புதுக்கோட்டை: புதுக்கோட்டையின் 4-ஆவது புத்தகத் திருவிழா வருகின்ற பிப்ரவரி 14 முதல் 23-ஆம் தேதி முதல் புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது. புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவை பொதும்ககளிடம் கொண்டுசெல்லும் வகையில் ஆட்டோவில் பதாகை ஒட்டி விளம்பரம் செய்யும் பணி திங்கள்கிழமையன்று தொடங்கி வைக்கப்பட்டது. விளம்பரம் ஒட்டும் பணியினை ஸ்ரீவெங்கடேஸ்வரா பள்ளி தாளாளர் கவிஞர் தங்கம்மூர்த்தி தொடங்கி வைத்தார். புத்தகவிழாக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் அ.மண வாளன், நா.முத்துநிலவன், மா.வீரமுத்துவுடன் விழாக்குழுவைச் சேர்ந்த பேராசிரியர் விஸ்வநாதன், புதுகைப் புதல்வன், மாணவர் சங்கத் தலைவர்கள் ஜனார்த்தனம், கோபால் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் பலரும் கலந்து கொண்டனர். முதற் கட்டமாக புதுகை நகரில் 40 ஆட்டோக்களில் பதாகை ஒட்டும் பணி நடை பெற்றது. அடுத்தடுத்து மாவட்டம் முழுவதும் அனைத்து வட்டங்கள், ஒன்றியங்களிலுள்ள கிராமங்களுக்கும் செல்லும் 500 ஆட்டோக்களில் இந்த விளம்பரம் ஒட்டத் திட்ட மிட்டுள்ளதாக விழாக்குழுவினர் தெரிவித்தனர். பிளக்ஸ் போர்டு விளம்பரத்தை அரசு தடைசெய்திருப்பதால் மாவட்டம் முழுவதுமாக 5,000 பலவண்ணச் சுவரொட்டிகள் மூலமும் ஆட்டோ ஒலிபெருக்கிவழியும் சுவர் ஓவியம் வரைந்தும் விளம்பரம் செய்யப்படுவதாகவும் புத்தக விழாக்குழுவினர் தெரிவித்தார்கள்.