பாட்னா, ஏப். 12 -மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கு பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும்; அதற்கான கடைசி வாய்ப்பே தற்போது நடக்கும் மக்களவைத் தேர்தல் என்று பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவருமான லாலு பிரசாத் கூறியுள்ளார்.ராஞ்சி சிறையில் இருந்தவாறு, வாக்காளர்களுக்கு கடிதம் ஒன்றை லாலு எழுதியுள்ளார். அது லாலுவின் ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளது. அந்த கடிதத்தில், லாலு மேலும் கூறியிருப்பதாவது:மோடி தலைமையில் தற்போது நடப்பது பகட்டு அரசாகும். கடந்த 5 ஆண்டுகளில் எந்த வேலைவாய்ப்பையும் மோடி அரசு ஏற்படுத்தவில்லை. மாறாக, ஏற்கெனவே உள்ள வேலைவாய்ப்புகளிலும் இடஒதுக்கீட்டை ஒழித்து வருகிறது. ஆட்சியில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காக, பிரதமர் மோடி அரசு பிரித்தாளும் சூழ்ச்சியைச் செய்து வருகிறது. ஏராளமான பொய்களைச் சொல்லி, நாட்டு மக்களை அடிமைகளாக்க முயற்சிக்கிறது. நமது தன்மானம் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.நமது அரசியலமைப்பு, நமது இடஒதுக்கீடு, நமது நாடு மற்றும் நமது சமூகம் என அனைத்துமே தற்போது ஆபத்தில் இருக்கின்றன. மக்களாகிய நம்முடைய வலுவைச் சோதிக்க பாஜக-வினர் நினைக்கின்றனர். தேர்தல் அரசியலமைப்பைக் காக்க நினைப்பவர்களுக்கும், அதற்கு எதிரானவர்களுக்குமான இறுதிப்போர்தான் இந்த தேர்தல். எனவே, ‘செய் அல்லது செத்துமடி’ என்ற மனநிலையுடன் நாம் செயல்பட வேண்டும். இந்த தேர்தல்தான் நம்மைக் காப்பதற்கான ஒரே வாய்ப்பு. இவ்வாறு லாலு பிரசாத் கூறியுள்ளார்.