tamilnadu

img

பொருளாதாரத்தை தோலுரித்துக்காட்டும்  மின் நுகர்வு 

இந்தியாவின் பொருளாதாரம் கடுமையான சிக்கலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை தொடர்ந்து பல புள்ளிவிபரங்கள் அம்பலப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. அந்த வரிசையில் தற்போதும் மின்சாரம் நுகர் சரிந்துள்ளது என்ற புள்ளிவிபரம் வெளியாகி உள்ளது. தொழில் துறையின் சரிவை வெளிச்சமிட்டு காட்டி உள்ளது.  ஆனால் மோடி அரசு பொருளாதாரம் குறித்த உண்மை நிலையை பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து மறைக்க முயல்கிறது. நாட்டின் தொழில் துறையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக தொடர்ந்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மக்களின் பணத்தை வாரிவழங்க முயற்சித்து வருகிறது. 
ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சியின் பாய்ச்சலை துல்லியமாக வெளிப்படுத்தும் காரணிகளில் ஒன்றுதான் மின்சார நுகர்வு. இந்தியாவில் ஓராண்டில் செலவாகும் மொத்த மின்சாரத்தில் 60 சதவிகித மின்சாரம் வீட்டு உபயோகத்திற்கும் 40 சதவிகிதம் வணிக நிறுவனங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. தொழில் நகரமான மகாராஷ்டிராவில் 46 சதவிகித மின்சாரமும், குஜராத்தில் 54 சதவிகித மின்சாரமும் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்துகின்றன. இந்நிலையில் 2019 - 20 நிதி ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே மின்சார நுகர்வு சரிந்து வந்தது. கடந்த ஆகஸ்ட் 2019 முதல் நவம்பர் 2019 மாத காலத்தில் ஒட்டு மொத்த இந்தியாவில் மின்சார நுகர்வு 4.7 % குறைந்து இருக்கிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் நவம்பர் காலகட்டத்தை ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் மகாராஷ்டிராவில் 13.2 சதவிகித மின் நுகர்வும்  குஜராத்தில் 12.5 சதவிகித மின்நுகர்வும் குறைந்துள்ளது. 
அக்டோபர் 2018-ம் மாதத்துக்கான மின்சார நுகர்வையும், அக்டோபர்- 2019  மின்சார நுகர்வையும் ஒப்பிட்டால், ஒட்டு மொத்த இந்தியாவில் 12.5 % மின்சார நுகர்வு சரிந்து இருக்கிறது. இதே அக்டோபரில் மகாராஷ்டிரத்தில் 21.2 சதவிகிதமும், குஜராத்தில் 18.8 சதவிகிதமும் மின்சார நுகர்வு சரிந்து இருக்கிறது.  இது மோடி தொழில்வளர்ச்சியை பெருக்கவே வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார்  பாஜக தலைவர்களின் வாதத்தை பொய்  என்று நிரூபித்துள்ளது. மோடியின் ஆட்சிக்காலத்தில் 2018ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்தே மின்சார நுகர்வு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தற்போது அக்டோபர் 2019 இந்திய தொழில் துறை உற்பத்தி 3.8 சதவிகிதம் குறைந்துள்ளது.  

இதற்கிடையில் வங்கிகளில் 2017-18ஆம் நிதியாண்டில் 41,167 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடிகள் நடந்த நிலையில் தற்போது ஆர்பிஐ வெளியிட்டுள்ள தகவலின் படி 2018-19ஆம் நிதியாண்டில் சுமார் 71,543 கோடி ரூபாய் அளவிலான மோசடிகள் பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் கிட்டதட்ட 74 சதவீதம் அதிகமாகும். மோடி அரசு கள்ளப்பணம், கருப்பு பணத்தை பிடிக்க நடவடிக்கை எடுத்ததாக கூறி செயல்படுத்திய பண மதிப்பிழப்பு ஜிஎஸ்டி போன்ற தவறான பொருளாதார நடவடிக்கைகளே தற்போதைய பொருளாதார சிக்கலுக்கு காரணம் என்று  முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம்ராஜன் உள்ளிட்ட பல நிபுணர்களும் வெளிப்படையாக குற்றம் சாட்டி வரும் நிலையில் ரிசர்வ் வங்கியின் உபரிநிதியையும் பறித்து கார்ப்பரேட்டுகளுக்கு கொடுக்கத்தான் அரசு துடித்துக்கொண்டிருக்கிறது.. இது இந்திய பொருளாதாரத்தை மேலும் நெருக்கடிக்கு தள்ளும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 

;