tamilnadu

img

புத்தகத் திருவிழா எனும் அறிவுப்புரட்சி!

-ஜீவா லெனின்

புத்தக் கண்காட்சிக்கு தமிழகத்தில் புத்தகத் திருவிழா என பெயரிட்டது மட்டுமல்ல.. திருவிழாவாகவே மாற்றிய தும் தமிழகத்தின் தனிசிறப்புகளில் ஒன்றைகவே இன்று மாறி யிருக்கிறது. கண்காட்சியென்றால் சென்று கண்டவர் மட்டுமே மகிழ்வர். ஆனால் திருவிழா என்றால் சிறியர் முதல் பெரியவர் வரை ஒன்று கூடுதல், கொண்டாடுதல், மகிழ்ச்சியைப் பகிர்தல் என ஊர்கூடி மகிழும் தருணமாக பரிணமிக்கிறது. அதுவும் தனக்கு  பிடித்த புத்தகத்தோடு நண்பர்களோடு, உறவினர்களோடு கூடி மகிழும் தருணமே அலாதியானதுதான்.  உலகின் முதல் புத்தகக் கண்காட்சி ஜெர்மனியில் 17-ஆம் நூற்றாண்டிலே துவங்கியிருக்கிறது. நவீன புத்தக கண்காட்சியும் முதன் முதலில் ஜெர்மனியில் தான்(பிராங்பர்ட்டில்) 1949-இல் தொடங்கியிருக்கிறது. அதற்கடுத்து லண்டன் புத்தக கண்காட்சி யும், அதற்கடுத்த நிலையில் கொல்கத்தா புத்தக கண்காட்சியும் பிரசித்தி பெற்றதாக திகழ்கிறது. இந்தியாவில் புத்தகக் கண்காட்சி 1972-இல் தொடங்கியது. தமிழகத்தில் 1977-இல் சென்னையில் புத்தக கண்காட்சி தொடங்கியது. தமிழகத்தில் சென்னை, ஈரோடு, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் மட்டுமே நடைபெற்று வந்த  புத்தக கண்காட்சி, இன்று மாவட்டந்தோறும் புத்தக திருவிழாக் களாக மாறியிருக்கிறது.  தமிழக அரசால் புத்தகத் திருவிழாவிற்கென்று நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பள்ளிக் கல்வித்துறை ஆணையர் தலைமையில் ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டு புத்தக திருவிழாக்கள் முன்னெடுக்கப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவையில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான பொது வரவு செலவுத் திட்டத்தின்போது நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சரால் வெளியிடப்பட்ட அறிக்கையில், “சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில் புத்தக வாசிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல, சென்னை புத்தகத் திருவிழா போன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா நடத்தப்படும். இத்துடன் இலக்கியச் செழுமை மிக்க தமிழ்மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில் ஆண்டுக்கு நான்கு இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும். புத்தகத் திருவிழா மற்றும் இலக்கியத் திருவிழாக்கள் வரும் ஆண்டில் ரூ.5.6 கோடி செலவில் நடத்தப்படும்” என்று கூறப்பட்டு இருந்தது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறுகிற புத்தகத் திருவிழாவை அந்தந்த மாவட்ட நிர்வாகத்தோடு பெரும்பாலும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கத்தினர் இணைந்து நடத்துகின்றனர். ஒரு சில மாவட்டங்களில் சில முற்போக்கு இயக்கங்களுடன் இணைந்து புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது. ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் என ஒளவையார் சொன்னார். ஒரு சமுதாயம் உயிருள்ள சமுதாயமாக இருக்க வேண்டுமானால் யோசிப்பதையும், வாசிப்பதையும் வாழ்க்கை யாக கொள்ள வேண்டும்.அந்த வகையில் அறிவுக்கு விழா எடுக்கும் சமுதாயத்துக்கு அழிவு என்பதே இல்லை.
கலை நிகழ்ச்சிகள்
புத்தகத்திருவிழாவில் முதல் நிகழ்வாக பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழர்களின் பாரம்பரியமான பறையாட்டம், மயில் ஆட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், பரத நாட்டியம், ஊமை நாடகம், ஆடல், பாடல் என மாணவ, மாணவிகள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் மூலம் அவர்களுக்கு ஒரு சமூக அங்கீகாரத்தை புத்தக கண்காட்சி வழங்கிவருகிறது. மேலும் மாணவர்கள் தங்களுக்குள் இருந்த தனித்திறனை வெளிக்கொண்டு வரும் களமாகவும் மாறியிருப்பது பாராட்டுதலுக்குரியது.
புத்தக நன்கொடை
தமிழகத்தில் புத்தகத் திருவிழாக்கள் நடைபெற்ற பெரும் பாலான மாவட்டங்களில் புத்தக நன்கொடை அரங்கம் என்ற ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. புத்தகத் திருவிழாவிற்கு வரும் பொதுமக்கள் தாங்கள் விரும்பிய புத்தகங்களை வாங்கி புத்தக நன்கொடை அரங்கில் வழங்கலாம். இதில் பெறப்படும் புத்தகங்கள் அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் நூலகங்களுக்கு தரப்படும் என அறிவிப்பு செய்தே இந்த சிறப்பான ஏற்பாட்டை ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் செய்திருந்தது.
தனித்துவம்
கடந்த 2022-ஆம் ஆண்டில் பெரும்பாலான மாவட்டங்களில் புத்தகத் திருவிழா நடைபெற்றது. ஒவ்வொரு மாவட்டமும் தங்களுக்கே உரிய தனித்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் புத்தகத் திருவிழாவை நடத்தினர். குறிப்பாக கரூர் மாவட்டத்தில் நடத்த புத்தகத் திருவிழாவில் தேவாங்கு விலங்கினத்தை மையப்படுத்தி நூலன் மற்றும் நூலி என்ற பெயரில் வடிவமைக்கப்பட்ட அடையாளச் சின்னமான இலட்சினையை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் வெளியிட்டார். நூலன் என்றால் நூல் வாசிக்கும் ஆண் என்றும், நூலி என்றால் நூல் வாசிக்கும் பெண் என்றும் புதிய சொல்லை உருவாக்கி யிருந்தார். மேலும், பாலின சமத்துவத்தை உணர்த்தும் வகை யிலும், மாற்றுத்திறனாளிகளின் சம உரிமைகளை அடை யாளப்படுத்தும் வகையிலும் நூலனும், நூலியும் அடையாள சின்னமான இலச்சினை வடிவமைக்கப்பட்டிருந்தது. இதேபோல, விருதுநகரில் நடைபெற்ற முதல் புத்தகத் திருவிழாவில் மாவட்ட ஆட்சியர் மேகநாதன் ரெட்டி விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர், மேகமலை புலிகள் சரணா லயத்தில் வசித்து வரும் அரியவகை சாம்பல் நிற அணிலின் உருவம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு ”விரு” என்ற பெயரிலான இலச்சினை வெளியிடப்பட்டு புத்தகத் திருவிழா நடைபெற்றது. கந்தக பூமியான விருதுநகரில் பங்குனி பொங்கல் திருவிழா என்பது வெகு விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு திருவிழா வாகும், அதையொட்டி விருதுநகர் கே.வி.எஸ்.மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பொருட்காட்சி நட த்தப்படும். பொதுமக்கள் குழந்தைகளோடு தங்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்த பலகாரங்கள் மற்றும் உணவுகளை பொருட்காட்சி நடக்கும் மைதானத்தில் விரிப்புகளை விரித்து உணவை உட்கொண்டு மகிழ்ந்திருப்பர். இதே காட்சியை விருதுநகரில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவிலும் காண முடிந்தது. பங்குனி திரு விழாவை போல, புத்தகத் திருவிழாவையும் விருதுநகர் மக்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள். இதுபோல ஒவ்வொரு மாவட்டத்தி லும், மாவட்டத்தின் தனித்துவத்திற்கேற்ப புத்தகத் திருவிழாவை நிகழ்வுகள் அரங்கேறியது.
சொற்பொழிவு
புத்தகத் திருவிழாவில் மாலை நேர முக்கிய நிகழ்வாக  பல்வேறு தலைப்புகளில் சிறப்பு பேச்சாளர்களின் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் நடைபெற்றன.சொற்பொழிவு கேட்பது என்பது பல புத்தகங்களை படிப்பதற்கு சமம் என்பார்கள். அந்த வகையில் பொதுமக்களுக்கு சிறப்பு சொற்பொழிவு மற்றும் பட்டிமன்றங்கள் மூலம்  வரலாற்று தகவல்கள் , கவிதைகள், அரசியல், பொருளாதாரம், கலை, இலக்கியம் குறித்து பல தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. புத்தக வாசிப்பின் முக்கியத்துவமும் பொதுமக்களுக்கு விதைக்கபட்டது.
ஏன் புத்தகங்கள் வாசிக்க வேண்டும்?
புத்தகம் வாசிப்பதால் ஏற்படும் பயன்கள் என சிறப்பு சொற்பொழிவாளர்கள், கவிஞர்கள் பட்டியலை போட்டார்கள். புத்தகம் வாசிப்பதால், மனம் ஒருமுகப்படும், மொழிவளம் அதிகரிக்கும், பகுத்தறிவு பெருகும், மன அழுத்தம் குறையும், நினைவாற்றல் பெருகும், பொது அறிவு அதிகமாகும், புதிய செய்திகளை அறிய முடியும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், அரசியல் தெளிவு பெற முடியும் என நீண்டது அந்த பட்டியல்.ஒரு கல்லை உளி செதுக்கிச் செதுக்கி அழகிய சிற்பமாக மாற்றுவதைப் போல், புத்தகம், வாசிக்க வாசிக்க நம்மை அறிவுள்ள, பண்புள்ள மனிதனாக மாற்றுகிறது.
புத்தக விற்பனை
ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகத் திருவிழாவின் இறுதிநாளில், எவ்வளவு மதிப்பிற்கு புத்தகங்கள் விற்பனை யாகியுள்ளது என்ற விபரம் அறிவிக்கப்படும். பெரும்பாலான  மாவட்டங்களிலும் ஏறக்குறைய 3 கோடிக்கு அதிகமான மதிப்பிலேயே புத்தகங்கள் விற்பனையாகியிருந்தது. திருவிழாவிற்கு ஆடைகள் விற்பனையாவதையும், அணிகலன்கள் விற்பனையாகும் மதிப்பையும் இன்னும் பிற பொருள்கள் விற்பனையாகும் மதிப்பையும், புத்தக விற்பனையையும் நாம் ஒன்றாக மதிப்பிட முடியாது.  புத்தகங்களுக்காகச் செலவிடப்படும் தொகை என்பது செலவு அல்ல. அது முதலீடு என்கிறார் அறிஞர் எமர்சன்.  நாமும் உற்சாகமாக புத்தகங்களை வாங்கி.நம் அடுத்த தலைமுறையை அறிவார்ந்த மக்களாக வாழ வைப்போம்.
சர்வதேச புத்தகக் கண்காட்சி
தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்(பபாசி) நடத்தும் 46-ஆவது புத்தகத் திருவிழா தமிழ்நாடு அரசின் நிதிப் பங்களிப்புடன் நடைபெறு கிறது. இந்த ஆண்டு சர்வதேசப் புத்தகக் கண்காட்சிக்கு தமிழ்நாடு அரசு ரூ.6.60 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. ஜனவரி-6 ஆம் தேதியன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்தார். இத்திருவிழா ஜனவரி 22வரை 17 நாட்களுக்கு நடத்தப்படுகிறது.மேலும், இதில் தமிழகப் பள்ளி கல்வித்துறையும், பபாசியும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி ஜனவரி 16, 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறு கிறது. 40 நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள்  உள்ளிட்டோர் கலந்து கொள்ளும் இந்தக் கண்காட்சியில் தமிழ் எழுத்தாளர்களும், பதிப்பாளர்களும் கலந்து கொள்கின்றனர்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த முன்னெடுப்பு குறித்து பொது நூலகத்துறை இயக்குநர் க.இளம்பகவத் கூறியதாவது:-  உலகின் மிகப்பெரிய புத்தகக் கண்காட்சியான ஜெர்மனியின் ஃபிராங்ஃபர்ட் புத்தகக் கண்காட்சிக்கு, தமிழக  அரசு ஐந்து பேர் கொண்ட குழுவைக் கடந்த ஆண்டு அனுப்பி யது; உலகின் மிகப் பழமையான புத்தகக் கண்காட்சியு மான அதைப் பார்வையிட்ட குழுவினர், அங்கிருந்து விசயங்களைக் கற்றுக்கொண்டு வந்தோம், சந்தித்த நபர்கள், அவர்கள் மூலம் கிடைத்த தொடர்புகள் ஆகியவற்றின் விளைவால், சென்னையில் சர்வதேசப் புத்தகக் கண் காட்சியை நடத்துவது எனத் தீர்மானித்தோம் என்றார். பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும். இறவாத புகழுடைய புது நூல்கள்  தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும். திறமான புலமை யெனில் வெளிநாட்டார் அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்  என்பது மகாகவி பாரதியின் கூற்று. அந்த வகையில் தமிழ் நாட்டின் வளமான இலக்கியத்தை, உலக மொழிகளுக்குக் கொண்டுசெல்வதும், உலக மொழிகளில் இருந்து தமிழுக்கு  நல்ல இலக்கியம், அறிவுசார் நூல்களைக் கொண்டுவருவது மான அறிவுப் பரிமாற்றம் தான், சென்னை சர்வதேசப் புத்தகக் கண்காட்சியின் அடிப்படையான நோக்கம் என்றார். இந்த உயர்ந்த நோக்கங்கள் வெற்றியடையும் என்று நாம் நம்புவோம்.  காரல் மார்க்ஸ் இறந்து போனதை, தோழர் ஏங்கெல்ஸ் உலகத்துக்கு அறிவித்தபோது, மார்க்ஸ் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார் என்று கூறினார். எனவே மனித வாழ்க்கை என்பதே சிந்திப்பதுதான். சிந்திப்பதை நிறுத்துகிற போது மனிதன் இறந்தவன் ஆகிறான்.எனவே, சிந்தனையை தூண்டும் புத்தகங்களின் கருத்துகளை சிந்தையில் ஏத்துவோம். தமிழகத்தில் இன்னமும் புரையோடிகொண்டிருக்கும் பிற்போக்குதனமான சாதி, மதவாதம் எனும் இருட்டி லிருந்து விடுபட புத்தகத் திருவிழா என்கிற வெளிச்சத்தை கையில் ஏந்துவோம்.