tamilnadu

img

சு.வெங்கடேசன் நாடாளுமன்றம் செல்ல வேண்டும்

தமிழின் பெருமையை மீட்டெடுக்க பாடுபட்ட எழுத்தாளர்களின் வரிசையில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பிட வேண்டும் என மதுரை தொகுதி மக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து வியாழனன்று காலை மதுரை வண்டியூர் ரிங் ரோடு மைதானத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் பிரச்சாரப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. திமுக வடக்கு மாவட்டச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மு.க.ஸ்டாலின் உரை யாற்றினார். மோடி அரசையும் எடப்பாடி அரசையும் வீழ்த்த வேண்டியதன் அவசியத்தை விரிவாகவிளக்கிய அவர், வேட்பாளர் சு.வெங்கடேசனின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது எனக் குறிப்பிட்டு பேசியது வருமாறு: வருகின்ற ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி, நடைபெற இருக்கக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில், மத்தியில் சர்வாதிகார உணர்வோடு மோடி தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாசிச பா.ஜ.க ஆட்சியை அப்புறப்படுத்தவேண்டும் என்ற உணர்வோடு நீங்கள் இங்கு திரண்டு வந்திருக்கின்றீர்கள். இங்கு நான் நம் தோழமைக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த வேட்பாளர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை தேடித் தரவேண்டும் என்று கேட்க வந்திருக்கின்றேன்.


என்னுடைய பிரச்சார பயணத்தை கடந்த 20 ஆம் தேதியில் இருந்து, நான் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறேன். அந்தப் பயணத்தை துவங்குவதற்கு முன்னால் 19ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல்அறிக்கையை வெளியிட்டுவிட்டு தான் நான் என்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கின் றேன். தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நேரத்தில் நான் குறிப்பிட்டுச் சொன்னேன், இந்த தேர்தல் அறிக்கை என்பது கதாநாயகன் மட்டுமல்ல கதாநாயகியாகவும் விளக்கிக் கொண்டிருக்கக்கூடிய தேர்தல் அறிக்கை, என்று

நான் பெருமையோடு எடுத்துச் சொன்னேன். இந்தத் தேர்தல் அறிக்கையில் எத்தனை யோ உறுதிமொழிகள் வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றது. அதில் ஒன்றை நான் 

துவக்கத்திலேயே குறிப்பிட்டுக்காட்டியிருக்கின் றேன். அது என்னவென்று கேட்டால், கீழடியில் அகழாய்வு மற்றும் தொல்லியல் ஆய்வுப் பணி கள் தொய்வில்லாமல் தொடர வேண்டும், அப்படிதொடர்வதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நான் குறிப்பிட்டிருக்கிறேன். இதை இங்கு குறிப்பிட்டுச் சொல்வதற்கு என்ன காரணம் என்று கேட்டால். கீழடி என்று பேசிக் கொண்டிருக்கிறோமே அதை வெளிக் கொண்டுவந்ததில் முக்கிய காரணகர்த்தா தான், இதோ இந்த தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடக்கூடிய வேட்பாளர் நம்முடைய அருமை சகோதரர் சு.வெங்கடேசன் அவர்கள். இன்றைக்கு கீழடி பற்றி நிறைய பேர் பேசிக்கொண்டு இருக்கலாம். ஆனால், ஆரம்ப கட்டத்தில் இதனைப் பற்றி பேசுவதற்கு என்று குறிப்பிட்ட சிலர்தான் இருந்திருக் கின்றார்கள்.


அதில் முக்கியமான ஒருவர் தான் இதோ வேட்பாளராக நிற்கக்கூடிய நம்முடைய வெங்கடேசன் அவர்கள். தமிழ் பெருமையை மீட்டெடுக்க பாடுபட்ட எழுத்தாளர்கள் வரிசையில் இன்றைக்கு வெங்கடேசன் அவர்கள் இடம் பெற்று இருக்கின்றார். அவர்தான் மதுரை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி யிடக்கூடிய வேட்பாளராக உங்களுக்கு கிடைத்திருக்கின்றார். மதுரையை மையமாக வைத்து காவல் கோட்டம் என்ற, நாவலை எழுதி அதன் மூலம் சாகித்ய அகாடமி விருது பெற்றவர் தான், வேட்பாளராக இன்றைக்கு நிற்கின்றார். அவர் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி என்ற நாவலை சென்னையில் வெளியிட்ட பெருமை எனக்கு உண்டு. வெளியிட்ட நேரத்தில் அப்பொழுது நான் குறிப்பிட்டு சொன்னேன்,தமிழக எழுத்தாளர்கள் சு வெங்கடேசனைப் போல் எழுத வேண்டும் என்று அன்றைக்கு நான் தெரிவித்தேன். ஆனால் இன்றைக்கு என்ன கோரிக்கை வைக்க வந்திருக்கின்றேன் என்று சொன்னால், சு.வெங்கடேசனை போன்ற எழுத்தாளர் நாடாளுமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை உங்களிடத்தில் எடுத்து வைக்க விரும்புகின்றேன். மதுரையைக் காப்பாற்ற துடித்துக் கொண்டிருக்கக்கூடிய இவரைப் போன்ற ஒருவர் உங்கள் பிரதிநிதியாக, உங்கள் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக செல்லுகின்ற நேரத்தில் அவருக்கு கிடைத்த பெருமை மட்டுமல்ல, எங்களுக்கு கிடைக்கின்ற பெருமை மட்டுமல்ல, இந்தத் தொகுதியில் இருக்கக்கூடிய உங்களுக்கும் கிடைக்கக்கூடிய பெருமை என்பதை உணர்ந்து நீங்கள் அவரை ஆதரிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். இவ்வாறு அவர் கூறினார்.


முன்னதாக பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், வேட்பாளர்சு.வெங்கடேசன் ஆகியோர் பேசினர். பொதுக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்பட தோழமைக் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

;