tamilnadu

img

புதுக்கோட்டை மாணவர் தற்கொலை - தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

புதுக்கோட்டையில் 12-ஆம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், அப்பள்ளி தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை அருகே உள்ள விஜயபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணையா என்பவரின்  மகன் மாதேஸ்வரன் (17). இவர், புதுக்கோட்டை மச்சுவாடியில் உள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். காலாண்டுத் தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு வந்த மாதேஸ்வரனை, தலைமுடியையும், தாடியையும் வெட்டிவிட்டு பிற்பகல் ஒரு மணிக்கு தேர்வு எழுத வருமாறு கூறி பள்ளியின் தலைமை ஆசிரியர், மாணவரை பள்ளியிலிருந்து அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால் அவர் மாலையில் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் அவரை தேடியுள்ளனர். இந்த சூழலில், நேற்று இரவு பள்ளியின் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்ட நிலையில் மாணவரை அப்பகுதி மக்கள் கண்டெடுத்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீசார்  மாணவரின் சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், மாணவரின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தை சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்து, ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவரின் உறவினர்கள் மருத்துவக் கல்லூரி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை வட்டாட்சியர், கணேஷ் நகர் காவல் நிலையத்தினர் ஆகியோர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. 
இந்த நிலையில், மாணவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், அப்பள்ளி தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.