நிச்சயமாக கண் கலங்க வைக்கும்.  அதில் இதோ ஒரு உதாரணம்... சத்ரா சிங்; சிறையில் போராட்டம் நடந்த காலத்தில் இவர் கண்காணிப்பாளரை அடித்து விட்டார். அதற்காக அவர் மயக்கமடையும் வரை அடித்த வார்டர்கள், அவரைஒரு கொட்ட டிக்குள் தள்ளினர். இரண்டு ஆண்டுகள் அவரை தொடர்ந்து  சித்வதை செய்தனர். அவ ருக்கென்று கம்பி வலையைக்கொண்டு வராண்டாவில் ஒரு கூண்டு அமைக்கப்பட்டது. அதற்குள்ளேயே தான் உண்பதும், உறங்கு வதும், இயற்கை உபாதைகளை தீர்த்து கொள்வது... கற்பனைக்கு எட்டாத துன்பம், கொடுமை.  ஆனால் சாவர்க்கரோ ஏன் நீங்கள் போராட்டங்களுக்கு தலைமை ஏற்கவில்லை என கேட்ட போது பின்வருமாறு பதிலளிக்கி றார்: “நான் போராட்டங்களுக்கு தலைமை ஏற்றி ருந்தால், அதிகாரிகள் அதை வாய்ப்பாக பயன் படுத்தி, எனக்கு, மற்றும் பல சிறை கைதி களுக்கு வழங்கியிருந்த பல சலுகைகளை விலக்கி, மீண்டும் என்னை தனிமை சிறையில் அடைத்திருப்பார்கள், மேலும் நான் இந்தியா வுக்கு கடிதம் எழுதும் சலுகைகள் பறிக்கப் பட்டிருக்கும்.”  ஆஹா என்னே ஒரு வீரம்... மன்னிப்பு கடிதம் எழுதிப் பிழைத்த இவ ரைத் தான் ‘வீர’ சாவர்க்கார் என அழைக்கி றார்கள். 

ஆங்கிலேயருக்கு ஆதரவாக...

பல முறை மன்னிப்பு கடிதம் எழுதி கடைசி யில் விடுதலை பெற்று இந்தியாவுக்கு வந்த சாவர்கர் அரசாங்கத்தின் போர் முயற்சிக்கு எவ்வாறு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதை பின்வரும் வரிகளில் சொல்கிறார்: “இந்தியாவின் பாதுகாப்பை பொறுத்த வரையில், இந்து நலன்களை பாதுகாக்கும் அரசாக இருத்தல் அவசியம். அதற்காக ஒத்து ழைப்பு முழுவதுமாக கொடுத்திடல் அவசி யம், போர் நடவடிக்கைகளில் பங்கேற்று நமது இந்து இனத்தையும் ராணுவமயமாக்க வேண்டும்”.  அதோடு சேர்ந்து அவர் ஆங்கில இராணு வத்திற்கு ஆள் எடுக்கும் முகாம்களை அமைப்ப தில், அதில் முன் நின்று இந்துக்களை சேர்த்தார்  என்பதை இந்த நூல் ஆதாரத்தோடு சொல்கி றது. அது மட்டுமல்ல, துவக்க காலத்திலி ருந்தே இந்திக்கு ஆதரவாகவும், உருது மொழிக்கு எதிராகவும் பல விஷம் தோய்ந்த கருத்துக்களை சொன்னவர் சாவர்க்கர்.  இப்படி இந்தநூல் ஒரு கோழையின் மற்றொரு பக்கத்தை நமக்கு தோலுரித்து காட்டு கிறது. 

கருணை மனுக்கள்

கருணை மனுக்கள் எழுதுவது வரலாற்றுப் பிழையல்ல.. ஆனால் அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான ஒரு ஒப்பீட்டை இதில்  கொண்டு வந்துள்ளார் நூலாசிரியர்.  காந்தி இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தை எவ்வாறு பார்த்தார், மாவீரன் பகத்சிங் எப்படி கம்பீரமாக தன்னுடைய கடி தத்தை ஆங்கில ஆட்சியாளர்களுக்கு எழுதி னார் என்பதை இந்த நூல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. “தூக்கிலிடப்படுவதை விட சுட்டுக் கொல்லப்படுவதையே நாங்கள் விரும்பு கிறோம்” என்றார் பகத்சிங்.  வலுவான சரித்திர ஆதாரங்கள், ஏராள மான தரவுகள், உண்மையை உரக்கச் சொல்லும் தகவல்கள் ஏராளமாக உள்ளன.  ஒரு சிறு புத்தகத்தில் இத்தனை அம்சங் களை உள்ளடக்கி விஜயசங்கர் சொல்லுவார் என புத்தகத்தை வாசிக்கத் துவக்கும் போது தெரியவில்லை. ஆனால் பக்கங்கள் போகப் போக ஒரு அப்பட்டமான கோழையை தங்கள் குறியீடாகக் காட்டி கொண்டு ஒரு வெற்று பிம்பத்தை கட்டமைக்க நினைக்கின்ற காவி கூட்டத்தை அம்பலப்படுத்துகிறார். அனைத்து தளத்திலும் சமர் புரிய உதவும் ஒரு ஆயுதம் இந்நூல் என்றால் மிகையாகாது.  80 பக்கங்களை கொண்டது தானே என எளிதாக இதை வாசித்து விட்டு அலமாரியில் வைத்திட முடியாது. முகமூடிகளைப் போட்டுக் கொண்டு இன்று நாம் பணியாற்றும் அனைத்து தளங்களிலும் ஊடுருவியிருக்கும் சங்கி களின் போலி தேசப் பற்றை, வெட்டி வீரத்தை அம்பலப்படுத்தும் முயற்சிகளுக்கு இளை ஞர்களை, முற்போக்காளர்களை நம் பக்கம் கொண்டு வர நம்மோடு எப்போதும் இருக்க வேண்டிய புத்தகம் இது.