tamilnadu

img

மரங்களுக்கு ஒரு மருத்துவமனை

சிதம்பரம் இரவிச்சந்திரன்

வலுவிழந்து வாழப் போராடும் மரங்களுக்காக இந்தியாவில் ஒரு மருத்துவமனை செயல்படுகிறது. அமிர்தசரஸ் நகரில் இயங்கும் இதன் சேவைக்குழுவினர் அலைபேசி அழைப்புகள் வந்தவுடன் நோய்வாய்ப்பட்ட வேப்பமரங்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். இறந்துகொண்டிருக்கும் அரசமரங்களுக்கு புதுவாழ்வளித்து உயிர் பிழைக்க வைக்கின்றனர். இந்த மருத்துவமனையின் மூன்று அவசரசிகிச்சை உதவி வாகனங்கள் மரங்களைக் காப்பாற்ற நகரத் தெருக்களில் அங்குமிங்கும் பயணித்துக் கொண்டிருக்கின்றன. அவை புஷ்பா தாவர கிளினிக்&மரங்களுக்கான மருத்துவமனையின் வாகனங்களே.

மரக்கன்றை மீட்டல்
சாஹிப் சிங் (Sahib Singh) இடம் விட்டு இடம் எடுத்துச் செல்லக்கூடிய ஏணியில் ஏறுகிறார். உச்சியை அடைகிறார். சில கருவிகளின் உதவியுடன் இழுக்கிறார். சிறிய அரசமரக் கன்று அந்த வீட்டின் வரவேற்பறையின் உட்புறச்சுவரில் இருந்து எடுக்கப்பட்டு உரமூட்டப்பட்ட கறுப்பு மண் உள்ள பிளாஸ்டிக் பையில் பாதுகாப்புடன் வைக்கப்படுகிறது. ”மருத்துவமனை முற்றத்தில் இதை நட்டு வளர்ப்போம்” என்று கூறியபடி சிங் ஏணியில் இருந்து இறங்குகிறார். இந்த ஆப்பரேஷன் முடிய சுமார் 20 நிமிடங்கள் ஆனது. அவசரசிகிச்சை கோரி மே 2022இன் ஒரு நாளில் அவருக்கு வந்த மூன்று அழைப்புகளில் முதல் அழைப்பு இது. தோட்டக்கலை நிபுணரான அவர் புஷ்பா மருத்துவமனைக் குழுவில் ஒருவர். ஜனவரி 2020இல் தொடங்கப்பட்ட இம்மருத்துவமனையில் தாவரவியலாளர்கள், வன நிபுணர்கள், தோட்டக்கலை வல்லுநர்கள், மர அறுவைசிகிச்சை நிபுணர்கள் சேவை செய்கின்றனர். நகரின் உயிர்ப்பன்மயத்தன்மை மற்றும் அதன் பசுமையைப் பாதுகாக்க நோய்வாய்ப்பட்ட மரங்களைக் காக்கும் சேவையில் மக்களின் உதவி கோரி வரும் அழைப்புகளுக்கு இவர்கள் இலவசசேவை செய்கின்றனர். வேருடன் சாயும் மரங்களை மறு நடவு செய்கின்றனர். மரணப்படுக்கையில் இருக்கும் மரங்களின் உயிரைக் காக்கின்றனர். வயல்கள் மற்றும் தோப்புகளில் பூச்சித்தாக்குதலால் பாதிக்கப்படும் தாவரங்களின் தொற்றை நீக்குகின்றனர். சில சமயங்களில் மோசமான நிலையில் இருக்கும் மரங்கள் வேறொரு பாதுகாப்புமிக்க இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு மறு நடவு செய்யப்படுகின்றன. இந்த மருத்துவமனை உருவாகக் காரணமாக இருந்த சிவில் ஊழியரான ரோஹித் மெஹ்ரா (Rohit Mehra) “உயிருக்கு ஆபத்து ஏற்படும்போது நம்மை அவசர உதவி சிகிச்சை வாகனங்கள் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்கின்றன. பூமி உயிர் வாழ மூலகாரணமாக இருக்கும் மரங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அவை என்ன செய்யும்?” என்று நம்மைக் கேட்கிறார்.

33 வகையான சேவைகள்
இம்மருத்துவமனை 33 வகையான சேவைகளை வழங்குகிறது. தாவரங்கள் தொடர்பான உதவி கோரும் அழைப்புகளுக்கு இம்மையம் மகத்தான பணியாற்றி வருகிறது. இம்மருத்துவமனைக்கு சொந்தமாக மூன்று அவசரசிகிச்சை உதவி வாகனங்கள் உள்ளன. இது தவிர தோட்டக்கருவிகள், ஒரு நகரும் ஏணி, பல தாவர மருந்துகள், உரங்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகளை கொண்ட கலன்கள் மறு வடிவமைக்கப்பட்ட மின்சார ஆட்டோக்களில் தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு எப்போதும் சேவை புரிய தயார் நிலையில் உள்ளன. இயற்கை வழி உரங்கள் மற்றும் மருந்துகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன என்று மருத்துவமனையின் சூழலியலாளர் மற்றும் ரோஹித் மெஹ்ராவின் மனைவி கீதாஞ்சலி மெஹ்ரா கூறுகிறார். தாவரங்களுக்கு ஏற்படும் பூச்சித்தாக்குதல், வளர்ச்சிக் குறைபாடுகள் போன்றவை சரிசெய்யப்படுகிறது. வேம்பு, முருங்கைப்பொடி, இலவங்கப்பட்டை, அஷ்வகந்தா மூலிகை ஆகியவற்றுடன் காய், கனிகளின் தோல்களும் மருந்தாகப் பயன்படுகின்றன.

வேப்பெண்ணெய் நீர்க் கரைசல்
முப்பது: எழுபது என்ற விகிதத்தில் உருவாக்கப்படும் வேப்பெண்ணெய் நீர்க் கரைசல் தாவரங்களுக்கு சிறந்த பூச்சிக்கொல்லி. வளர்ச்சி ஊக்கி. சவாலான பிரச்சனைகளுக்கு மருத்துவமனை விருக்‌ஷ ஆயுர்வேதம், பஞ்ச ரத்னா, வாஸ்து சாஸ்திரா போன்ற பழமையான நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை சிகிச்சைக்குப் பயன்படுத்திக்கொள்கிறது. பெற்ற அனுபவங்களை இவற்றுடன் இணைத்து தாவரங்களின் பராமரிப்பிற்கு கையேடு ஒன்றையும் தயாரித்துள்ளது. வெல்லக்கரைசலை மண் கலனுக்குள் ஊற்றி மூடி வைத்துவிட்டால் 15 நாட்களில் கரையான்கள் கலனைத் தேடி வந்து அதற்குள் விழும். தோப்புகள், வயல்களில் இவ்வாறு கரையான் பிரச்சனையை சுலபமாக சமாளிக்கலாம் என்கிறார் கீதாஞ்சலி. ஒவ்வொரு நாளும் வரும் தொலைபேசி அழைப்புகள் பதிவு செய்யப்பட்டு முதலில் அழைப்பு வந்த இடத்திற்கு உடனடியாக ஒரு தோட்டக்காரர், ஒரு பல்லுயிர் நிபுணர், ஒரு தன்னார்வலர் செல்கின்றனர். பெரிய நடவடிக்கைகளுக்கு கூடுதல் ஆட்கள் அழைக்கப்படுகின்றனர். சுற்றுப்புறப்பகுதிகளில் இருந்து தினமும் மூன்று முதல் நான்கு அழைப்புகள் வருகின்றன. இறந்துகொண்டிருக்கும் வேப்பமரங்களைக் காக்க சிங், தன் அடுத்த பயணத்தைத் தொடங்குகிறார். ஒவ்வொரு மரமாக அவர் கவனத்துடன் ஆராய்கிறார். பரிசோதனைக்காக மேலாக இருக்கும் பட்டையின் தோலை உரிக்கிறார். உற்றுநோக்குகிறார். பிறகு மரத்தடி மண்ணைப் பரிசோதிக்கிறார். 15 நிமிட ஆய்வுகளுக்குப் பிறகு பிரச்சனை கண்டறியப்படுகிறது. மர உரிமையாளரிடம் “மரங்களில் நஞ்சு கலந்துள்ளது’ என்று அறிவிக்கிறார். உதவியாளரை அழைக்கிறார். மரங்களைச் சுற்றியிருக்கும் மண் முழுவதையும் அகற்றச்சொல்கிறார். அவசர உதவி வாகனத்தில் இருந்து பத்து மூட்டை இயற்கை உரங்கள் கலந்த மண் எடுத்து வரப்பட்டு மரங்களைச் சுற்றிப் போடப்படுகிறது. “இன்னும் இரண்டு வாரங்களில் மரங்கள் சரியாகிவிடும்’ என்கிறார். சுற்றி இருந்தவர்களிடம் நிம்மதிப் பெருமூச்சு எழுகிறது. “இந்த மரங்கள் பல ஆண்டுகளுக்கு முன் என் தந்தையால் நடப்பட்டவை. அவர் இப்போது உயிருடன் இல்லை. அதனால் எங்கள் அனைவருக்கும் இவை உணர்வுப்பூர்வமாக பெரு மதிப்புடையவை” என்று மரங்களின் உரிமையாளர் கூறுகிறார்.

அடுத்த அழைப்பு வந்த இடம் ஐந்து நிமிட பயணத் தொலைவில் உள்ளது. அங்கு பழங்கள் உள்ள ஆறே வயதுடைய பாதாமி மரம் (apricot) முந்தைய நாள் வீசிய தூசுப்புயலில் சாய்ந்துவிட்டது. அழகான மரம் அது என்பதால் சேதம் ஏற்படாமல் அதை நிமிர்த்தி நிறுத்த ஆட்கள் உதவி தேவைப்பட்டது. தன்னார்வலர் ராம் சேவாக் மருத்துவமனைக்கு கூடுதல் ஆட்கள் கோரி அழைப்பு விடுக்கிறார். பதினைந்து நிமிடங்களுக்குள் மூன்று உதவியாளர்கள் அங்கு வருகின்றனர். 90 நிமிடங்களுக்குப் பிறகு வேலை முடிகிறது. மண்வெட்டிகளின் உதவியுடன் மரம் பாதுகாப்பாக மண்ணில் நிமிர்த்தி நிற்க வைக்கப்படுகிறது. வேலை முடிந்து கண்ணிமைகளின் ஓரத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்தபடி அவர்கள் எழுந்து நின்றனர். சுற்றியிருந்தவர்களிடம் இருந்து எழும்பிய கைதட்டல் அதுவரை நிலவிய சோகத்தை விரட்டி அந்த இடத்தை ஆனந்தத்தால் நிரப்பியது. கடைசியாக அவர்கள் மூலிகைக்கலவையால் மண்ணைப் பலப்படுத்தி வேப்பெண்ணை நீர்க் கரைசலைத் தெளித்தனர். “மரம் நன்றாக இருக்கிறது. கவனமுடன் பார்த்துக் கொள்ளுங்கள். தினமும் இதைத் தெளித்தால் பூச்சிகள் மரத்தை நெருங்காது”என்று கூறியபடி அவர் மூன்று பழுப்பு நிற திரவம் நிரம்பிய பாட்டில்களை மர உரிமையாளரிடம் கொடுக்கிறார். இக்காட்சிகள் மருத்துவமனையின் அன்றாட வெளிப்புறச் செயல்பாடுகளின் ஒரு சிறு பகுதி மட்டுமே.

பாரிஸில் இருந்து அழைப்பு       

மகத்தான சேவை செய்யும் இந்த மருத்துவமனையின் செயல்கள் சுற்றுப்புறங்களுடன் ஒதுங்கிவிடுவதில்லை. உலகம் முழுவதும் இருந்து தினம் 30 அழைப்புகள் உதவி கோரி வருகின்றன. தாவரங்கள் தொடர்பாக எழும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண பல நாடுகளில் இருக்கும் மக்கள் விரும்புகின்றனர். சமீபத்தில் பாரிஸில் ஒரு பள்ளியில் இருந்து இதே போல ஒரு மருத்துவமனையை அவர்கள் வளாகத்தினுள் அமைத்துத் தரவேண்டும் என்ற கோரினர். அது இயலாது என்பதால் அங்கு மருத்துவமனையை அமைக்கத் தேவையான வழிகாட்டுதல்களை நாங்கள் அளித்தோம் என்கிறார் ரோஹித். உயிருக்கும் மேலாக மரங்களைக் கருதி பூமியில் வாழ்ந்தவர்கள் உண்டு. மனிதனை வாழவைக்கும் மரங்களை வாழவைக்கும் இந்த மருத்துவமனையின் சேவைகள் உலகிற்கே முன்மாதிரியானது என்பதில் ஐயமில்லை.