tamilnadu

img

மகாகவி பாரதி நினைவு நாள் செப்டம்பர் 11 சொல்லிலும் செயலிலும் சமத்துவக் கோட்பாடு

வி.சக்கரச் செட்டியார்

பாரதியார் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தேன் என்ற நினைவு உள்ளத்திலே இன்பத் தேன் பாய்ச்சுகிறது. அதுவும் அந்த அலைபட்ட நாட்களிலே இளைஞனாக இருந்தேன் என்பதை எண் ணும்போது பேரின்பமாகத் திகழ்கிறது. கற்பனைக் கூண்டிலே நின்று கொண்டு, ‘கீழே நிற்கும் மனித ஜீவிகளே’ என்று பேசும் உச்சாம்பிக் கொம்பின் பண்பாட் டைச் சேர்ந்தவரல்ல பாரதியார். அவர் லட்சியக் கவி. மக்களிடையே வாழ்ந்து மக்களின் சுகதுக்கங்களைக் கண்டு, பகிர்ந்து, விண்டு, கவி பாடிய எதார்த்தக் கவி. தாய்த் திருநாடு  விடுதலை பெற வேண்டுமென்ற தேசாபிமான ஆவேசம் அன்று அலைவீசியது. சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று பாலகங்காதர திலகர் முழக்கம் செய்த காலம். அந்தக் காலத்தின் கால மானியாக வும், கண்ணாடியாகவும் விளங்கினார் பாரதியார். அவரது இளம் பிராயம் குறித்து எனக்கு அதிகமாகத் தெரியாது. ஆனால் அவர் சென்னைக்கு வந்தது  முதல் அவரு டன் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் பாக்கிய மும் எனக்குக் கிடைத்தன. பாரதியார் இதர நண்பர் சிலர் சேர்ந்த ஸ்வதேசி வஸ்து பிரச்சார சபை என்று ஒரு சபையைத் தோற்றுவித்தோம். தேசிய அரங்கில் காந்திஜியின் தலைமை ஏற்படாத கட்டம். ஸ்வதேசியைப் பரப்ப இந்த ஸ்தாப னம் அரும்பணி செய்தது. பாரதியார் இதன் ஜீவநாடி. ஆக்கத் துறையில் இந்த வேலை யைச் செய்துவந்த நாங்கள் அந்நிய ஆதிக் கத்திலிருந்து வீரசுதந்திரம் பெறவேண்டும் என்பதை உணர்ந்தோம். அன்று தேசிய இயக்கத்தில் இமயம் போல விளங்கிய திலகரின் அரசியல் கொள்கைகளைப் பரப்பி வந்தோம். பாரதியார் பெரிய திலகர் பக்தன். தேசமே பேச்சு. விடுதலையே மூச்சு என்று ஆவேசமூட்டும் அமர கவிகளை பாரதியார் பாடிவந்தார்.

அவர் லட்சியக் கவி. தேசிய இயக்கத்தில் நடைமுறை, செயல்முறை கஷ்டங்கள் எண்ணற்றவை. ஆனால், இவற்றைக் கணக்குப் பார்த்துக் கொண்டு குழைந்து நிற்பவரல்ல பாரதி. லட்சியவாதத்துடன், கவியின் உத்வேகத் துடன் விடுதலைப் போராட்டத்தை அவர் பார்த்தார். வெற்றி நிச்சயம் என்ற உறுதியில் திளைத்தார். தமிழிலக்கியம் என்னும் தேனை மாந்தி மாந்தி உண்டு திளைத்தவர் பாரதியார். ஆங்கில இலக்கிய நறுநீரையும் பருகினார். பிரெஞ்சுப் புரட்சியில் ஜனநாயக சக்தி களும் சுதந்திர சக்திகளும் தாண்டவமாடி எழுந்தன அல்லவா? இவற்றைக் கண்டு ஆவேசமடைந்து பாடிய ஷெல்லியும் வர்ட்ஸ்வர்த்தும் பாரதியின் கருத்தைக் கவர்ந்தனர்; சிந்தனையைக் கிளறினர். அந்த நாட்களில் காங்கிரசின் தலைமைப் பீடம் மிதவாதிகள் கையில் இருந்தது. திலகருடன் கைகோர்த்தக் கொண்டு தீவிரக் கொள்கைகளைப் பின்பற்றிய பாரதியார் தீவிரவாதியாகக் கருதப்பட்டார். சூரத் காங்கிரசில் திலகர் பக்கம் நின்று போராடினார் பாரதியார். திலகர் வழியில் தொண்டாற்ற முற்பட் டார். அந்த நாட்களில்தான் உணர்ச்சித் ததும்பும் உயிரும் உரமும் மிக்கப் பாடல்கள் பலவற்றை எழுதினார். காங்கிரஸ் மேடை களில் தாமே அவற்றைப் பாடுவார். கொந்த ளிக்கும் கடல் ஒருபுறம், செந்தமிழில் புனைந்த கவிப்புயல் ஒருபுறம் - கடற்கரை யில்  கூடும் மக்களின் உள்ளத்தைக் கிளர்ந் தெழச் செய்தன.  சுதேசமித்திரன் பத்திரிகையில் உதவி ஆசிரியராகவும், பின்னால் இந்தியா பத்திரிகை அதிபராகவும் பத்திரிகை உலகில் பாரதியார் பணியாற்றினார். சர்க்கா ரின் ஷாத்திரக் கண் கவிஞர் மீது பாய்ந்தது. கடும் தமிழில் அவர் எழுதிய கட்டுரைகள் அவர்களுக்கு ஆத்திரமூட்டின. பாரதியார் கைது செய்யப்படலாமென்ற ஹேஸ்யம் பரவியது.

 பாரதியார் புதுச்சேரிக்குச் சென்றார். சிறைவாசத்திற்கு அஞ்சி அவர் செல்ல வில்லை. அன்று அவர் சிறைப்படுத்தப்பட்டி  ருப்பாரானால் நீண்ட தண்டனை கிடைத் திருக்கும். வெளியே இருந்து செய்ய வேண்டிய பல வேலைகள் தடைப்பட்டி ருக்கும். அன்று நீதியெல்லாம் சர்க்கா ருக்குத் தாளம் போடுவதுதான். புதுவை சென்ற பிறகும் எனக்குத் தகவல் அனுப்பிவந்தார் பாரதியார். தான் பிரசுரித்த பாடல்களைக் கொண்ட நூல் களை அனுப்பினார். அரவிந்தர் ஆசிரமத் தின் சூழல்நிலை அவ்வளவாக அவருக்குப் பிடிக்கவில்லை. வங்காளிகளின் மாகாணப் பித்தும், அரவிந்தரைத் தாமே உரிமை கொண்டாடும் போக்கும் அவருக்குக் கசந்தன. புதுவையில் வாழ்ந்தபோது பாரதியார் பணமுடையால் பெரிதும் கஷ்டப்பட்டார். அவருக்கு வறுமை புதிதல்ல. அவரது நண்பர்களான நாங்கள் நிதி திரட்டி சிறுசிறு தொகைகளை அனுப்பி வருவதுண்டு. ஒருமுறை டென்மார்க்கைச் சேர்ந்த பாதிரி யார் ஒருவர் பாரதியாரைக் கண்டு அவரது புலமையைப் பாராட்டி பொருளுதவியும் செய்தார். ஜாதி, மத, இன வேறுபாடுகள் அற்ற ஓர் உன்னத புருஷன் அவர். இந்தப் பண்பாடுகள் செறிந்த தேசபக்தியையே அவர் பின்பற்றினார்; வலியுறுத்தினார். சமத்துவம், அபேதம் என்ற கோட்பாடு களை வெறும் சிந்தனை யளவில் சிறைப்படுத்தி வைக்கவில்லை அவர். சொல்லிலும் செயலிலும் அவற்றை அனுச ரித்து நடந்துவந்தார். அவரது லட்சியமான சமுதாய, பொருளாதார விடுதலையைப் பூர்த்தி செய்ய வேண்டிய பணி இருக்கிறது. தமிழ் மக்கள் தமது தனிப்பெரும் கவியான பாரதியாரின் பெருமைகளை உணர்ந்து அவரது நாமம் என்றென்றும் பசுமையுடன் உள்ளத்தில் குடிபெறும் வகையில் தொண்டாற்ற வேண்டும். வாழ்க பாரதி!

நன்றி: “ஜனசக்தி” (11.9.1955)  தகவல்: தி.வரதராசன்

;