tamilnadu

img

குழந்தைகள் பூங்கா- அழகி

சி.அமுதா செல்வி

அவள் பெயர் லைலா. ஊரில் அவளை கருவாச்சி என்பார்கள். அவளுக்கு வருத்தமாக இருக்கும். வாடிப்போவாள். பள்ளியில் லைலா மகிர்ச்சியாக இருந்தாள். மெர்லின் டீச்சரை அவளுக்குப் பிடிக்கும். டீச்சர் கண்களுக்கு எல்லாக் கலரும் சமம் தான். பள்ளியில் ஆண்டு விழா, “சிவகங்கைச் சீமையை ஆட்சி செய்த அரசி வேலுநாச்சியின் கதையை நாடகமாக்க வேண்டும்” மெர்லின் டீச்சரின் யோசனை, நாடகத்தில் நம் லைலாதான் நாயகி. வாரம் முழுவதும் வசனம் பேசும் சத்தம் கேட்டது. ஒத்திகை காலம் முடிந்தது. ஆண்டு விழா வந்தது. லைலாவுக்கு மேக்கப் போட்டார்கள். மின்னும் சரிகை உடை. கையில் காப்புகள், கழுத்தில் மணி மாலைகள், தலையில் கிரீடம், அரசியின் தோற்றத்தில் ஜொலித்தாள் லைலா. லைலா கண்ணாடி முன்பு நின்றாள். இப்படியும் அப்படியும் திரும்பிப் பார்த்தாள். “ஹா...ஹா...ஹா...” என்று சிரித்தாள். மெர்லின் டீச்சர் உள்ளே வந்தார். அப்படியே திகைத்து நின்றார்.

“அரசி வேலுநாச்சியாரை அப்படியே பார்க்கிறேன். அரசியே தாங்கள் தயாரா...” லைலா சிரித்தாள். டீச்சர் கண் சிமிட்டினார். “கெட் ரெடி.. ஃபாஸ்ட்...” சொல்லிவிட்டுப் பறந்தார் டீச்சர். மெர்லின் சமூக அறிவியல் ஆசிரியை, பரபரப்பாக நாடக ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். விறுவிறு என்று வந்தார் கணக்கு டீச்சர். “ஏன் மெர்லின், கதாநாயகிக்கு கலரா யாரும் கிடைக்கலையா?” என்றார் மெர்லின் டீச்சர் பட்டென்று திரும்பினார். அந்த நேரம், மணி அடிச்சது. நாடகம் தொடங்கிவிட்டது. அரங்கம் நிரம்பி வழிந்தது. லைலா மேடையில் தோன்றினாள். அவள் நிற்கும் இடத்தில் மட்டும் நேராக லைட் வெளிச்சம் பாய்ந்தது. அப்படியே அரசி வேலு நாச்சியார் தான். ஆடை பளபளத்தது. கிரீடம் ஜொலித்தது. திரும்பி நின்றாள். இடுப்பில் கைவைத்து பார்வையாளர்களை ஒரு பார்வை பார்த்தாள். அரசி வேலுநாச்சியார். கம்பீரான பார்வை. பலமாக கைதட்டினார்கள். நிறுத்திப் பேசினாள். “சதிகாரர்கள் திட்டம் தகர்க்கப்பட வேண்டும்.” “அந்த வெள்ளைப் பரங்கிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்” “சிவகங்கைச் சீமை வீரர்களே அணிதிரள்வீர்...” என்று அரங்கம் அதிர முழக்கமிட்டாள். அன்பு, கோபம், வீரம், அத்துணை உணர்வுகளும் போட்டிபோட்டன. லைலா தத்ரூபமாக நடித்தாள். கை தட்டல்கள் பறந்தன. அனைவரும் எழுந்து நின்று கை தட்டினர். கணக்கு டீச்சர் கண் கலங்கிப்போனார்.  கறுப்பு, பழுப்பு, வெள்ளை இப்படி நிறம் எதுவானாலும் வாய்ப்பு கெடச்சா திறமை வெளிவரும். “திறமைகள் முக்கியமே தவிர நிறம் இல்ல டீச்சர்...” என்று நச்சுன்ன முடித்தார் மெர்லின். -வால் முளைத்த பட்டம் நூலிலிருந்து