tamilnadu

img

ஜேஎன்யு-வைப் பாதுகாப்போம்- பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் வளாகத்திலும், விடுதிகளிலும் மாணவர்களையும், ஆசிரியர்களையும் முகமூடி அணிந்த குண்டர்கள் தாக்குவது தொலைக்காட்சி அலைவரிசைகளில் காட்டப்பட்டதைப் பார்த்தவர்கள், மோடி அரசாங்கமானது பொதுக் கல்வி நிறுவனங்களை, குறிப்பாக மத்தியப் பல்கலைக் கழகங்கள் மீது தாக்குதல் தொடுப்பதைப் பார்த்தவர்கள், மிகவும் திடுக்கிட்டுப்போனார்கள்.

ஜேஎன்யு, இந்துத்துவா வெறியர்களின் தாக்குதல் இலக்கில் பிரதானமாக இருந்திருக்கிறது.ஜேஎன்யு,  சுதந்திரமான பேச்சு, விசாரணை மற்றும் பகுத்தறிந்து விஷயங்களை ஆராய்ந்து முடிவுகளை மேற்கொள்ளுதல் என்று ஜனநாயகபூர்வமான சூழ்நிலை நிலவும் ஒரு கல்வி மையமாகப் புகழ் பெற்று முதன்மை நிறுவனமாகத் திகழ்ந்து வந்தது. இவை அனைத்துமே இந்துத்துவா சக்திகளுக்கு வெறுப்பூட்டக்கூடியவைகளாகும். எனவேதான் பல்கலைக்கழகத்தின் இத்தகைய சிந்தனையோட்டத்தை முற்றிலுமாக அழித்து ஒழித்திட வேண்டும் என்று வெறியர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். எம். ஜெகதீஷ் குமார், பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டதானது, ஜேஎன்யுவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளத்தை 
அழித்து ஒழித்துக்கட்டுவதற்கு இவர்கள் மேற்கொண்டிருக்கும் திட்டமிட்ட முயற்சிக்குக் கட்டியங்கூறியது. மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக இருந்துவந்த முற்போக்குக் கொள்கை அம்சங்கள் ரத்து செய்யப்பட்டன. ஆசிரியர் நியமனங்கள், ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்களை இணைத்துக்கொள்ளும் விதத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்தன. மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர் சங்கம் கடந்த நான்கு  ஆண்டுகளாக கடும் தாக்குதலுக்கு உள்ளாகி வந்தது. மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர் சங்கப் பிரதிநிதிகள், பல்கலைக் கழகத்தால் மேற்கொள்ளப்படும் ஒழுங்கு நடவடிக்கைகள் மூலமாகவும், அவர்களுக்கு எதிராகக் கிரிமினல் வழக்குகளைப் பதிவு செய்வதன் மூலமாகவும் பழிவாங்கப்பட்டு வந்தார்கள். ஆசிரியர்களுக்கும்கூட காரணம் கோரும் அறிவிப்புகள் அனுப்பப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இறுதியாக, இந்த நடப்புக் கல்வியாண்டில், விடுதிக் கட்டணங்கள், உணவுக் கட்டணங்கள் மற்றும் பல்வேறு சேவைக் கட்டணங்கள்  காட்டுமிராண்டித்தனமான முறையில் உயர்த்தப்பட்டன. 
இத்தகைய தான்தோன்றித்தனமான மற்றும் ஜனநாயகவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மாணவர்களும், ஆசிரியர்களும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். விடுதிக் கட்டத்திற்கு எதிரான இயக்கம்,
 அனைத்துப் பிரிவு மாணவர்களிடமும், பல்கலைக்கழகத்திற்கு  வெளியே இயங்கிடும் ஜனநாயக எண்ணம் கொண்டோரிடமும் ஆதரவினைப் பெற்றிருப்பதைக் காண்கிறோம்.

அச்சுறுத்தல்கள் மற்றும் வலுக்கட்டாய நடவடிக்கைகள் மூலமாக மாணவர்களையும், ஆசிரியர்களையும் நசுக்குவதற்கு அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பின் காரணமாக படுதோல்வி அடைந்ததன் விளைவாகத்தான், இப்போது இத்தகைய வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஜேஎன்யு வரலாற்றில் இதுபோன்று முன்னெப்போதும் நடந்ததில்லை. ஏபிவிபி-ஆர்எஸ்எஸ் குண்டர்களால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் மிகவும் நன்கு திட்டமிடப்பட்ட ஒன்று என்பதற்கும், இதற்கு ஜேஎன்யு நிர்வாகம் மற்றும் போலீஸ் முழுமையாக உடந்தையாக இருந்தன என்பதற்கும் போதுமான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. காட்சி ஊடகம் மற்றும் அச்சு ஊடகங்களில் சில, தாக்கியவர்களின் ஏபிவிவி மற்றும் ஆர்எஸ்எஸ் அடையாளங்களைத் தோலுரித்துக் காட்டியிருக்கின்றன. இத்தாக்குதலுக்கு போலீசார் எந்த அளவிற்கு வெட்கங்கெட்டமுறையில் உடந்தையாக இருந்திருக்கிறார்கள் என்பதையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றன. பல்கலைக்கழக வளாகத்திற்குள் தாக்குதலைத் தொடுத்த குண்டர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக, போலீசார், ஜேஎன்யு நிர்வாகத்தின் தூண்டுதலின் பேரில், மிகவும் மோசமாகக் காயம் அடைந்துள்ள ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் மீதும், இதர சங்க செயற்பாட்டாளர்கள் மீதும் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்திருப்பது, பொது மக்களின் மத்தியில் ஆத்திரத்தைக் கிளப்பியிருக்கிறது.

ஜேஎன்யு-வை அழித்து வீழ்த்துவதற்கும், பலவீனப்படுத்துவதற்கும் துணை வேந்தர் பிரதான கருவியாக இருக்கிறார். ஞாயிறு வன்முறை வெறியாட்டங்களைத் தொடர்ந்து பல்கலைக் கழகத்தை மூடிவிட வேண்டும் என்பதைத்தான் ஜேஎன்யு நிர்வாகம் விரும்பியதா என்று தெரியவில்லை.

ஆயுதமேந்திய குண்டர்களை வைத்து வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுவது, பின்னர் “இரண்டு குழுக்களுக்கு” இடையே மோதல் ஏற்பட்டது என்று கூறி, பல்கலைக் கழகத்தையே முழுமையாக மூடிவிடுவது. இதுதான் அவர்களின் ஒட்டுமொத்த குறிக்கோளாகும். ஆயினும், ஜேஎன்யு-வில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களுக்கு எதிராக நாடு முழுதும் கிளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளதும், இதற்குப் பின் இருந்த சக்திகள் எவை என்று நன்கு தோலுரித்துக் காட்டப்பட்டதும் இவர்களின் சூழ்ச்சித் திட்டத்தை முறியடித்துவிட்டது.

நாடு முழுதும் மாணவர்கள், ஜேஎன்யு மீதான தாக்குதலுக்கு எதிராக வீதிகளில் இறங்கி கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். ஏற்கனவே குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடியுரிமைப் பதிவேட்டிற்கு எதிராக நடைபெறும் இயக்கத்துடன் இதுவும் சேர்ந்து கொண்டது.

புதிய தொடக்கம் என்பது துணை வேந்தர் பதவியிலிருந்து இறக்கப்பட்ட பின்னர்தான் ஏற்படுத்த முடியும். மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்  கட்டண உயர்வுப் பிரச்சனை குறித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு பிரச்சனைக்குத் தீர்வு காண முன்வர வேண்டும். இத்துடன், ஜேஎன்யு உலகின் மிகச்சிறந்த பல்கலைக் கழகமாகத் தொடர்ந்து அதன் பங்கினை நிறைவேற்றுவதற்கு நம்பிக்கையளிக்கும் விதத்தில், ஞாயிறு அன்று வன்முறையில் ஈடுபட்ட கயவர்கள் மீது வழக்குப் பதிவு செய்திட வேண்டும்.

(ஜனவரி 8, 2020)

(தமிழில்: ச.வீரமணி)