tamilnadu

img

பெகுசராய் தொகுதி சிபிஐ வேட்பாளர் கண்ணையா குமார் பேட்டி மதவெறி அரசியலுக்கு எதிரானதே என் போராட்டம்

“மதவெறி அரசியலுக்கு எதிரானதே என்போராட்டம்” என்றும், “பெகுசராய் வாக்காளர்கள் தில்லியில் அவர்கள் குரலை எதிரொலிப்பதற்காக என்னை நாடாளுமன்றத் திற்கு தேர்ந்தெடுத்து அனுப்புவார்கள்,” என்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகமுன்னாள் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளருமான கண்ணையாகுமார் கூறியுள்ளார்.பெகுசராய் தொகுதி, பீகாரின் லெனின் கிராடு என்று அறியப்பட்ட பகுதியாகும். இங்கே கணிசமான அளவில் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் சாதிகளைக் கடந்து செயல்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் கண்ணையா குமார், பாஜக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கை எதிர்த்துக் களத்தில் நிற்கிறார். அவரை ‘தி இந்து’ நாளிதழ் சார்பில் பேட்டி கண்டபோது அவர் கூறிய பதில் கள் பின்வருமாறு:


கேள்வி: உங்களுடைய போட்டியாளராக நீங்கள் யாரைக் கருதுகிறீர்கள்? பாஜக வேட்பாளர் கிரிராஜ் சிங்கையா? அல்லது மகா கூட்டணி (ஆர்ஜேடி) வேட்பாளர் தன்வீர் ஹசனையா?


கண்ணையாகுமார்: இவர்கள் இருவரையுமே என்னுடைய போட்டியாளர்களாக நான் கருதிடவில்லை. எனது போராட்டம், எந்தவொரு தனிநபருக்கும் எதிரானதல்ல. அது ஒரு தத்துவத்திற்கு எதிரான போராட்டமாகும். மக்களிடையே மதவெறியை ஊட்டுகிற, பிரிவினைவாதத்தை ஊட்டுகிற,அரசமைப்புச்சட்டத்தைத் தாக்கிக் கொண்டிருக்கிற, ஜனநாயக நிறுவனங்களைத் தகர்த்துக்கொண்டிருக்கிற ஒரு தத்துவத்திற்கு எதிரானபோராட்டமாகும். இப்போராட்டம் உரிமைகளுக் கும் அவற்றைச் சூறையாடுபவர்களுக்கும் எதிரானபோராட்டமாகும். இப்போராட்டம் உண்மைகளுக்கும் பொய்களுக்கும் இடையேயான போராட்டமாகும்.  


கேள்வி: பாஜக சார்பில் முன்வைக்கப்படுகிற வளர்ச்சி, நாட்டுப்பற்று, புல்வாமா மற்றும் பாலக்கோட் வான்வழித் தாக்குதல் பிரச்சாரம் குறித்து நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?


கண்ணையாகுமார்: பாஜகவின் பிரச்சார அரசியல் என்பது பிரிவினை அரசியல் (Divisive politics) என்பது நம் அனைவருக்கும் தெரியும். இவற்றால் எல்லாம் தாங்கள் வெற்றிபெற்று விடுவோம் என்று உண்மையிலேயே பாஜக கருதியிருந்தால், பின் ஏன் அக்கட்சி ஐக்கிய ஜனதாதளத்துடனும், சிவ சேனையுடனும் கூட்டணி அமைத்துக் கொள்ள வேண்டும்? நாட்டுப் பற்றையும், நம் வீரர்களின் தீரச்செயல்களையும் அரசியலுக்குள் கொண்டுவரக் கூடாது. ஒவ்வொரு இந்தியனும் அவர்களின் வீரதீரச் செயல்களுக்கு எப்போதுமே வணக்கம் செலுத்தி வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களின் வீரத்தை அரசியலாக்குவது என்பது கண்டிக்கப்பட வேண்டியது என்றே நான் நினைக்கிறேன். பாஜகவின் “தேச விரோதம்” மற்றும் “பொய்ச் செய்திகள்” போன்ற அவதூறுப் பிரச்சாரங்கள், சரியாகச் சிந்திக்கும் எந்தவொரு

இந்தியராலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது ஆகும். புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலையும், பாலக்கோடு வான்வழித் தாக்குதலையும் தங்கள் தோல்விகளை மறைப்பதற்காகவே பாஜக

வினர் முன்னுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். இவர்கள் சென்ற தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை.


கேள்வி: பெகுசராய் மக்கள் உங்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?


கண்ணையாகுமார்: ஏனெனில் நான் இந்த மண் ணின் மைந்தன். பாஜக வேட்பாளரைப்போல நான் இறக்குமதி செய்யப்பட்டவன் அல்ல. நீங்கள் இதனை நன்கு புரிந்துகொள்ள முடியும். அவர் (கிரிராஜ் சிங்), ஒரு வாரத்திற்கு முன்பு இங்கே போட்டியிடுவதற்கு தயங்கியதற்குக் காரணம் என்ன? அவர் பயந்திருக்க வேண்டும். பெகுசராய் மக்கள் எனக்குத்தான் வாக்களிப்பார்கள். ஏனெனில், வெறுப்பு அரசியலுக்கு எதிராகவும், மிரட்டலுக்கு எதிராகவும், ஒடுக்குமுறைக்கு எதிராகவும் மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு ஆதரவாகவும் அனைவருக்குமான ஜனநாயகத்திற்கு ஆதரவாகவும் தங்கள் குரல் தில்லியில் ஒலிக்க வேண்டுமானால் அதற்கு நான்தான் சரியான நபர் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.


கேள்வி: முன்பு ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவும், முதல்வர் நிதிஷ்குமாரும் உங்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு அளித்திருந்தபோதிலும் இப்போது ஏன் உங்களை தங்கள் வேட்பாளராக நிறுத்த அவர்கள் மறுத்தார்கள்?


கண்ணையாகுமார்: இதற்கான காரணங்கள் என்ன என்று எனக்குத் தெரியாது. எனினும் எனக்கு எவர்மீதும் காழ்ப்புணர்வோ கோபமோ கிடையாது. நான் இங்கே ஒரு தெளிவான நிகழ்ச்சி நிரலுடனும் திறந்த மனதுடனும் போட்டியிடுகிறேன். பெகுசராய் மக்கள் அரசியல் முதிர்ச்சி அடைந்தவர்கள். அவர்கள் அனைத்தையும் மிகச் சரியாகப்புரிந்து கொள்வார்கள். சாதி குறித்தும், மதம் குறித்தும் தங்கள் மீது திணிக்கப்பட்டிருந்த அனைத்து வெற்றுப் புனைந்துரைகளையும் அடித்து வீழ்த்திட ஏற்கெனவே அவர்கள் தயாராகி விட்டார்கள். பெகுசராய் எந்தக் காலத்திலேயுமே பாஜக-வின் வலுவான தளமாக இருந்ததில்லை. 2014-இல் மட்டும் தான் பாஜக வேட்பாளர் இங்கே வெற்றி பெற்றார். ஆனால், இது காலங்காலமாக கம்யூனிஸ்ட்டுகளின் கோட்டையாக, இடதுசாரிச் சிந்தனைகள் கோலோச்சும் பகுதியாக இருந்துவரும் இடமாகும். மத்திய பீகாரில் உள்ள மாவட்டங்களில் முன்பு நடந்ததுபோன்று இங்கே சாதியின் படுகொலைகள் எந்தக்காலத்திலும் நடந்ததில்லை. ஏன்?... ஏனென்றால், இங்குள்ள மக்கள் சமூகம் குறிந்து நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். அரசியல்ரீதியாக அவர்கள் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டும் இங்கே இடதுசாரி ஆதரவாளர்கள் இல்லை. உயர்சாதியான பூமிகார் சாதியைச் சேர்ந்தவர்களிலும் பெரும்பாலானவர்கள் இடதுசாரி இயக்கங்களின் ஆதரவாளர்கள்தான்.


கேள்வி: நீங்கள் பூமிகார் சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அது இந்தத்தேர்தலில் உங்களுக்கு உதவிடும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?


கண்ணையாகுமார்: உண்மையில் அப்படிக் கிடையாது. பூமிகார் சாதியை மட்டும் ஏன் தனிமைப்படுத்துகிறீர்கள்? அனைத்து சாதியினரின் ஆதரவையும் நான் பெற்றுக் கொண்டிருக்கிறேன். இது என்னுடைய தொகுதி. இவர்கள் அனைவரும், - அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் சரி, அல்லது இந்துக்களாக இருந்தாலும் சரி, - இவர்கள் அனைவரும் எம் மக்கள். நான் பூமிகார் சாதியில் பிறந்தவன் என்பதாலேயே இந்த சமூக உண்மையை நான் எப்படி நிராகரிக்க முடியும்?


கேள்வி: ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் மாணவர் சங்க தேர்தலில் போட்டியிட்டதற்கும் இப்போது இங்கே போட்டியிடுவதற்கும் இடையே வித்தியாசம் எப்படி இருக்கிறது?


கண்ணையாகுமார்: ஜேஎன்யு பல்கலைக் கழகம் என்பது ஒரு கல்வி நிறுவனம் என்பதையும் தாண்டிய ஒன்றாகும். அது சமூக இயக்கங்களிலிருந்தும், உணர்வுகளிலிருந்தும் நம் சொந்த வாழ்க்கையிலிருந்தும் கூட சுதந்திரமாகக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு வசதிகளைக் கொடுக்கும் இடமாகும். அங்கேதான் என் செயல்பாடுகள் தோன்றி மிளிர்ந்து வளர்ந்தன. அது என் வாழ்க்கையின் லட்சியத்தையே மாற்றி அமைத்தது. நான் மாணவர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டபோது, எனக்கு மாணவர்கள் மத்தியில் இந்த அளவிற்கு அபரிமிதமான ஆதரவு கிடைத்து வெற்றி கிட்டும் என எதிர்பார்க்கவில்லை. அதிலிருந்து மக்களவைக் கான இடத்திற்குப் போட்டியிடுவதிலும் பெரிய வித்தியாசம் இல்லை. இங்கே ஒவ்வொரு நாளும் மக்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். அவர்களிடமிருந்தும் நான் வெற்றி பெறக்கூடிய அளவிற்கு அபரிமிதமான ஆதரவு கிட்டும் என்று நம்புகிறேன்.


கேள்வி: நீங்கள் வெற்றிபெற்றுவிட்டால், உங்கள் முன்னுரிமைகள் என்னவாக இருக்கும்?


கண்ணையாகுமார்: என் போராட்டம் மதவெறி அரசியலுக்கு எதிரானதாகும். என் குரலை வெறுப்பு அரசியலுக்கு எதிராகவும், மிரட்டலுக்கு எதிராகவும் எழுப்புவேன். பணம் படைத்தவர்கள் மற்றும் பலம் படைத்தவர்கள் பைகளில் உள்ள அரசியலை அவர்களின் பைகளில் இருந்து வெளியே எடுத்து, யாருடைய வரிகளின் மூலமாக இந்த அரசாங்கம் இயங்குகிறதோ அந்த சாமானிய மக்களிடம் கொண்டு செல்வேன். மக்களே எங்களின் ஆசிரியர்கள். சமத்துவம், கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் கட்டமைப்புவசதிகளுக்காகக் குரல் கொடுப்பேன். மக்களுக்குப் பதிலளிக்கக்கூடிய விதத்தில் வெளிப்படைத்தன்மையுடனான மாற்று அரசியலுக்காக பாடுபடுவேன்.


கேள்வி: மக்கள் மத்தியில் அறைகூவல் விடுத்ததன் மூலம் எவ்வளவு நிதி சேகரித்தீர்கள்?


கண்ணையாகுமார்: முதல் மூன்று நாட்களில் 30 லட்சம் ரூபாய் வசூலானது. ஆனால் திடீரென்று இணையதளம் தாக்குதலுக்கு ஆளானதால், அதனைத் தொடர்ந்து பயன்படுத்த முடியவில்லை. எங்கள் இலக்கு, தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி 70 லட்சம் ரூபாய் வசூலிக்க வேண்டும் என்பதாகும்.


(நன்றி: தி இந்து)

தமிழில்: ச.வீரமணி;