சென்னை, டிச. 18- அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டங்கள் வரலாறு படைத்தவை என சிஐடியு மாநிலத்தலைவரும் அரசு ஊழியர் சங்க மாநாட்டு மாநில மாநாட்டு வரவேற்புக்குழு தலைவருமான அ.சவுந்தரராசன் கூறினார். சென்னையில் சனிக்கிழமை (டிச,18) தொடங்கிய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநாட்டு மாநில மாநாட்டில் வரவேற்புரையாற்றிய அவர், உழைப்பாளர்கள் மற்றும் ஊழியர்களின் எந்தவொரு போராடும் சங்கமும் தன்னை நிலை நிறுத்திக்கொள்வதற்கான போராட்டத்தையே முதலில் முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. அந்தப் போராட்டங்கள் கடுமையானதாகவும், நீடித்ததாகவும், பழி வாங்கல்களை தாங்கி முன்னேறுவதாகவுமே இருந்துள்ளன. ஊழியர்களின் படைக்கலனாய் இருக்க வேண்டிய சங்கம் , நிர்வாகத்தின் கால் செருப்பாக மாறிப்போனால் ஊழியர்களின் உரி மைகள் உதாசீனப் படுத்தப்படும்
ஆமாம் சாமிகளை அசைய வைத்த இயக்கம்
தமிழக அரசு ஊழியர்கள் அப்படிப்பட்ட அவலத்தில் உழன்று கொண்டிருந்த போது எண்பதுகளின் தொடக்கத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்களின் படைக்கலனாய் சங்க நாதம் முழங்கி ஆர்ப்பரித்து களத்தில் இறங்கிய அமைப்புதான் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம். இது உண்மைக்கும் உரிமைக்கும் போராடும் சங்கமாக பிறந்ததால் எதிர் நீச்சல் போட வேண்டியிருந்தது. அரசு ஊழியர்களின் குரலாய், மனசாட்சியாய், ஆன்மாவாய் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஊழியர் மனங்களில் சிம்மாச னமிட்டது. அரசையும். ஆமாம் சாமிகளையும் அடுத்தடுத்த போராட்டங்கள் மூலம் அசைய வைத்த பேரியக்கம் இது. குறிப்பாக 1978, 1988, 2002, 2003,2016,2017 வேலை நிறுத்தப் போராட்டங்கள் வரலாறு படைத்தவை. போராட்டங்களுக்காக இந்தியா வில் பெரும் எண்ணிக்கையில் வேலை நீக்கம் செய்யப்பட்ட வெங்கொடுமையை எதிர் கொண்ட இயக்கம் இது. அத்தக்கூலி முறை யில் பணியமர்த்தப்பட்ட மதிப்பூதியம், தொகுப்பூதியம் பெறும் பிரிவினர்களை அரசு ஊழியர்களாக்குவது, காலிப் பணியிடங்களை நிரப்புவது போன்றவற்றிற்காக குறிப்பாக எடுத்த போராட்ட முன்னெடுப்புகள் தொழிலாளி வர்க்க உணர்வின் வெளிப்பாடுகள்.
அரசை பணிய வைத்த சங்கம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் எண்ணற்ற தனிப் போராட்டங்களை சுயேச்சையாக நடத்தியிருக்கிறது. இந்தப் போராட்டங்கள் மூலம் சங்கத்திற்கு வெளியில் இருக்கும் ஊழியர் களையும் உணர்கூட்டியது. தனி இயக்கத்தில் அஞ்சாமலும், சளைக்காமலும் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கம் “ஜாக்டோ-ஜியோ” என்ற கூட்டு இயக்கத்தின் மூலம் தனி முத்திரையை யும் பதித்தது. அரசு ஊழியர்கள், ஆசிரியர் பெருமக்களும் சேர்ந்து நடத்திய போராட்ட ங்கள் அரசைப் பணிய வைத்தது என்பது அகில இந்தியாவிற்கும் பாடமாக அமைந்தது. அரசு ஊழியர் சங்கம் தனிக் கொட்டகை போட்டு தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளா மல் உழைப்பாளி வர்க்கம் என்ற பொது பிரவா கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு மத்திய மாநில அரசுகளின் கொள்கைகளையும், அதன் பின்னால் இருக்கும் முதலாளித்துவ அரசியலையும் எதிர்த்துப் போராடுகிற அமைப்பு என்பது பெருமைக்குரியது. தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்தும் அனைத்து அகில இந்திய வேலை நிறுத்தங்களிளும் பங்கெடுத்த பாரம்பரியத்தைக் கொண்ட அமைப்பு இது.
பொதுத்துறையை பாதுகாக்க
ஒன்றிய அரசு பணமயமாக்கல் திட்டத்தின் மூலம் அரசின் சொத்துக்களை குத்தகைக்கு விடுவது என்ற பேரால் முதலாளிகளுக்கு தாரை வார்க்கத் துடிக்கிறது. விமானம், ரயில்வே, சாலைகள், துறைமுகம், பாதுகாப்பு, மின்சாரம், சுரங்கங்கள் போன்ற தயார் நிலையில் இருக்கும் எல்லா சொத்துக்களையும் முதலாளி களின் வேட்டைக் காடாக்குகிறது மத்திய அரசு. இந்தக் கொள்கைகளை எதிர்த்து குரலெ ழுப்பிப் போராடும் அமைப்பு இது. இது போன்ற அநீதிகளுக்கு எதிராக நடக்கும் எல்லாப் போராட்டங்களிலும் பங்கெடுப்ப தோடு, பல ஆதரவு இயக்கங்களை நடத்து கிற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பாராட்டு க்குரிய பேரியக்கம். இந்த இயக்கத்தின் 14ஆவது மாநில மாநாட்டினை ஆட்சி மாற்றம் நடந்துள்ள தருணத்தில் தலைநகர் சென்னை யில் நடத்துவது மகிழ்ச்சிக்குரியது. மிகவும் பொருத்தமானது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் போராட்ட விழுப்புண்களோடு பங்கெடுத்துள்ள அனைத்து பிரதிநிதிகளையும் சென்னை நகர தொழிலாளி வர்க்கத்தின் சார்பில் வரவேற்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.