tamilnadu

img

வாகன ஓட்டிகளே சுங்கச்சாவடிகளை அகற்றும் நிலை ஏற்படும்

சென்னை, மார்ச் 31- விலைவாசி உயர்வுக்கு காரணமான சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும், இல்லையென்றால் வாகன ஓட்டிகளே அவற்றை  அகற்றும் நிலை ஏற்படும்  என சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன் எச்சரித்தார். சுங்கச்சாவடி கட்டணக் கொள்ளையை கண்டித்தும், அரசின் தவறான மோட்டார் வாகன கொள்கைகளை கண்டித்தும் தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் உள்ளிட்டு பல்வேறு அமைப்புகள்  சார்பில் நாடு முழுவதும் வெள்ளியன்று (மார்ச் 31) சுங்கச்சாவடிகள் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சென்னை மாத்தூர் மஞ்சம்பாக்கம் சுங்கச்சாவடி அருகே சம்மேளன தலைவர் ஆறுமுக நயினார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், சம்மேளன  பொதுச்செயலாளர் வி.குப்புசாமி, கால் டாக்சி ஓட்டுநர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.சாமி, ஏ.மணி, பி.கண்ணன், கே.அருள் (சென்னை லோக்கல் லாரி உரிமை யாளர்கள் சங்கம்), செல்வகுமார், அகத்தியன் (மணல் லாரி  உரிமையாளர்கள் சங்கம்), ஆரணி குணசேகரன் (ஓட்டுநர் பேரவை), வெற்றிவேல் (உரிமைக் கரங்கள் ஓட்டுநர் சங்கம்), ஆதிலிங்கம், இளஞ்செழியன் (டாடா மேஜிக்), கே.ஆர்.முத்துசாமி (சிஐடியு) ஆகியோர் பேசினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அ.சவுந்தரராசன் கூறியதாவது:   “நாடு முழுவதும் சுங்கச்சாவடி என்ற பெயரில் வசூல் செய்வது என்பது வாகன ஓட்டிகளை மடக்கி வழிப்பறி செய்யும் செயலாகும்.  தங்க நாற்கர சாலை, ஆறுவழிச் சாலை, 8 வழிச்சாலை இதுவெல்லாம் பாஜகவின் சாதனை என பிரதமர் மோடி கூறுகிறார். சாலைகளை அமைத்த அரசு, அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டி களை வழிமறித்து சாலைகள் அமைத்த செலவை விட, அதன் பராமரிப்பு செலவுகளை விட பல மடங்கு கூடுதலாக வசூல் செய்துவிட்டனர்.  சாலைகளை அமைப்பதற்காகவும், கட்டமைப்புகளை மேம்படுத்து வதற்காகவும் செஸ் வரி என்ற ஒன்றை அறிவித்து, ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால் அதில் 5 ரூபாய், ஒரு லிட்டர்  டீசல் வாங்கினால் 2 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அப்படி 2 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் கடந்த ஒரு வரு டத்தில் மட்டும் செஸ் வரி மூலம்வசூல் செய்துள்ளனர்.

பகல் கொள்ளை

இதற்கும் பெட்ரோல், டீசல் அடக்க விலைக்கும் தொடர்பு கிடையாது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ரஷ்யாவில் இருந்து 25 விழுக்காடு குறைந்த விலையில் குரூட் ஆயில் வாங்கிக் கொண்டிருக்கிறோம். மேலும் டாலர் இல்லாமல், இந்திய பணத்தில் வாங்குகிறோம். இதில் இருந்தும் லாபம் கிடைக்கிறது. இவ்வளவு லாபம் கிடைத்த பிறகும் கூட பெட்ரோல், டீசல் விலை, சுங்கக் கட்டணத்தை குறைக்கவில்லை, மாறாக அதிகரித்து வரு கிறார்கள். இது அப்பட்டமான பகல் கொள்ளை. தற்போது  ஒரு வழிப்பாதையிலும் கூடுதலான சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 60 கி.மீ.க்கு ஒரு சுங்கச்சாவடி என்ற முறை பின்பற்றப்படுவதில்லை. போக்குவரத்துக் கழகங்கள்  ஒரு கிலோ மீட்டருக்கு . ஒரு ரூபாய் முதல் ஒன்னரை ரூபாய் வரை செலுத்துகின்றன. இவையெல்லாம் பயணிகளிடம் வசூலிக்கப்படுகிறது. எவ்வளவுதான் பயணிகளிடம் வசூலிக்க முடியும். சுங்கச்சாவடிகளால் லாரி உரிமையாளர்கள், டாக்சி உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர்.   எனவே அரசு உடனடியாக அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்ற வேண்டும், இல்லையென்றால் வாகன ஓட்டிகளே அகற்றும் நிலை ஏற்படும்” என்று அ.சவுந்தரராசன் எச்சரித்தார்.