tamilnadu

img

தாய்ப்பாலில் நுண் பிளாஸ்டிக்குகள்

சிதம்பரம் இரவிச்சந்திரன்

தாய்ப்பாலில் நுண் பிளாஸ்டிக்குகள் இருப்பது முதல்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகளுக்கு எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள்  அஞ்சுகின்றனர். குறிப்பாக புதிதாகப் பிறந்த குழந்தைகள் ரசாயனப்பொருட்களால் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. இது பற்றி தீவிர ஆய்வுகள் அவசரமாக நடத்தப்படவேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். என்றாலும் இன்று உள்ள நிலையில் தாய்ப்பாலே சிறந்த உணவு என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். இத்தாலி ரோம் நகரில் குழந்தை பெற்று ஒரு வாரமான ஆரோக்கியமான 34 தாய்மார்களிடம் இருந்து தாய்ப்பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதில் 75% மாதிரிகளில் நுண் பிளாஸ்டிக்குகள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. முந்தைய ஆய்வுகள் இந்த துகள்கள் மனித செல்கள், ஆய்வக விலங்குகள், கடல்வாழ் உயிரிகளில் ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றி எடுத்துக்கூறியிருந்தன. ஆனால் இவை உயிருடன் வாழும் மனிதர்களின் உடலில் ஏற்படுத்தும் தீமைகள் பற்றி இன்னும் விரிவாக அறியப்படவில்லை. தாலேட்டுகள் போன்ற பிளாஸ்டிக்குகள் முன்பே கண்டறியப்பட்டன என்றாலும் நுண் பிளாஸ்டிக்குகள் தாய்ப்பாலில் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல்முறை. இந்த தாய்மார்கள் பிளாஸ்டிக்கால் ஆன பொட்டலங்களில் அடைக்கப்பட்ட உணவுகள், பிளாஸ்டிக் பாட்டில் பானங்கள், கடல் உணவுகள் மற்றும் பிளாஸ்டிக்காலான தனிமனிதப் பயன்பாட்டுப் பொருட்களை பயன்படுத்தியுள்ளனர். ஆனாலும் இதற்கும் தாய்ப்பாலில் காணப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் சுற்றுச்சூழலில் உள்ள பிளாஸ்டிக்குகளே இதற்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. இவை ஏற்படுத்தும் மனித உடல்நல பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதிர்கால ஆய்வுகளில் தெரியவரும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

உப்புப் படிகங்களிலும் பிளாஸ்டிக் துகள்கள்
நுண் பிளாஸ்டிக் நாரிழைகள் மற்றும் துண்டுகள் கல்லுப்பு படிகங்களில் இருப்பது முந்தைய ஒரு ஆய்வின் மூலம் அறியப்பட்டது. 2019இல் வெளிவந்த ஒரு ஆய்வு ஒவ்வொரு ஆண்டும் மனிதர்கள் அரை இலட்சம் பிளாஸ்டிக் பொருட்களை உட்கொள்கின்றனர் என்று கூறியது. 2020இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு பிரசவத்தின்போது பெண்களின் நஞ்சுக் கொடியில் நுண் பிளாஸ்டிக்குகள் இருப்பதைக் கண்டறிந்து கூறியது. இதனால் இந்த கண்டுபிடிப்பு புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் உடல்நலத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்று ரோம் அங்கோனா (Ancona) டெல் மார்ச் (Delle Marche)பல்கலைக்கழக டாக்டர் வாலண்டினா நோட்டார்ஸ்டிஃபானோ (Dr Valentina Notarstefano) கூறுகிறார். பெண்கள் பிரசவகாலத்திலும், சிசு வளரும் காலத்திலும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்கவேண்டும்என்று அவர் மேலும் கூறுகிறார்.

குப்பிப்பால் குடிக்கும் குழந்தைகள்
நுண் பிளாஸ்டிக்குகள் கலந்திருப்பதால் ஏற்படும் தீய விளைவுகளை விட தாய்ப்பால் ஊட்டுவதால் ஏற்படும் நன்மைகள் மிக அதிகம் என்று வாலண்டினா கருதுகிறார். இந்த ஆய்வு முடிவுகள் தாய்ப்பால் கொடுக்கும் வழக்கத்தைக் குறைத்துவிடக்கூடாது. ஆனால்மக்கள் பிளாஸ்டிக் மாசைக் குறைக்க அரசியல்வாதிகள் மீது அழுத்தம் செலுத்தவேண்டும் என்கிறார் அவர். குப்பிப்பால் குடிக்கும் குழந்தைகள் ஒவ்வொருநாளும் மில்லியன் கணக்கான நுண் பிளாஸ்டிக் துகள்களை பால் அருந்தும்போது விழுங்குவதாக மற்றொரு சமீப ஆய்வு கூறுகிறது. சூழலில் பிளாஸ்டிக் கழிவுகள் கணக்கில்லாமல் கொட்டப்படுகின்றன. எவரெஸ்ட் முதல் ஆழ்கடல் வரை பூமி முழுவதையும் நுண் பிளாஸ்டிக்குகள் மாசுபடுத்துகின்றன. உணவு, நீர், சுவாசிக்கும் காற்றின் வழியாக மக்கள் பிளாஸ்டிக் துகள்களை உட்கொள்கின்றனர். குழந்தைகள் மற்றும் வயது வந்தவர்களின் மலத்திலும் இவை கலந்துள்ளன. பாலிமர்கள் (Polymers) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வுக்கட்டுரை பொட்டலங்களில் காணப்படும் பாலி எத்திலீன், பாலி வினைல் குளோரைடு, பாலி ப்ரோப்பலின் ஆகிய நுண் பிளாஸ்டிக் துகள்கள் தாய்ப்பாலில் காணப்பட்டன என்று கூறுகிறது. ஆய்விற்காகப் பயன்படுத்தப்பட்ட தாய்ப்பால் மாதிரிகள் பிளாஸ்டிக்கால் செய்யப்படாத கலன்களில் சேகரிக்கப்பட்டன. மேலும் அவை கட்டுப்படுத்தப்பட்ட முறைமையின் (controlled processing) மூலம் பிளாஸ்டிக் கலப்படமற்றவை என்று உறுதி செய்யப்பட்டன. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட தாய்ப்பால் மாதிரிகளில் இரண்டு மைக்ரான்களுக்கும் குறைவான அளவுள்ள பிளாஸ்டிக் துகள்களை ஆய்வாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இத்துகள்களால் சிசுக்களில் உண்டாகக்கூடிய பாதிப்புகள் பற்றி இன்னும் விரிவாகத் தெரியவில்லை என்றாலும் கருவுற்றிருக்கும் பெண்கள் பிளாஸ்டிக்கால் ஆன உணவு, நீர் மற்றும் பிளாஸ்டிக் நுண் துகள்கள் கலந்துள்ள அழகுசாதனப்பொருட்கள், பற்பசை, செயற்கை நூலிழைகளால் தயாரிக்கப்பட்ட ஆடைகளைத் தவிர்ப்பது நல்லது என்று வாலண்டினா கூறுகிறார். மனித இரத்தத்தில் நுண் பிளாஸ்டிக்குகள் கலந்திருப்பதை மார்ச் 2022இல் நெதர்லாந்து ஆம்ஸ்டர்டாம் ரைஜ் (Vrije) பல்கலைக்கழகப் பேராசிரியர் டிக் வேதாக் தலைமையிலான ஆய்வுக்குழு கண்டுபிடித்துக் கூறியது. தாய்ப்பாலில் நுண் பிளாஸ்டிக்குகள் கலந்திருப்பது பற்றிக் கூறும் இந்த ஆய்வு முதன்மையானது. இது பற்றி மேலும் தீவிரமாக ஆழத்தில் ஆராயப்படவேண்டும் என்று டிக் கூறுகிறார். இந்த ஆய்வு முடிவுகள் நாம் பிளாஸ்டிக் மாசினால் எந்த அளவு மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதையே எடுத்துக்காட்டுகிறது. இன்னும் அதிக எண்ணிக்கையில் தாய்ப்பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆராயப்படவேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர். இந்த முடிவுகள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை மட்டுமே. நுண் பிளாஸ்டிக்குகளை விட மிகச்சிறிய, அதிக நச்சுத்தன்மையுடைய நானோ துகள்கள் எல்லாப் பொருட்களிலும் கலந்திருக்கலாம்.

நானோ துகள்  ஏற்படுத்தும் பேராபத்து
ஆனால் நானோ துகள்களை தாய்ப்பாலில் கண்டுபிடிப்பது கடினம். மேலும் தாய்ப்பாலை சப்பிக் குடிக்கும் சிசுக்களுக்கு இத்துகள்கள் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் இப்போது கண்டறியப்பட்டுள்ள பாதிப்புகளை விட அதிகமாகவே இருக்கும் என்று ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர். மனித வளர்ச்சியின் ஆரம்பக் கட்டத்திலேயே குழந்தைகள் பிளாஸ்டிக் மாசுகளால் பாதிக்கப்படுகின்றனர் என்பதால் இது ஆபத்தான ஆரோக்கியப்பிரச்சனை என்ற ரீதியில் இது பற்றி உடனடியாக ஆராயவேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர். பிளாஸ்டிக்கிற்கு எதிரான இன்றுள்ள மந்தகதியிலான போராட்டம் இன்னமும் இதேபோலத் தொடர்ந்தால் நாளை எழில் கொஞ்சும் இந்த பூமி நோயாளிகளின் பூமியாக மாறிவிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.