tamilnadu

img

இப்ப ஏன் கொண்டாடுறோம்? - கணேஷ்

அங்கிள்.. ஒரு கதை சொல்லுங்க..
எதுக்கு திடீர்னு கதை..
மரக்கன்று நடுவதற்காகக் குழி தோண்டிக் கொண்டிருந்தவர் நிறுத்தினார். 
தோண்டுறத நிறுத்த வேணாமே..
மீண்டும் தோண்டிக் கொண்டே கதையைத் தொடங்கினார்..
ரொம்ப யோசிச்ச ஒருத்தர் வித்தியாசமா ஒண்ணு பண்ணனும்னு சொல்லி, மிருகக்காட்சி சாலை தொடங்குனாரு..
உண்மைலயே வித்தியாசம்தான்..
நுழைவுக்கட்டணம் 200 ரூபா வெச்சாரு.. யாரும் வரல... சலுகை கொடுத்தா வருவாங்கன்னு நெனச்சு 150 ரூபாயாக் குறைச்சாரு.. அப்பவும் யாரும் வரல.. அது 110 ஆச்சு.. வரல.. 50 ஆச்ச.. யாரும் வரல...  கட்டணம் இல்லனு போர்டு வெச்சாரு.. கூட்டம் அலை மோதுச்சு.. 
உற்சாகமாயிட்டாரா..?
ஆமா.. சும்மா இருக்கல.. ஊழியர்கள்கிட்ட வெளிக் கதவ இழுத்து மூடுங்கன்னு சொன்னாரு... அப்புறமா சிங்கத்தையும், புலியையும கூண்டுல இருந்து திறந்துவிடச் சொன்னாரு.. மக்கள் பயந்து போய் ஓட ஆரம்பிச்சாங்க.. கதவை நோக்கிப் பாஞ்சாங்க.. கதவத் திறங்க.. கதவத் திறங்கன்னு அலறுனாங்க..
திறந்து விட்டாரா..?
திறந்து விடனும்னா கட்டணம் 300 ரூபானு சொன்னாரு..
அங்கிள்... இப்புடித்தான் பயிற்சி மையங்கள்லாம் இருக்கு.. இலவசம்னு சொல்லி நிகழ்ச்சி நடத்துறாங்க.. நீங்க சொன்ன மாதிரி கதவயையும் மூடித்தான் வெக்குறாங்க.. அதே நேரத்துல உண்மைலயே கட்டணமில்லாம நல்லா நடத்துறவங்களும் இருக்காங்க..
அங்கிள்.. அங்கிள்.. தோண்டுறத நிறுத்துங்க.. ஏதோ ஓடு மாதிரி இருக்கு..
வித்தியாசமா இருக்குல
ஆமா அங்கிள்.. இப்புடித்தான தயாராம் சஹானி சொல்லிருப்பாரு..
யாரு அவரு..?
ஹரப்பாவுல அகழ்வாராய்ச்சி பண்ணுனவரு.. 1921ல தோண்டுனப்பதான் மணற்கல் சிலை கிடைச்சுது.. தானியக் களஞ்சியத்தையே கண்டுபிடிச்சாரு.. தோண்டுறப்ப அவரும் என்ன மாதிரிதான சொல்லிருப்பாரு..
1921னா சொன்ன... ஆனா, இந்த வருஷம்தான் நூற்றாண்டு விழா கொண்டாடுறாங்க..
ஆமா அங்கிள்.. சென்னைலதான் ஏற்பாடாகுது... தமிழ்நாடு பட்ஜெட்ல அறிவிச்சாங்க.. 
ஆமா... நானும் படிச்சேன்.. இப்பலாம் விவசாயத்துக்கு தனி பட்ஜெட் போடுறாங்களே.. 2022-23லருந்து தனி பட்ஜெட்தான்.. 
ஹரப்பாவுல கண்டுபிடிச்ச தானியக் களஞ்சியங்கள் மாதிரி புதுசா நிறைய அமைக்கலாமே..
இருக்குறத நல்லா பராமரிச்சாலே பெரிய விஷயம்தான்..  ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்னு நம்ம ஊர்ல இருக்கு... இதையெல்லாம் இப்போ இருக்குற தொழில்நட்பங்களோட இணைச்சு முன்னேற்றம் காணலாம்.. இந்த பட்ஜெட்ல தமிழ்நாடு விவசாயத்துறைங்குற பேர மாத்தி விவசாய - விவசாயிகள் நலத்துறைனு வெச்சுருக்காங்க..
பொது பட்ஜெட்லயும் அதே மாதிரி சமூக பாதுகாப்புத்துறைனு இருந்தத, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறைனு மாத்திட்டாங்க.
சரி.. 1921ல தயாராம் சஹானி ஆய்வு பண்ணுனதுக்கு இப்போ ஏன் நூற்றாண்டு விழா கொண்டாடுறோம்னு கேட்டேன்..
ஆமா அங்கிள்.. ஹரப்பால 1827லயே அறிகுறிகள் கிடைச்சுது.. 1871-72ல அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் தலைமைலயும் தோண்டுனாங்க.. 
அவர்தான இந்தியத் தொல்லியல் ஆய்வுக்கழகத்தோட முதல் தலைவர்.. நிறுவனர்னு சொல்லலாம்..
 ஆமா,  சொல்லப்போனா, மொகஞ்சதாரோ அகழ்வாராய்ச்சி கூட 1922லயே ஆர்.டி.பானர்ஜி தலைமைல பண்ணிட்டாங்க.. ஆனா, 1924லதான் ஜான் மார்ஷல் அதிகாரபூர்வமா அறிவிப்பு வெளியிட்டாரு.. 
ஓ... இதெல்லாம் சிந்துநதிக்கரைலதான இருக்கு.. அதனாலதான் சிந்துசமவெளி நாகரீகம்னு சொல்றோம்..
மொகஞ்சதாரோ சிந்துநதிக் கரைல இருக்கு..ஹரப்பா ராவி நதிக்கரை... ஆனா இதுவும் சிந்து நதில கலந்துரும்.. கிளை நதிதான். 
நாம எதுக்கு தனியா இதக் கொண்டாட நினைக்குறோம்..
அது தமிழர்களுடைய நாகரீகமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்குறோம்.. ஆரியர்களோட வருகையால தென்பகுதிகளுக்கு நாம் தள்ளப்பட்டோம்.. தமிழ்நாட்டுல சென்னனூர், திருமால்புரம், கொங்கல்நகர், மருங்கூர், கீழ்நமண்டி, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை, கீழடி, ஆதிச்சநல்லூர்னு அகழ்வாராய்ச்சி தளங்கள் ஆய்வுல இருக்கு.. தோண்டத் தோண்ட நிறைய வந்துக்கிட்டே இருக்கு..
அடேங்கப்பா... தோண்டத் தோண்ட உன்கிட்ட இருந்தும் இவ்வளவு வருதே..
அங்கிள்.. அங்கிள்... போதும் தோண்டுனது.. மரக்கன்னுக்கு இவ்வளவு போதும்... ரயில் தண்டவாளம் போடுறதுக்கு தோண்டுனப்பதான் ஹரப்பா கிடைச்சுது... அதுமாதிரி இங்கயும் ஏதாவது வந்துறப்போகுது..வாங்க, அடுத்த குழி தோண்டலாம்..

;