tamilnadu

img

ராணுவ தளபதிக்கு கடும் கண்டனம்

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை சிறுமைப்படுத்துவதா?

புதுதில்லி,டிச.26-  மக்களை பிளவுபடுத்தும் வகை யில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த த்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை திரும்பப்பெறக்கோரியும் நாடு முழுவதும் பொதுமக்கள், மாணவர்கள்,இளைஞர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் இப்போராட்ட த்தில் ஈடுபட்டவர்களை சிறுமைப் படுத்தும் வகையில், இந்திய நாட்டின் ராணுவ தலைமைத் தளபதியே பேசியுள்ளது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.ராணுவ தலைமை தளபதி ஜென ரல் பிபின் ராவத்தின் இந்த பேச்சுக்கு  பல்வேறு தரப்பிலிருந்து கண்ட னங்கள் எழுந்துள்ளன.  தில்லியில் வியாழனன்று நடை பெற்ற சுகாதார உச்சி மாநாட்டில் பங்கேற்ற ஜெனரல்  பிபின் ராவத் பேசியதாவது:

தலைமைப் பண்பு என்பது முன்னணியில் நின்று மக்களை வழிநடத்துவது. தலைவர்கள் முன்னடத்திச் செல்லும்போது, அனைவரும் பின் தொடர்வார்கள்.  மக்களை சரியான பாதையில் வழிநடத்திச் செல்லவேண்டும். மக்களைத் தவறான திசையில் வழிநடத்துபவர்கள் தலைவர்கள் அல்ல. நிறைய பல்கலைக்கழக மாண வர்கள் மற்றும் கல்லூரி மாண வர்களை நாம் பார்க்கிறோம். நமது  நகரங்களில் அவர்கள் ஒரு பெரும் கூட்டத்தை வன்முறையை கையில் எடுக்கும் வகையில் வழிநடத்து கின்றனர். தவறான பாதையில் வழி நடத்தக் கூடாது.  தீவைப்பு, வன்முறை  போன்ற தவறான பாதையில் மக்களை வழிநடத்திச் செல்வது தலைமைப் பண்பு அல்ல. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

குடியுரிமை சட்டத்தைக் கண்டி த்து நடைபெறும் போராட்டத்திற்கு எதிராக, பாஜக ஆட்சியாளர்களின் தொனியிலேயே ராணுவ தளபதி பேசியிருப்பது முற்றிலும் அரசி யலமைப்பு ஜனநாயகத்திற்கு எதிரானது என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இன்று அரசியல் பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கு ராணுவ தளபதியை அனுமதித்தால், அது நாளை ராணுவத்தையே கையகப்படுத்த முயற்சிக்கவும் அனுமதிப்பதற்கு வழிவகுக்கும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரிஜேஷ் கலாப்பா கண்டித்துள்ளார். 

அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவரும், ஹைதரா பாத் எம்.பி.யுமான ஒவைஸி செய்தியாளர்களிடம் கூறுகையில், அனைவருக்கும் போராடுவதற்கான உரிமை உள்ளது. நெருக்கடி நிலை காலகட்டத்தில் பிரதமரே போராட்டத்தில் ஈடுபட்டதாகக் குறிப்பிடுகிறார். போராட்டங்களின் போது வன்முறை ஏற்பட்டால், அதைக் கட்டுப்படுத்துவதற்கு போலீஸ் இருக்கிறது. இதில் ஏன் ராணுவம் தலையிட வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.  காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் திக்விஜய் சிங் டிவிட்டரில் ராணுவத் தலைமை தளபதிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.  அதில், “உங்களது கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். அதே சமயம், தலைவர்கள் தம்மைப் பின்பற்றுவர்களை வகுப்புவாத வன்முறை மூலம் இனப்படுகொலையைச் செய்ய அனுமதிக்க மாட்டார்கள். இதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?” என்று கேட்டுள்ளார். ராணுவ தளபதி பிபின் ராவத் வருகின்ற  31 ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

மன்னிப்புக் கேளுங்கள் ஜெனரல் ராவத்

மோடி அரசாங்கத்தின் கீழ், சீருடை அணிந்து ஓர் உயர்ந்த பதவியில் உள்ள அதிகாரி எந்த அளவிற்கு மிகவும் வெட்கம்கெட்டமுறையில் தனது அதிகார வரம்பெல்லையைத் தாண்டி செயல்பட முடியும் என்பதையும், நிலைமைகள் எந்த அளவிற்குத் தரம் தாழ்ந்து சீர்கெட்டிருக்கிறது என்பதையும் ராணுவத் தளபதியின் பேச்சு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. எனவே, ராணுவத்தை அரசியல்மயமாக்கிடும் பாகிஸ்தான் வழியில் போய்க்கொண்டிருக்கிறோமா என்று கேள்வி எழுப்ப வேண்டிய அவசியம் நமக்கு ஏற்பட்டிருக்கிறது. மிகவும் உயர்மட்ட ராணுவ அதிகாரி நிலையில் உள்ள ஒரு நபரிடமிருந்து,  ஜனநாயகப் போராட்டங்கள் குறித்து இத்தகைய அருவருப்பான தலையீடு வந்திருப்பது என்பது சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இதுவரை கேட்டறியாததாகும்.

நாட்டின் அரசமைப்புச்சட்ட ஏற்பாடுகளில் மிகவும் மோசமான முறையில் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய விதத்தில், ஆராயாமல் தான் தோன்றித்தனமாக செயல்பட்டுள்ளதற்காக ஜெனரல் நாட்டின் முன் மன்னிப்பு கோர வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு வலியுறுத்துகிறது. அரசாங்கமும் இவ்வாறு வரம்பு மீறியுள்ளதைக் குறித்துக் கொண்டு, ஜெனரலைக் கண்டித்திட வேண்டும்.

அரசமைப்புச் சட்டத்திற்கு உயரிய மதிப்பினை அளித்திடும் நாட்டுப்பற்றாளர்கள் அனைவரும், ராணுவத்தின் பங்களிப்பு, இப்படி வெட்கங்கெட்ட முறையில் அரசியல்மயமாக்கப்பட்டிருப்பது குறித்து, கூட்டாக எதிர்ப்பினை எழுப்பிட வேண்டும் என்றும் அரசியல் தலைமைக்குழு எதிர்பார்க்கிறது. 

சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு விடுத்துள்ள கண்டன அறிக்கையிலிருந்து


 

;