tamilnadu

img

தில்லி காவல்துறையினரின் புலன்விசாரணை மீது விசாரணைக் கமிஷன் அமைத்திடுங்கள்... குடியரசுத் தலைவருடன் சீத்தாராம் யெச்சூரி- து.ராஜா -கனிமொழி- அகமது பட்டேல்-மனோஜ் ஜா சந்திப்பு

புதுதில்லி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா, காங்கிரஸ் பொருளாளர் அகமது படேல்,எம்.பி., திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் மனோஜ் ஜா, எம்.பி. ஆகியோர் வியாழக்கிழமையன்று குடியரசுத் தலைவரைச் சந்தித்தனர். வடகிழக்கு தில்லி கலவரங்கள் தொடர்பாக தில்லிக் காவல்துறையினர் மேற்கொண்ட புலன்விசாரணை குறித்து விசாரணை சட்டத்தின் ஆணையத்தின் கீழ் பணியில் உள்ள அல்லது ஓய்வுபெற்ற நீதிபதிகளின் தலைமையில் விசாரணை நடத்திட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று குடியரசுத் தலைவரை வலியுறுத்தினர்.அப்போது அவர்கள் குடியரசுத் தலைவரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

பொய் வழக்குகள்
வடகிழக்கு தில்லியில் 2020 பிப்ரவரி 23 மற்றும் 26 தேதிகளுக்கு இடையே நடைபெற்ற மதவெறி வன்முறை வெறியாட்டங்கள் குறித்தும் அப்போது 53 பேர் பலியான சம்பவங்கள் குறித்தும் தில்லிக் காவல்துறையினர் மேற்கொண்டுள்ள புலன்விசாரணை குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தி இந்த மனுவைத் தங்களுக்கு எழுதி யிருக்கிறோம்.தில்லிக் காவல்துறை சிறப்புப் புலனாய்வுக்குழுக்கள் அமைத்தும் சிறப்பு செல்கள் அமைத்தும் தில்லிக் கலவரங்கள் தொடர்பாகசதி அம்சங்கள் குறித்தும் விசாரணைசெய்தன.எனினும், வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்றபோது தில்லிக் காவல்துறை நடந்துகொண்ட விதம் பல்வேறு ஆழமான கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும் அது விசாரணையில், குடியுரிமைத் திருத்தச்சட்டம்/தேசியக் குடிமக்கள் பதிவேடு/தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நடைபெற்ற இயக்கங்களில் கலந்துகொண்ட இளைஞர்களையும் சமூகச் செயற்பாட்டாளர்களையும் மேற்படி வன்முறையில் ஈடுபட்டவர்களாகப் பிணைத்துஅவர்களைத் துன்புறுத்தி அவர்கள் மீது பொய்யாக வழக்குகள் புனைந்துள்ளது.

இவர்களால் உற்பத்தி செய்யப்பட்ட சதி மோசடியானது அரசியல்கட்சித் தலைவர்களை பொய்யாக இதனுடன் பிணைக்கும் அளவிற்கு சென்றிருக்கிறது. தேசியக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம்யெச்சூரி, நீண்ட காலம் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டவர். இவருடன் புகழ்பெற்ற அறிவுஜீவிகள், கல்வியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியவர்களையும் இவ்வழக்குகளில் பிணைத்துள் ளனர். இத்தகைய புலன்விசாரணைகள்  நடைபெற்றுவரும் விதமானது ஆழமான பல கேள்விகளை எழுப்புகிறது. 

வீடியோ ஆதாரங்கள்
வடகிழக்கு தில்லியில் வன்முறை வெடித்த சமயத்தில் அதற்கு தில்லிக் காவல்துறையினர் உடந்தையாக இருந்தது குறித்து எண்ணற்ற வீடியோக்கள் பொது சமூக ஊடகங்களில் வெளிவந்தன. அவர்கள்குண்டர்கள் கற்களை எறிவதற்குக் கட்டளைகள் பிறப்பித்தது அல்லது வன்முறை வெறியாட்டங்களில் கும்பல்கள் ஈடுபடும்போது அவர்கள் வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருப்பதுபோல் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்தன. வன்முறை நடைபெற்ற சமயத்தில் சீருடை அணிந்த காவல்துறையினர் இளைஞர்களை அடித்து, காயப்படுத்தி, சாலையில் இழுத்துச் சென்றதும், அவ்வாறு இழுத்துச்செல்லும்போது, அந்த நபரைக் குண்டாந்தடியால் அடித்துக்கொண்டே, தேசிய கீதம் பாடக் கட்டாயப்படுத்தியதும் ஒரு வீடியோவில் காட்டப்பட்டது. அவ்வாறு இழுத்துச்செல்லப்பட்டவர்களில் ஃபைசான் என்பவர், அடுத்தசில தினங்களில் காயங்களினால் இறந்துவிட்டார். மற்றொரு நிகழ்வில், காவல் துணை ஆணையர் பாஜக தலைவருக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருக்கிறார்.  பாஜக தலைவர் வன்முறையைத் தூண்டுகிறார். கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டிருப்போருக்கு எதிராக மிரட்டல் விடுக்கிறார். அவர்கள் அந்த இடத்தைக் காலி செய்யாவிட்டால், அவரே அதை வேறுவிதமாகச் செய்வதாக மிரட்டல் விடுத்தார்.  இவ்வாறு வன்முறை நிகழ்வுகளில் காவல் துணை ஆணையர், எண்ணற்ற காவல் அதிகாரிகள் உட்பட  மூத்த காவல்துறை அதிகாரிகளே சம்பந்தப்பட்டிருப்பது குறித்தும், பாஜகதலைவர் சம்பந்தப்பட்டிருப்பது குறித்தும்எண்ணற்ற புகார்கள் அளித்தபோதும் வீடி யோக்களில் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்ட காவல்துறையினரை அடையாளம் கண்டு அவர்கள்மீது வழக்கு தொடராமல் தில்லிக் காவல்துறை அலட்சியம் செய்கிறது.

விசாரணையில் பாரபட்சம்
வன்முறை நடந்த சமயத்தில் கைதுசெய்யப்பட்டவர்களில் பலர் காவல்துறையினரால் காவல் அடைப்பின்போது கடுமையாகத்தாக்கப்பட்டிருப்பதும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றது. பிப்ரவரி 26 அன்று குரேஜி என்னுமிடத்திலிருந்து காலித் சைஃபி என்பவரை அழைத்துச்சென்று, அவருடைய இரு கால்களிலும் கடுமையாகத் தாக்கி இருக்கின்றனர். பின்னர் அவரை நீதித்துறை நடுவரிடம் கொண்டுசென்றிருக்கின்றனர்.குற்ற அறிக்கைகளில் பாஜகவுடன் சம்பந்தப்பட்ட தலைவர்கள் இந்த வன்முறை நிகழ்வுகளின்போது மேற்கொண்ட பங்களிப்புகள் குறித்தும், வன்முறையைத் தூண்டும் விதத்தில் அவர்கள் ஆற்றிய உரைகள் குறித்தும் எதுவும் கூறப்படாமல் மவுனம் கடைப்பிடித்திருப்பது, விசாரணையின் பாரபட்சமான தன்மையை காட்டுகிறது. இது ஆழமான கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

கலவரத்தில் பாஜக தலைவர்கள்
2019 டிசம்பரிலிருந்து, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடுபவர்கள் மீது, ஆளும் பாஜக தலைவர்கள் வெறுப்பைக் கக்கும் விதத்தில் பேசியவைகள் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. போராட்டக்காரர்களைப் பார்த்து, “துரோகிகளைச் சுட்டுத் தள்ளுங்கள்” என்று ஓர் அமைச்சர் கத்தியிருக்கிறார். உண்மையில், பாஜக தலைவர்களான கபில் மிஷ்ரா, அனுராக் தாகூர், பர்வேஷ் வர்மா, சத்யபால்சிங், ஜெகதீஷ் பிரதான், நந்த் கிஷோர் குஜ்ஜார், மோகன் சிங் பட் முதலானவர்களைக் குற்றம்சாட்டி, அவர்கள் வன்முறையில் பங்கெடுத்துக்கொண்டது குறித்தும், அவற்றுக்குத் துணை போனது குறித்தும் மக்கள் துணிந்து முறையீடுகளைத் தாக்கல் செய்தபோதும், அவற்றின்மீது தில்லிக் காவல்துறையால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பாஜக தலைவர்கள் மற்றும் காவல் துறையைச் சேர்ந்தவர்களே வன்முறையில் ஈடுபட்டிருப்பது குறித்து தில்லி காவல்துறை கண்டுகொள்ளாது இருக்கும் அதே சமயத்தில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்களை இந்த வன்முறையுடன் சம்பந்தப்படுத்தியும், அவர்கள்தான் இந்த வன்முறை நிகழ சதித் திட்டங்கள் தீட்டினார்கள் என்றும் கிரிமினல்தனமான முறையில் விசாரணையைக் கொண்டுசென்றிருப்பது போன்றே தோன்றுகிறது.

திட்டமிட்ட சித்தரிப்பு
குற்ற அறிக்கைகளில், தில்லியில் சமூகச் செயற்பாட்டாளர்கள் பேசிய பேச்சுக்கள்குறித்து, காவல்துறையினரால் விவரிக்கப்பட்டுள்ள கால வரிசை, கலவரங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே அவர்கள் பேசியதுபோல் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக 2020 மார்ச்சில் மக்களவையில் உள்துறை அமைச்சரால் சதி குறித்து அளிக்கப்பட்ட கதையை ஒட்டியே ஒட்டுமொத்த விசாரணையையும் தில்லிக் காவல்துறையினர் எடுத்துச்சென்று கொண்டிருக்கின்றனர் என்றே தோன்றுகிறது. உண்மையில் உள்துறை அமைச்சர் பேசியசமயத்தில் கலவரங்கள் தொடர்பாக எவ்வித மான விசாரணையும் தொடங்கப்படவில்லை.  

முதல் தகவல் அறிக்கை எண் 59/2020இல் இந்த ‘சதி’ சம்பந்தமாக விசாரணை செய்துள்ள சிறப்புப் பிரிவு, மூர்க்கத்தனமான ‘சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தைப்’ பிரயோகித்திருக்கிறது.  சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிராக இச்சட்டத்தைப் பிரயோகித்திருக்கிறது. கடந்த ஆறு மாதங்களாக கிளர்ச்சிப் போராட்டங்களுக்கு ஆதரவாக இருந்தவர்களையும், பங்கெடுத்துக் க்கொண்டவர்களையும் காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்வது தொடர்கிறது. விசாரணையின்போது அவர்களைத் துன்புறுத்துவது என்பதும், அச்சுறுத்துவது என்பதும், அவர்கள் கூறியதாக பொய் வாக்குமூலங்கள் தயாரிப்பதுஎன்பதும், சதி சம்பந்தமாக புனையப்பட்ட ‘சாட்சியத்தை’ உருவாக்க முயல்வதும் தொடர்கிறது. அதுமட்டுமல்ல, இவ்வாறு தயாரித்த பொய்யான வாக்குமூலங்களை ஊடகங்களுக்குக் கசிய வைத்திடும் வேலையையும் தீய நோக்கத்துடன் செய்துகொண்டிருக்கிறது. (உண்மையில் சட்டத்தில் இதற்கெல்லாம் ஒரு சாட்சியம் என்ற மதிப்பு அளிக்கப்படுவது இல்லை) இவ்வாறு சமூகச் செயற்பாட்டாளர்கள், சமூகத்தில் உயர்நிலையில் உள்ள தலைவர்கள் இந்த சதியில் பின்னணியில் இருந்தார்கள் என்று கூறி மக்கள் மத்தியில் அவர்களது செல்வாக்கைக் குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.  

எனவே, தில்லிக் காவல்துறையினரின் விசாரணை நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடியதாக இல்லை. இதன் விசாரணை பாரபட்சமற்றதாக இல்லை. குறிப்பாக காவல் சிறப்பு ஆணையர் (குற்றப்பிரிவு), “இந்து இளைஞர்களைக் கைது செய்தது தொடர்பாக இந்து சமூகத்தினர் மத்தியில் மனக்கசப்பு அதிக அளவில் இருந்தது” என்றும், எனவே கைது செய்யும்போது உரிய கவனமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.நம்பகமான, எப்பக்கமும் சாயாத விசாரணை மிகவும் முக்கியம். அதன்மூலம்தான் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும். நாட்டில் ஆட்சிக்கு எதிராகக் கருத்துக் கூறுபவர்களைக் கைது செய்யும்விதத்தில் புலன்விசாரணை செல்வதை அனுமதிக்க முடியாது.
எனவேதான் நாங்கள், 1952ஆம் ஆண்டு விசாரணைச் சட்ட ஆணையத்தின் கீழ் பணியிலிருக்கும் அல்லது ஓய்வுபெற்ற நீதிபதிகளின் கீழ் புலன்விசாரணை நடத்திட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தங்களை வலியுறுத்துகிறோம்.இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளார்கள்.கோவிட்-19 காரணமாக ஐந்து பேர் மட்டுமே குடியரசுத்தலைவரை சந்திக்க அனுமதிக்கப்பட்டார்கள்.           (ந.நி.)

;