tamilnadu

img

30 முகமூடி குண்டர்கள் என்னை இரும்புக் கம்பியால் தாக்கினார்கள்

ஜேஎன்யு மாணவர் பேரவைத் தலைவர் அய்ஷே கோஷ் பேட்டி

புதுதில்லி, ஜன.7- என்னைத் தனிமைப்படுத்தி, முகமூடி அணிந்த  முப்பது  குண்டர்கள் இரும்புக் கம்பியால் என்னைத் தாக்கினார்கள் என்று கையில் கட்டோடு மருத்துவசிகிச்சைக்குப்பின் திரும்பிவந்துள்ள ஜேஎன்யு மாணவர் பேரவைத் தலைவர் அய்ஷே கோஷ் கூறினார். குண்டர்கள் தாக்கியதில் அய்ஷே கோஷூக்கு நெற்றியில் 16 தையல் போடப்பட்டிருக்கிறது. இடது கை உடைந்து, அதற்குக் கட்டுப் போடப்பட்டிருக்கிறது. இச்சம்பவம் குறித்து அவர் கூறியதாவது:

குண்டர்களுக்கு உடந்தையான பாதுகாப்பு ஊழியர்கள்

“என் மீதான தாக்குதல் என்பது, பல்கலைக்கழகத்தில் படித்திடும் எட்டாயிரம் பேர் மீதான தாக்குதலாகும். சபர்மதி விடுதியின் அருகில் ஒரு காரில் உட்கார்ந்திருந்த ஒருவன், என்னைத் தனிமைப்படுத்தி இழுத்துச் சென்றான். பின்னர் முகமூடி அணிந்த முப்பது குண்டர்கள் என்னை  இரும்புக் கம்பிகளாலும், சுத்தியல்களாலும் தாக்கினார்கள். என்னை அவர்கள் தாக்கும்போது, அங்கே நின்றுகொண்டிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் தலையிட்டு அவர்களைத் தடுத்திடவில்லை. மாறாக,ஜேஎன்யு-வின் ஜனநாயகக் கலாச்சாரத்தை ஒழித்துக்கட்ட முயற்சிக்கும் இந்தக் குண்டர்களுக்கு உடந்தையாக இருந்தார்கள்.  ஞாயிறு அன்று நடைபெற்ற ஜேஎன்யு சம்பவம் தனித்த ஒன்று அல்ல. அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகம், ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் மற்றும் பல பல்கலைக்கழகங்களில் – எங்கெல்லாம் மாணவர்கள் மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் காவல்துறையினருக்கு எதிராகக் குரல் எழுப்புகிறார்களோ அங்கெல்லாம் – மாணவர்கள்மீது இவ்வாறு தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன.

கடந்த 45 நாட்களாக, ஆர்எஸ்எஸ்-உடன் தங்களைப் பிணைத்துக் கொண்டுள்ள  பேராசிரியர்களில் சிலர், விடுதிக் கட்டண உயர்வுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் எங்கள் இயக்கத்தை உடைத்திடுவதற்காக வன்முறை நடவடிக்கைகளுக்கு ஊக்கம் அளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜேஎன்யு-விலிருந்தும், காவல்துறையினரிடமிருந்தும் பாதுகாப்பு கோருவது எங்கள் தவறா?

பல்கலைக்கழக வளாகத்திற்குள் வெளியார் பலர் நுழைந்திருப்பது தெரிந்தவுடனேயே, நான் உடனடி யாக வசந்த் குஞ்ச் காவல்நிலைய அதிகாரிக்கு தகவல் அனுப்பினேன். அவரும், வெளியார்கள் வளாகத்தி லிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று பதில் அனுப்பினார். எனினும் சுமார் அரை மணி நேரம் அவர்கள் என்னைத் தாக்கினார்கள்.

வளாகத்தின் பாதுகாப்பு ஊழி யர்களும் காவல்துறையினரும் என்மீது தாக்குதல் தொடுக்கப்படு வதைப் பார்த்துக்கொண்டே நின்று கொண்டிருந்தார்கள். அங்கே நின்றுகொண்டிருந்த ஆம்புலன்சு வண்டிகளும் தாக்கப்பட்டன.

தாக்க அனுமதித்த  துணைவேந்தர்!

ஞாயிறன்று நடைபெற்ற வன்முறை வெறியாட்டச் சம்ப வம், ஏபிவிபி, ஜேஎன்யு நிர்வாகம், ஜேஎன்யு ஆசிரியர் சங்கத்திலி ருந்து பிரிந்து சென்றுள்ள ஜேஎன்யு ஆசிரியர் சம்மேளனம் ஆகியவற்றால் நன்கு திட்டமிட்டு ஏவப்பட்ட ஒன்றாகும்.  வெளியிலிருந்து வந்த குண்டர்களுடன் இவர்களும் சேர்ந்து  வன்முறை வெறியாட்டங்க ளில் ஈடுபட்டார்கள். காவல்துறையினர் சம்பவ இடத்தில் நின்றிருந்த போதிலும் அவர்களுக்கு உத்தரவிட  துணை வேந்தர் தாமதம் செய்தார். அதன் மூலம் குண்டர்கள் எங்களைத் தாக் குவதற்கு அனுமதி அளித்தார். இவ்வாறு அய்ஷே கோஷ் கூறினார்.

பேரணி

திங்களன்று ஆயிரக்கணக் கான மாணவர்கள் சபர்மதி விடுதி முனையிலிருந்து வடக்கு வாசல் வரை பேரணியாகச் சென்று, பின்னர் திரும்பி வந்தார்கள். மாணவர்களுடன் ஆசிரியர்களும் இணைந்து கொண்டார்கள். மாணவர்கள் இந்த சம்பவம் குறித்துக் கூறுகையில், ஜேஎன்யு -வின் ஜனநாயகத் தன்மையை அழித்திட முயற்சிகள் நடைபெறு கின்றன. இதனை நாங்கள் அனு மதிக்க மாட்டோம். இதற்கு நாங்கள் பணிய மாட்டோம். எட்டாம் தேதி அன்று வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கிறோம். நாடு முழுதும் உள்ள மாணவர்கள் அதில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறி னார்கள். (ந.நி.)