புதுக்கோட்டை, ஜூன் 5-போலீசாரைக் கண்டித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் அணவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (45). அந்தப் பகுதியில் அனுமதி இல்லாமல் மது விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து ஆலங்குடி மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து புதன்கிழமை காலை அணவயல் சென்று மது விற்பனை செய்து கொண்டிருந்த சேகரை பிடித்து அவரிடம் இருந்த சில மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.இந்த சம்பவம் நடந்த சற்று நேரத்தில் ஆலங்குடி மதுவிலக்கு பிரிவில் இருந்து வருவதாக சேகர் வீட்டிற்குச் சென்ற ஒருவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் உள்ள பொருட்களை தள்ளிவிட்டதுடன் வீட்டில் இருந்த சேகரின் குழந்தைகளிடம் தகாத வார்த்தைகளில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த குழந்தைகள் தன் தாயிடம் கதறி அழுதுள்ளனர்.இந்த சம்பவத்தைச் தொடர்ந்து வீட்டிற்கு வந்த சேகரிடம் குழந்தைகள் அழுது கொண்டே போலீசார் வந்து மிரட்டிவிட்டு சென்றதாக கூறியுள்ளனர். தொடர்ந்து சேகர் மற்றும் அவரது மனைவி, சேகரின் அம்மா ஆகியோர் வடகாடு காவல் நிலையம் முன்பு வீட்டில் குழந்தைகளிடம் தகாத வார்த்தையில் பேசிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ குளிக்க முயன்றனர். ஆனால் அங்கு நின்ற போலீசார் அவர்கள் மண்ணெண்ணெய் ஊற்றும் முன்பே பிடித்துவிட்டனர்.