தமிழகம் உள்பட இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றின் மைல்கற்களாய் அமைந்த நிகழ்வுகள், உழைக்கும் வர்க்கத் தலைவர்களது வாழ்க்கைப் பய ணங்கள்... இவை பற்றிய துல்லியமாகத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் நம்பிக் கையோடு நாடக்கூடிய ஒருவர் இருக்கிறார் - தோழர் என். ராமகிருஷ்ணன். கம்யூனிஸ்ட் கட்சியில் பத்திரிகையாளராக பணியைத் தொடங்கி, கட்சியின் மத்தியக்குழு அலுவலகத்தில் பல ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றி, தற்போது கட்சியின் வரலாற்றையும், தலைவர் களின் வாழ்க்கையையும் தொகுத்தளிக்கிற நடமாடும் தகவல் களஞ்சியமாக அரும் பணியாற்றி வருபவர்.
1942ஆம் ஆண்டு பிறந்தார். இளம் வயதிலேயே இவரது தந்தை இறந்து விட்டதால் இவரது மூத்த சகோதரர்களாலும் சகோதரிகளாலும் வளர்க்கப்பட்டார். அந்த மூத்த சகோதரர்களில் ஒருவர்தான் விடுதலைப்போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என். சங்கரய்யா. ராமகிருஷ்ணன் பிறந்த போது சங்கரய்யா மதுரை மாநகரில் கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவராக விளங்கி னார். ராமகிருஷ்ணன் தமது மாணவப் பருவத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியின்பால் ஈர்க்கப்பட்டதற்கு இந்தப் பின்னணியும் ஒரு காரணம். பள்ளி மாணவராக இருந்த போது கட்சியின் அகில இந்திய 3வது மாநாடு 1952இல் மதுரையில் நடைபெற்றது. தமுக்கம் மைதானத்தில் வைகை வெள்ளம் புகுந்தது போலத் திரண்ட பேரணியைப் பார்த்ததும், அதில் இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தோழர் ஹரிபாலிட் பேசிய தைக் கேட்டதும் இவருடைய சிந்தனையில் மின்விளக்கொளியைப் பாய்ச்சியது போல் இருந்தது. அதிலிருந்தே இவர் மனதளவில் கம்யூனிஸ்ட்டாகிவிட்டார். கட்சி அலுவல கத்திற்கு செல்ல ஆரம்பித்தார். நிறைய நூல்களைப் படிக்கத் தொடங்கினார்.
பள்ளியிறுதி வகுப்பு முடித்த பிறகு, அந்த இளம் வயதிலேயே மதுரையில் ‘ஜனசக்தி’ இதழின் செய்தியாளராகச் செயல்பட ஆரம்பித்தார். எதிர்காலத்தில் ஒரு சிறந்த எழுத் தாளராக உருவாவதற்கு தொடக்கப்புள்ளியாக அமைந்தது ‘ஜனசக்தி’ நிருபர் பணிதான். அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்றிருந்தவர் தோழர் ஜீவா. அவருடன் ஏற்பட்ட தொடர்பு தன்னைச் செழுமைப்படுத்தியது என்று குறிப்பிடுகிறார் என்.ஆர். 1961ல் சென்னை யில் ‘ஜனசக்தி’ அலுவலகத்தில் துணையாசிரியராகச் சேர்ந்தார். கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தத்துவார்த்த, கொள்கை பிரச்சனையில் உட்கட்சி போராட்டம் நடந்த பின்னணி யில் 1963ஆம் ஆண்டு ‘தீக்கதிர்’ தொடங்கப்பட்டது. என். ஆர். காலையில் ‘ஜனசக்தி’ அலுவலகத்திலும், மாலையில் ‘தீக்கதிர்’ அலு வலகத்திலும் பணியாற்றினார். 1964ஆம் ஆண்டு உருவான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பய ணத்தில் தானும் இணைந்துகொண்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது அன்றைய மத்திய காங்கிரஸ் அரசு அடக்கு முறையை ஏவியது. முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். தோழர்கள் என்.ஆர்.கோவை ஈஸ்வரன் இருவரும் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையிலடைக்கப்பட்ட னர். சிறையில் அவர்களை வரவேற்றவர்கள் பி. ராம மூர்த்தி உள்ளிட்ட தலைவர்கள். பின்னர் என்.ஆர். ‘தீக்கதிர்’ பணியில் முழுமையாக ஈடுபட்டார்.
1966ஆம் ஆண்டு சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக சேர்க்கப்பட்டார். பல ஆண்டுகள் ‘ஜனசக்தி’ இதழின் நிருபராக பணியாற்றினாலும் கட்சி உறுப் பினராக சேர்க்கப்படவில்லை. அக்காலத்தில் கட்சி உறுப்பினராவது அவ்வளவுகடினமானது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய அரசியல் தலைமைக்குழுவின் முடி வின்படி தோழர் என்.ஆர். தில்லி சென்று கட்சியின் அகில இந்திய மையத்திலிருந்து செயல்பட்டார். அங்கு கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பி. சுந்தரய்யா, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பி. ராமமூர்த்தி, ஏ.கே. கோபாலன், ஹர்கிஷன் சிங் சுர்ஜித், இ.எம்.எஸ். நம்பூதிரிபாத், ஜோதிபாசு, பி.டி. ரணதிவே உள்ளிட்ட கட்சியின் நவரத் தினங்களோடு நெருங்கிப் பழகக் கிடைத்த வாய்ப்பு தனது பெரும்பேறு என நெகிழ்கிறார் என்.ஆர். “தில்லியில் இருந்தபோது, தூக்குமேடை வீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகி யோரது வழக்கில் சம்பந்தப்பட்டவர்களும் அந்தமான் சிறையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களுமான சிவவர்மா, பண்டிட் கிஷோரிலால், டாக்டர் கயாபிரசாத் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது,” என்று நினைவுகூர்கிறார். எப்பேற்பட்ட வாய்ப்பு அது! தோழர் பிரகாஷ் காரத் 1971ல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சேர்வதற் காக தில்லி சென்றார். தன்னிடம் தோழர் வி.பி. சிந்தன் கொடுத்திருந்த அறிமுகக் கடிதத்தோடு அவர் ராமகிருஷ்ணனைச் சந்தித்தார். இவர்தான் பிரகாஷ் காரத்தைக் கட்சியின் தில்லி மாநிலச் செயலாளருக்கு அறிமுகப்படுத்தினார். என்.ஆர். ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் கற்றுக் கொண்டு கட்சி மையத்தில் பணி யாற்றினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக இருந்தவர் தோழர் ஏ.கே. கோபாலன். அவருக்கு வரும் கடிதங்களைப் பராமரிப்பது, அவர் அரசுக்கு அனுப்ப வேண்டிய மனுக்களைத் தயாரிப்பது போன்ற பணிகளையும் என்.ஆர். செய்து வந்தார். மேலும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் தில்லிக்கு வருகிறபோ தும் அவர்கள் தங்கள் மாநிலங்களுக்குத் திரும்பிச் செல்கிறபோதும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை இவர்தான் செய்வார். வங்கச் சிறைகளிலும் அந்தமான் சிறை களிலும் 28 ஆண்டுகள் அடைக்கப் பட்டிருந்த தோழர் கணேஷ்கோஷ் 1967 முதல் 1971 வரை மக்களவை உறுப்பினராக இருந்தார். அவருடைய அன்பிற்குரிய தோழனாகப் பழகிடும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. அதேபோல், ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலா ளர் பி.சி. ஜோஷியுடன் கலந்துரையாடும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்தது. 1982இல் தோழர் என்.ஆர். கட்சி மையத்திலிருந்து செயல்பட வேண்டுமென்று அரசியல் தலைமைக்குழு முடிவு செய்தது. இரண்டுமுறை அரசியல் தலைமைக்குழு கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு அதில் விவாதிக்கப்படும் தீர்மானங்களை உரிய திருத்தங்களுடன் எழுத்தாக்குவதற்குப் பணிக்கப்பட்டார். முக்கியமான அந்தப் பணியையும் திறம்படச் செய்தார் என்.ஆர்.
மதுரைக்கு வந்தபிறகு குடும்பத்தைப் பராமரிக்கவென ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். ஆயினும் தினமும் மாலை ‘தீக்கதிர்’ அலுவலகத்திற்கு வந்து விடுவார். கட்சியின் ஆங்கில வெளியீடுகளைத் தமிழாக்கம் செய்துகொடுப்பார். 1985இல் தோழர் என். வரதராஜன் கேட்டுக்கொண்டதற்கிணங்க ‘தீக்கதிர்’ மொழியாக்கத்தோடு, விளம்பரப் பிரிவிலும் பணியாற்றி வந்தார். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரான தோழர் முசபர்அகமத் வாழ்க்கை வரலாற்றை என்ஆர் நூலாக எழுதி, அது 1988இல் வெளி யானது. அதைத் தொடர்ந்து தோழர் பாலாஜி (‘சவுத் விஷன்’ பதிப்பகம்) இவரது 22 புத்த கங்களை வெளியிட்டார். தன்னை பாலாஜிதான் புத்தக எழுத்தாளராக்கினார் என்று என்.ஆர். நன்றியறிதலோடு கூறுகிறார். அடுத்தடுத்து எழுதிக்கொண்டே இருந்தார். எழுதித் தள்ளினார் என்றார் மிகையாகாது. ‘அயர்லாந்து - 800 ஆண்டு விடுதலைப்போர்’, ‘மகத்தான பிரெஞ்சுப் புரட்சி’, ‘நீதிக்குப் போராடும் பாலஸ்தீன் மக்கள்’, ‘உலகின் முதல் கம்யூனிஸ்ட் சதி வழக்கு’, ‘இங்கி லாந்தை உலுக்கிய சாசன இயக்கம்’, ‘ரஷ்யப் புரட்சி புதிய பார்வை’, ‘தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் (1917-1984)’, ‘தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்(1964-2014)’, ‘தமிழக சுதந்திரப் போரில் கம்யூனிஸ்ட்டுகளின் மகத்தான பங்கு’ -இவை இவரது குறிப்பிடத்தக்க நூல்க ளில் சில. காரல் மார்க்ஸ், ஜென்னி, ஆங் சான் சூ கி, மார்ட்டின் லூதர் கிங், டாக்டர் அம்பேத்கர், ஈவெரா பெரியார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நவரத்தினங்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் என்.ஆர். வழங்கியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நவரத்தினங்கள் பி.டி.ரணதிவே, பி.ராமமூர்த்தி, சமர்முகர்ஜி, எம்.கே.பாந்தே, கே.ரமணி ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை இவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இவர் ஆங்கிலத்தில் எழுதிய பி.டி.ரணதிவே வாழ்க்கை வரலாற்றை கட்சியின் மலையாள நாளேடாகிய ‘தேசாபிமானி’ தொடராக வெளி யிட்டது. இவர் எழுதிய கே.ரமணி, லீலாவதி ஆகிய வரலாறுகளை தெலுங்கு மொழியில் ‘பிரஜாசக்தி’ வெளியிட்டுள்ளது. இவர் எழுதிய பி.ராமமூர்த்தி வரலாறு கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவர் ஆங்கிலத்தில் எழுதிய சமர்முகர்ஜி வாழ்க்கை வரலாறு வங்காள மொழியில் வந்துள்ளது. ‘மார்க்சிஸ்ட் கட்சியின் நவரத்தினங்கள்’ தற்பொழுது மராத்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகிறது. ‘அம்பேத்கர் வாழ்க்கை யும் - பங்களிப்பும்’ பற்றிய இவருடைய நூல் முக்கியத்துவம் வாய்ந்தது.
தற்போது உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சுருக்கமான வரலாறு (1844-1917) என்ற 600 முதல் 700 பக்கங்களை கொண்ட நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். படிப்பதையும் எழுதுவதையுமே முழுநேரப் பணியாக தோழர் என்.ஆர். செய்து வருகிறார். இத்தகைய வரலாறுகளை என்.ஆர். எழுதவில்லை என்றால் கட்சியின் வீரமிகு அத்தியாயங்களும், கட்சித் தலைவர்களின் அர்ப்பணிப்பு மிக்க புரட்சிகரச் செயல்பாடுகளும் பற்றி இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாமலேயே போயிருக்கும் என்றால் மிகையல்ல. இவருடைய துணைவியார் குருவம்மாள் 14 ஆண்டுகளுக்கு முன் காலமாகி விட்டார். மகன் மணவாளன், மகள் சாந்தி இருவரும் கட்சி மீது பற்றுக் கொண்டவர்கள். எளிமையை, பணிவைத் தனது அடையாளமாகக் கொண்டவர் தோழர் என்.ஆர். கட்சிக்கும், தான் வாழும் சமூகத்திற்கும் தோழர் என்.ஆர். ஈடுபாட்டோடும் அர்ப்பணிப் போடும் செய்த, தொடர்ந்து செய்துவருகிற எழுத்துப்பணி பாராட்டத்தக்கது - பின்பற்றத்தக்கது.
‘களப்பணியில் கம்யூனிஸ்டுகள்’ பகுதியில் எழுதியது.