tamilnadu

img

‘எனக்கே பிறப்புச் சான்று இல்லாத போது என் குழந்தையின் சான்றுக்கு எங்கு போவது?’

புதுதில்லி:
குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப்பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக, நாடு முழுதுமிருந்து வந்துள்ள அடித்தட்டு மக்களின் கிளர்ச்சிப் போராட்டம் வெள்ளியன்று புதுதில்லி நாடாளுமன்ற வீதியில் நடைபெற்றது. இதில் பாலியல் தொழிலாளர்கள், புலம்பெயர்ந்து வந்தவர்களில் அடித்தட்டு மக்கள் மற்றும் முஸ்லீம்கள் பெருவாரியாகப் பங்கேற்றனர்இக்கிளர்ச்சிப் போராட்டம், இந்தியாவின் முதல் பெண் கல்வியாளரும் சமூக சீர்திருத்தவாதியுமான சாவித்ரிபாய் புலே பிறந்த தினத்தை அனுசரித்திடும் விதத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இக் கிளர்ச்சிப் போராட்டத்தில் நாட்டின் பல மாநிலங்களிலும் இயங்கிடும், அகில இந்திய பாலியல் தொழிலாளர்களின் வலைப்பின்னல், தெலங்கானா ஹிஜ்ரா இண்டர்செக்ஸ் டிரான்ஸ் சமிதி, பிர்சாஅம்பேத்கர் புலே மாணவர் சங்கம், தேசிய கூவிவிற்போர் சம்மேளனம், இந்திய மகளிர் தேசிய சம்மேளனம் உட்பட 45 குழுக்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

இக்குழுக்களைச் சேர்ந்தவர்களின் பொதுவான கவலை, தங்களில் எவராலும் பிறப்புச் சான்றிதழ், வசிப்பிடச் சான்றிதழ், நில உரிமைக்கான பதிவேடுகள் போன்றவற்றை அளிக்க இயலாது என்பதாகும்.பாலியல் தொழிலாளர்களின் மிகப் பெரிய பிரச்சனை, தங்கள் தொழில் குறித்தும் மற்ற விவரங்கள் குறித்தும் மெய்ப்பிப்பதற்கு ஆவணம் எதுவும் இல்லை என்பதாகும்.  இதனால் கணக்கெடுப்பு எடுக்கப்படும் சமயத்தில் தாங்கள் அதிகாரவர்க்கத்தினரால் மிகவும் மோசமாக துன்புறுத்தப்படுவோம் என பயப்படுகிறார்கள்.“நான் எங்கே பிறந்தேன் என்பதற்கான சான்று எனக்கே இல்லாதபோது, என் குழந்தைக்கு அப்பன் யார் என்று என்னால் எப்படிச் சொல்ல முடியும்? எனவே தேசியக் குடிமக்கள்பதிவேட்டிற்கான தகவல்கள் பதியப்படும்போது என் அடையாளம் முழுமையாகத் துடைத்தெறியப்பட்டுவிடும்.” என்று கிளர்ச்சிப்போராட்டத்தில் பங்கேற்ற ஒரு பாலியல் தொழிலாளி கூறினார்.அநேகமாக பாலியல் தொழிலாளர்கள் என்பவர்கள் ஒரு நகரத்திலிருந்து வேறொரு நகரத்திற்குப் புலம்பெயர்ந்து கொண்டே இருப்பார்கள். இதன்காரணமாக அவர்கள் தங்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை இழந்திருப்பார்கள்.

ஆண் ஆதிக்க அரசாங்கம்
“தேசியக் குடிமக்கள் பதிவேடு என்பது, இந்த அரசாங்கம் ஓர் ஆண் ஆதிக்க அரசாங்கம் என்பதற்கான மற்றுமொரு எடுத்துக்காட்டாகும். ஏனெனில், குழந்தைகளின் அப்பாவின் அடையாளத்தை மெய்ப்பித்திட வேண்டும்என்று குடிமக்கள் பதிவேடு வற்புறுத்துகிறது. இதன்மூலம் இந்த அரசாங்கம், குழந்தைகளுக்கும் அவற்றின் அம்மாக்களுக்கும் இடையிலான உறவைப் பற்றிக் கண்ணை மூடிக்கொண்டிருக்கிறது,” என்று அகில இந்திய பாலியல் தொழிலாளர்கள் வலைப்பின்னலின் தலைவர் குசும் தெரிவித்தார்.பாலியல் தொழிலாளர்கள் பிரச்சனை போன்றே, நிலப்பிரபுத்துவ சமூகத்தின் இழிசெயல்கள் காரணமாக, வீதிகளில் தூக்கிஎறியப்பட்டு, அநாதைகளாக உழன்றுகொண்டிருப்பவர்கள் நிலை வேறு மாதிரியானதாகும்.“எங்களில் பலர், எங்கள் குடும்பங்களுடன் எவ்விதத் தொடர்பும் இன்றி இருந்து வருகிறோம். ஏனெனில் எங்களில் பலர், எங்கள் குடும்பத்தாலும், சமூகத்தாலும் வீதிகளில் தூக்கி எறியப்பட்டவர்களாவோம். எனவே, எங்களிடம் வந்து உங்கள் ஆவணங்களைத் தாருங்கள் என்று கேட்டால், அவற்றிற்கு நாங்கள் எங்கே போவது?” என்று அவர்கள் கேள்வி கேட்கின்றனர்.

“குடியுரிமைத் திருத்தச் சட்டம் எந்தவிதத்திலாவது முஸ்லீம்களை ஒதுக்குகிறது. அதிலும், இதுபோன்று அநாதைகளாக, ஆதரவற்றவர்களாக இருந்திடும் முஸ்லீம்களின் நிலையோ மிகவும் மோசமானதாகும்,” என்றுஆதரவற்ற முஸ்லீம்களுக்கான திட்டத்தின் (Queer Muslim Project) தலைவர் சயிதா லமியா பர்வீன் கூறினார். “தேசியக் குடிமக்கள் பதிவேடும், தேசிய மக்கள் தொகைப் பதிவேடும் பாலியல் தொழிலாளர்களுக்கும், சிறுபான்மை முஸ்லீம் பெண்களுக்கும் சுயநிர்ணயத்திற்கான உரிமையை மறுக்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.“தேசியக் குடிமக்கள் பதிவேடும், தேசிய மக்கள்தொகைப் பதிவேடும் நீங்கள் இந்த நாட்டின் மதிப்புக்குரிய பிரஜைதான் என்று கருதும் வரையிலும் இந்த நாட்டில் எவரும் தன்னை ஒரு பிரஜையாகக் கருத முடியாது. குடியுரிமைத் திருத்தச் சட்டமும், தேசியக் குடிமக்கள் பதிவேடும்  காவல்துறையினரின் கைகளில் அபரிமிதமான அதிகாரத்தை அளிக்கின்றன,” என்று அவர் கூறினார்.

புலம்பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்கள்
“அஸ்ஸாம் மாநிலத்தில் தலைநகர் குவஹாத்தியில் நகர்ப்புற ஏழைகள் மற்றும் புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் பலர் தேசியக்குடிமக்கள் பதிவேட்டிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதைப் பார்த்திருக்கிறோம். ஏனெனில் தேசியக் குடிமக்கள் பதிவேட்டில் பதிவு செய்வதற்குத் தேவையான ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. மேலும், பணமதிப்பிழப்பு சமயத்தில் ஏற்பட்டதைப் போன்று, நாட்கூலித் தொழிலாளர்கள் பலர், தங்கள் வேலைகளை விட்டுவிட்டு, ‘அந்நிய நடுவர் மன்ற’த்தின் முன் ஆஜராகக் கோரப்பட்டிருந்தார்கள். மேலும், புலம்பெயர்ந்து வந்து, சேரி போன்ற பகுதிகளில் வாழ்ந்த தொழிலாளர்கள் பலர், அவர்கள்தங்கியிருந்த இடத்திற்கான சட்டபூர்வமான உரிமையாளர்களை அறிந்திருக்க வில்லை. காரணம் அந்த இடத்தில் அவர்கள் வெகு ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள். அந்த இடங்களை அவர்கள் மிகவும் வளர்ச்சி செய்தும் வைத்திருக்கிறார்கள். எனினும் இதுவெல்லாம் தேசியக் குடிமக்கள் பதிவேடு அல்லது தேசிய மக்கள்தொகைப் பதிவேடு பரிசீலித்து, அவர்களுக்கு உரிமைகள் அளிக்கத் தயாரில்லை.” என்று தேசிய கூவிவிற்போர் சம்மேளனத்தைச் சேர்ந்த அங்கிட் ஜா கூறினார்.      (ந.நி.)

;