tamilnadu

img

இந்தியா கூட்டணி எழும்! மோடி ஆட்சி வீழும்! - கே.பாலகிருஷ்ணன்,

18ஆவது மக்களவைத் தேர்தலின் 7 கட்ட வாக்குப்பதிவுகளும், ஜூன் 1 அன்றுடன் நிறைவு பெற்றுள்ளன. இந்திய ஜனநாயகத்தின் மிகப் பெரும் தேர்தல் நடவடிக்கை நடந்து முடிந்துள்ளது. புதிய ஆட்சி அமைக்கப் போவது யார்? என்ற முடிவுகள் ஜூன் 4 அன்று வாக்கு எண்ணிக்கையில் தெரிய வுள்ளது. இமயம் முதல் குமரி வரை; தார் பாலை வனம் முதல் திரிபுரா எல்லை வரை இந்திய தேசத்தின் எட்டுத்திக்கிலும் மக்களிடையே கடந்த சுமார் இரண்டு மாத காலமாக பெரும் எதிர் பார்ப்பையும், தீவிரமான அரசியல் உரையாடலை யும் எழுப்பி நிறைவு பெற்றுள்ளது தேர்தல். இந்த தேர்தலில் கடந்த பத்தாண்டு காலமாக நாட்டை பின்னோக்கி இருண்ட காலத்திற்கு இழுத்துச் செல்லும் வலதுசாரி இந்துத்துவா எதேச்சதிகார ஆட்சி நடத்தி வரும் மோடி தலை மையிலான பாஜக கூட்டணி அரசு ஒருபுறம்; அதற்கு எதிராக, இந்திய அரசியலமைப்புச் சட்டத் தையும் அது உயர்த்திப்பிடிக்கும் மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு எனும் உயரிய விழுமி யங்களையும் பாதுகாப்பதற்காகவும், மக்கள் நலன் களை முன்னிறுத்துவதற்காகவும் முன்னெப் போதையும் விட - அரசியல் மாறுபாடுகளை எல்லாம் கடந்து - பாஜக அரசை வீழ்த்தியே தீரு வோம் என்ற ஒரே நோக்கத்தோடு ஒன்றுபட்டு களம் கண்டிருக்கிற 28 எதிர்க்கட்சிகளின் அணி சேர்க்கையான இந்தியா கூட்டணி மறுபுறம் - என மிகப் பெரும் அரசியல் போரை நடத்தியுள்ளன.

தோல்விபயம் அதிகரிக்க அதிகரிக்க...  

இந்த தேர்தல் பிரச்சாரக் களம் இந்திய நாடு இதுவரையிலும் கண்டிராத ஒரு மோசமான பிரதமரை கண்டது, அவரது தரம் தாழ்ந்த நாலாந்தரப் பேச்சுக்களுக்கு காதுகொடுக்க நேர்ந்தது. முற்றிலும் இஸ்லாமிய சிறுபான்மை மக்களை குறிவைத்து தனது பிரச்சாரம் நெடுகிலும் பேசிய அவர், மக்களவைத் தேர்த லில் ஒவ்வொரு கட்டம் முடியும் போது - மக்கள் தங்களை அனைத்துப் பகுதிகளிலும் நிராக ரித்துக் கொண்டே வருகிறார்கள் என்பதை உணர்ந்து, தோல்வி பயம் மேலும் அதிகரிக்க அதிகரிக்க தனது மதவெறிப் பேச்சையும், இழிவான அர்ச்சனைகளையும் தீவிரப்படுத்தத் துவங்கினார்.  உங்களிடமிருந்து சொத்துக்களை எல்லாம் பறித்து இஸ்லாமியர்களிடம் கொடுத்து விடு வார்கள்; உங்கள் தாலிகளைப் பறித்து இஸ்லா மியர்களிடம் கொடுத்து விடுவார்கள்... என்ற பேச்சில் துவங்கி, இந்தியா கூட்டணியினர் முஜ்ரா நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற இழி வான பேச்சுவரை பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரைகளால் இந்திய தேர்தல் அரசி யல் களங்கப்பட்டு நிற்கிறது. அவருக்கு இணை யாக அமித்ஷா உள்ளிட்ட அவரது துதிபாடிக ளும், அமைச்சர்களும் மதவெறியையும், இழி பேச்சுக்களையும் எதிர்க்கட்சியினர் மீதான துவேஷங்களையும் கட்டவிழ்த்து விட்டார்கள்.  இந்தப் பேச்சுக்கள் அனைத்தும், முதலில் நாங்கள் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்துவிடுவோம் என்ற இறுமாப்பும் வெறித்தனமும் நிறைந்த அறிவிப்பில் துவங்கி, நாட்கள் செல்லச் செல்ல, மக்கள் தங்களை அதிகார பீடத்திலிருந்து துரத்தி அடித்து விடுவார்களோ என்ற தோல்வி பயம் அதிகரித்து, அதன் விளைவாக இழி நிலையை நோக்கி பயணப்பட்டதை இந்திய மக்கள் இந்தப் பிரச்சாரக் காலம் முழுவதிலும் கவனித்துக் கொண்டே இருந்தார்கள்.

முற்றிலும் மாறுபட்ட நிலை

கடந்த தேர்தலில் பாஜக மட்டும் 303 இடங்க ளில் வெற்றி பெற்றது. அவர்களது கூட்டணி மொத்தம் 354 இடங்களில் வெற்றி பெற்றது. 2019இல் நடைபெற்ற 17ஆவது மக்களவைத் தேர்தலில், அதற்கு முன்பு ஐந்தாண்டுக் காலத்தில் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி உள்ளிட்ட கொடூரமான தாக்குதல்களை நடத்தி இந்திய மக்களின் வாழ்வாதாரங்களை எல்லாம் மோடி அரசு நொறுக்கி சிதைத்திருந்தபோதிலும் கூட மீண்டும் அதிக இடங்களோடு ஆட்சிக்கு வந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலை ஏற்பட அடிப்படைக் காரணம் 2019 தேர்தலில் மோடி ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்ற முழக்கம் எல்லோராலும் எழுப்பப்பட்டதே தவிர அதற்கான செயல் திட்டத்தோடு அனை த்து எதிர்க்கட்சிகளும் தமிழ்நாடு தவிர நாட்டின் பலபகுதிகளிலும் வலுவான முறையில் ஒன்று படவில்லை என்பதுதான். ஆனால் 2024இல் 18ஆவது மக்களவைத் தேர்தலில் அத்தகைய நிலை இல்லை. இது முற்றிலும் வேறுபட்டது. இந்தத் தேர்தலில் பாஜகவை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றுவோம்; அதற்காக அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயக, முற் போக்கு சக்திகளும் முழு அளவில் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்ற கருத்தை இந்திய அரசி யல் களத்தில் வலுவாக விதைத்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. பாஜக அரசை அகற்றி, மத்தி யில் மதச்சார்பற்ற மாற்று அரசை உருவாக்கு வோம்; நாடாளுமன்றத்தில் இடதுசாரிகளின் பலத்தை அதிகரித்து, மாற்று அரசியல் பாதை யை செதுக்குவோம் என சூளுரைத்தது மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இத்தகைய வலுவான பிரச்சாரமும், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் திமுக, ஆர்ஜேடி, சமாஜ்வாதி, ஆம்ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், சிவசேனை(உத்தவ்) தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட அரசியல் இயக்கங்களின் வலுவான பாஜக - இந்துத்துவா எதிர்ப்பும், காங்கிரசின் முய ற்சிகளும் ஒன்றிணைந்தன. அதன் விளை வாக பாஜகவை ஆட்சிக் கட்டிலிலிருந்து தூக்கி யெறிவோம் என்ற அறைகூவலுடன் இந்தியா கூட்டணி பெரும் எழுச்சியுடன் எழுந்தது.

தென்மாநிலங்களில்  ஓரிடம் கூட கிடைக்காது

கடந்த தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்ட ணியால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய தென் மாநிலங்களில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. அதே நிலைதான் தற்போ தும் தொடரப் போகிறது.  கர்நாடகாவில் கடந்த முறை 25 இடங்க ளில் வென்றார்கள். தெலுங்கானாவில் நான்கு இடங்களை கைப்பற்றினார்கள். தற்போது அந்த இரண்டு மாநிலங்களிலும் நிலைமை முற்றிலும் பாஜகவிற்கு எதிராக மாறியிருப்ப தைப் பார்க்கிறோம். இந்த மாநிலங்களில் சட்ட மன்றத் தேர்தல்களிலும் கூட பாஜக வெற்றி பெற முடியவில்லை. சட்டமன்ற தேர்தல்களுக்கு பிந்தைய நிலைமை பாஜகவுக்கு இன்னும் பாத கமாக மாறியிருக்கிறது. எனவே தென்னிந்தியா முழுவதும் பாஜக துடைத்தெறியப்படுவது உறுதி என்ற நிலையே உள்ளது. 

கடந்த தேர்தலிலேயே  உ.பியில் குறைந்த இடங்கள்

மேற்கு வங்கத்தில் கடந்த தேர்தலில் 18இடங்களிலும், ஒடிசாவில் 8 இடங்களிலும் பாஜகவெற்றி பெற்றது. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா ஆகிய மாநி லங்களில் கணிசமான இடங்களை பாஜக பெற்றது. ஆனால் கடந்த 17ஆவது மக்கள வைத் தேர்தலிலேயே கவனிக்க வேண்டிய ஒரு அம்சம் என்னவென்றால் உத்தரப்பிரதேசத்தில் அதற்கு முந்தைய 16ஆவது தேர்தலில் 73 இடங்களை பெற்றிருந்த பாஜக 17ஆவது தேர்த லில் 61 இடங்களைத்தான் பெற்றது என்பதுதான்.  மேற்கண்ட மாநிலங்களில் கடந்த தேர்த லில் இருந்த நிலை தற்போது முற்றாக மாறி யுள்ளது. மேற்கு வங்கத்தில் கடந்த முறை பின்தங்கியிருந்த இடது முன்னணி - காங்கிரஸ் அணி சேர்க்கையானது இந்த முறை பாஜக வை பின்னுக்குத் தள்ளி திரிணாமுல் காங்கிர சுக்கு எதிராக சவால் விடுகிற வலுவான சக்தியாக முன்னுக்கு வந்துள்ளது. எனவே கடந்த முறை பாஜகவுக்கு சென்ற கணிசமான வாக்குகள் இந்த முறை இடது முன்னணி - காங்கிரசுக்கு சாதகமாக நிச்சயம் திரும்பும் என்பதும் திரிணா முல் வாக்குகளின் ஒருபகுதி - குறிப்பாக சிறு பான்மை மக்களின் கணிசமான வாக்குகள் இடது முன்னணி -காங்கிரசுக்கு மாறும் என்ப தும் எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி இருப்பினும் கடந்த முறை போல பாஜக வங்கத்தில் அதிக இடங்களை பெற முடியாது என்பதே நிதர்சனம்

ஒடிசா, மகாராஷ்டிராவில்  தேறாத நிலையில்...

அதேபோல ஒடிசாவில் கடந்த முறை இருந்ததைப் போல இந்த முறை பாஜகவுக்கும் பிஜூ ஜனதா தளத்திற்கும் இடையே நல்ல உறவு இல்லை. அங்கு பிரச்சாரத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அந்த மாநிலத்தில் பிஜூ ஜனதா  தளத்தின் அடுத்த நம்பிக்கைக்குரிய தலைவ ராக உருவாகியிருக்கிற வி.கே.பாண்டியனை விமர்சிப்பதாக கருதி, ஒடிசாவில் தமிழர் ஆட்சி க்கு வரலாமா? என்று பேசினார். அத்தோடு நிற்காமல், பூரி ஜெகநாதர் ஆலயத்தின் பொக் கிஷ அறைகளின் சாவியை பூட்டி தமிழ்நாட்டி ற்கு கடத்திச் சென்று விட்டார்கள் என்று அபாண்ட மாக பழி சுமத்தி, ஒரே நேரத்தில் ஒடிசாவையும், தமிழ்நாட்டையும் இழிவுபடுத்தினார். அதை விட ஒரு படி மேலே போய் பிஜூ ஜனதா தளத்தின் தலைவரும், முதல்வருமான நவீன் பட்நாயக் கின் உடல் நிலை குறித்தும் தவறாகப்பேசி வாங்கிக் கட்டிக் கொண்டார். இதுபோன்ற நிகழ்வு கள் அனைத்தும், ஒடிசாவில் பாஜகவை வீழ்த்தியே தீர வேண்டும் என்ற நிலைக்கு பிஜூ ஜனதா தளத்தை கொண்டு வந்தது. எனவே ஒடிசாவில் பாஜகவுக்கு பெரிதாக எதுவும் கிடைக்கப் போவதில்லை. 48 இடங்கள் கொண்ட மகாராஷ்டிராவில் கடந்த முறை சிவசேனாவுடன் கூட்டணி சேர்ந்து தான் பாஜக கூட்டணி கணிசமான இடங்களை பெற்றது. ஆனால் கூட்டணி கட்சியான சிவசே னாவையே விழுங்கும் நோக்கத்துடன் இரண் டாக உடைத்தது. அதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் இரண்டாக உடைத்தது. இதன் மூலம் ஆட்சியை கைப்பற்றிய பாஜக மீது மகாராஷ்டிர மக்கள் எரிச்சலடைந்துள்ளனர். சிவசேனாவும் பாஜகவை வீழ்த்தியே தீருவது என்ற முனைப்புடன் இறங்கியது. கடந்த முறை வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்ததால் அதேபோன்ற முடிவுகளை தற்போது பாஜக பெறுவதற்கு சாத்தியமில்லை.

மக்களின் கோபாவேசமும்  வலுவான எதிர்ப்பும்

போல பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் விவசாயிகளின் கோப ஆவே சம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் பாஜகவை துரத்தியுள்ளன.  கடந்த முறை 14 மாநிலங்களில் 50 சதவீத வாக்குகளை பாஜக பெற்றது. ஆனால் தற்போது இந்த மாநிலங்களில் அன்றைக்கு இருந்த சூழல் நிலவவில்லை. எதிர்க்கட்சிகள் வலு வான முறையில் களத்தில் நிற்கின்றன. இந்த  மாநிலங்களில் ஏற்கெனவே அதிகபட்ச இடங்க ளை கடந்த முறை பெற்றுவிட்ட பாஜக இந்த முறை, எதிர்ப்பும் வலுவடைந்துள்ள நிலையில் அதே எண்ணிக்கையை எந்தவிதத்திலும் தக்க வைக்க முடியாது என்பதே கள உண்மை.  ஆம் ஆத்மி ஆளும் தில்லி, பஞ்சாப் மாநி லங்களில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய் யப்பட்ட சம்பவமும், ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட சம்பவமும் அந்த மாநில மக்களை பெரிய அளவிற்கு பாஜகவிற்கு எதிராக திருப்பியுள்ளன. எனவே பழைய நிலை இல்லை. 

சந்தர்ப்பவாதமும் துரோகமும்

உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பாஜக மீண்டும் வந்தால் இடஒதுக்கீடு பாதிக்கப்படுமோ என்ற அச்சம் பிற்படுத்தப்பட்ட மக்களிடையே வலு வாக எழுந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் ஏற்கெனவே பாஜக வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி தனியாக நின்று பாஜகவுக்கு ஆதர வாக வாக்குகளை பிரித்ததுதான். பகுஜன் சமாஜ் கட்சிக்கு தொடர்ந்து வாக்களித்த மக்கள் அக் கட்சியின் சந்தர்ப்பவாத நிலைபாடுகளால் தற்போது மாயாவதி மீது நம்பிக்கை இழந்துள்ள னர். இது இந்தியா கூட்டணிக்கு சாதகமாக திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல பீகாரில் நிதிஷ்குமார் - பாஜக வின் துரோகங்களை, வஞ்சகங்களை மக்கள் இனியும் அனுமதிக்க தயாராகயில்லை. ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி பிரச்சாரங்களில் லட்சக்கணக்கில் மக்கள் அணி திரண்டது, அவர்களது நம்பிக்கையை வெளிப்படுத்தியது.  அதேபோல வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜகவிற்கு பலத்த அடி கிடைப்பது உறுதி. 

முடிவுரை எழுதுவது நிச்சயம்

ஆக, கடந்த தேர்தலை விட முற்றிலும் மாறு பட்ட அரசியல் சூழலில் 18ஆவது மக்களவைத் தேர்தல் மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சிக்கு முடிவுரை எழுதுவது நிச்சயமாகியுள்ளது.  இதை பல்வேறு மாநிலங்களின் களத்தில் இருந்து வரும் விபரங்கள் உறுதிப்படுத்துகின்றன. அதனால் தான், தோல்வியை அத்தனை எளிதாக பாஜக ஏற்றுக் கொண்டு அமைதியாகச் சென்று விடாது என்று அறிஞர்களும் மக்கள் நலச் செயற்பாட்டாளர்களும் எச்சரிக்கின்றனர். இந்த எச்சரிக்கை உணர்வோடு தான்  இந்தியா கூட்டணி, நிறைவுக் கட்டத்தில் தனது ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளது. பாஜக இனியும் என்ன தான் இழிமுயற்சிகளை, சீர்குலைவு வேலைகளை ஏவினாலும் அது அவர்களுக்கே பதிலடியாக முடியும். ஜூன் 4 அன்று வாக்கு எண்ணிக்கை துவங்கிய சில மணி நேரங்களில் அத்தகைய மகத்தான அரசியல் மாற்றத்தை இந்திய மக்கள் உணர்வார்கள் என்பது திண்ணம்.



 

;