tamilnadu

img

காந்தியமும், பெரியாரியமும் வெற்றுக் குறியீடல்ல!- ராமச்சந்திர வைத்தியநாத்

காந்தி ஸ்மிருதி என்று அழைக்கப்படும் காந்தியடிகளின் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த, ஆன்ரி கார்த்தியே பிரெஸோன் எனும் புகழ் பெற்ற  பிரெஞ்ச் புகைப்படக் கலைஞரின், காந்தியடிகளின் இறுதிப்பயண படங்கள் அகற்றப்பட்டு வருவதாக காந்தியடிகளின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 1948 ஜனவரி 20 அன்று கோட்சே கும்பல் கொலைக்கு ஒத்திகை பார்க்கும் விதமாய் எறிந்த கைக்குண்டு வெடித்த இடத்தை,  அதே நிலையில் பிர்லா மாளிகையில் பாரமரிக்கப்பட்டு வந்ததாகவும், அதையும் தற்போது சிமெண்ட் பூசி மறைத்துவிட்டார்கள் என்றும் அறியமுடிகிறது.   பெரும்பாலான தேசியப்  பத்திரிகைகளில் இச்செய்தி இடம் பெற்றதாக தெரியவில்லை. ஆயின் துஷார் காந்தியின் அறிக்கையை மட்டுமே ஒரு சில பத்திரிகைகள் சம்பிரதாய பூர்வமாக வெளியிட்டிருந்தன.

பூசி மொழுகுவது, இருட்டடிப்பது என்பதெல்லாம் இந்துத்துவ சக்திகளின் கைவந்த கலை என்பதை தேசத்தின் வரலாற்றை அறிந்த அனைவருமே நன்கறிவர். ஆயின் தற்போது தேசிய அளவில் பத்திரிகைகளும் ஜனநாயகத்திற்கு எதிரான இத்தகைய செயல்பாட்டிற்கு துணை நிற்பது என்பது இந்துத்துவ சக்திகளின் எதிர்ப்பை விரும்பாத அபாயகரமான போக்கின் வெளிப்பாடே. இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர்களை சிறுமைப்படுத்துவது, இழிவுபடுத்துவது மட்டுமின்றி இருட்டடிப்பு செய்யும் முயற்சிகளை இவ்வமைப்புகள் காலங்காலமாய் மேற்கொண்டு வருகிறது.  இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி மத்திய அரசில் பதவியேற்றதும் இவை தீவிரமடைந்தும், விரிவு பெற்றும் வருகிறது. தவிர அரசியல் சட்டத்தை புறந்தள்ளி மனு தர்மத்திற்கு முக்கியத்துவமளிக்கக்கூடிய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை அவர்களின் சமீபத்திய செயல்முறைகள் நேரடியாகவே வெளிப்படுத்தி வருகின்றன. இந்த தேசத்தின் விடுதலைப் போராட்டத்திலும் பிந்திய ஒடுக்கப்பட்டோரின் போரட்டங்களிலும் தங்களின் பங்களிப்பு இல்லாதது அல்லது கேள்விக்குரியது என்ற சிந்தனையின் அடிப்படையில் அவற்றையே அகற்றி, இந்துத்துவ தலைவர்களுக்கு புத்தாக்கம் தரும் பணிகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தங்களது இலக்கான ஒற்றைத் தன்மையை நிறுவிடும் பொருட்டு விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு சிலரை தங்களது சித்தாந்தத்திற்கு நெருக்கமானவர்களாக கூறி வருவதோடு அவர்களை தங்களது அடையாளமாக நிலை நிறுத்துவதும் வேகம் பெற்று வருகின்றது.

தேசிய அளவில் மட்டுமின்றி பிராந்திய அளவிலும் இப்படி பலரை அவர்கள் களவாடியதுண்டு. இதன் தொடர்ச்சிதான் தற்போது நிகழும் நகரங்கள், சாலைகள், விளையாட்டு மைதானங்கள் போன்றவற்றின் பெயர்மாற்றங்களும், சிலை உருவாக்கங்களும், படங்கள் அகற்றலும், பூசி மொழுகுவதும்.  இத்தோடன்றி காலங்காலமாய் பின்பற்றி வரக்கூடிய நினைவு நாட்களையும் களவாடி வருகின்றனர். இவை யாவுமே யதேச்சையாக நடைபெற்றதாக கருதலாகாது. சர்வதேச அளவில் மே தினம் தொழிலாளர் தினமாக பின்பற்றப்பட்டு வருகையில், இந்துத்துவ சக்திகள் விஸ்வ கர்மா தினமாக வேறு ஒரு நாளை தேர்ந்தெடுத்து கொண்டாடி வருகின்றனர். பாபர் மசூதி இடிப்புக்கு அம்பேத்கார் நினைவு தினத்தை தெரிவு செய்தது என்பதும், கிறிஸ்துமஸ் நாளை வாஜ்பாய் பிறந்த நாளென அறிவித்து பின்வாங்கியதும் வரலாற்றை மறைத்திடும் நோக்கங்களை கொண்டுள்ளது. இன்னும் சொல்லப் போனால் இத்தகைய செயல்பாடுகளுக்கு முன்னோடியாக விளங்கிய அத்வானியும் இதற்கு இரையானார் என்றுதான் சொல்ல வேண்டும்.  இந்துக் கோயில்களை தனது கனவுத் தொழிற்சாலைகளாக மாற்றிய அவரது பிறந்த நாள் நவம்பர் எட்டு அன்று வீழ்த்தப்பட்டது பண மதிப்பு மட்டுமல்ல, ரைசினாக் குன்றில் குடியேறும் அவரது நீண்ட நெடிய கனவும்தான்.

தவிர என்.பி.ஆரிலும் அவர் இடம் பெறுவாரா என்பதை மோடியும் அமித் ஷா மட்டுமே அறிவர்.  தற்போது அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல் சென்ற ஆண்டு காந்தியடிகள் பிறந்த நாளை ஸ்வச் பாரத் தினமாக அதாவது கக்கூஸ் தினமாக முன் நிறுத்தி காந்தியடிகளின் நினைவை அகற்றும்  கேவலமான செயல் துவக்கப்பட்டுள்ளது. தவிர தேர்வில் காந்திஜி தற்கொலை செய்து கொண்டாரா என்று கேள்வியை எழுப்பியது, ரூபாய் நோட்டில் காந்தி படத்தை அகற்றி லட்சுமி படத்தை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று சுப்பிரமணியசாமி கோரிக்கை விடுப்பது போன்ற அனைத்துமே இதில் அடங்கக்கூடியதுதான். கொலைகாரன் கோட்சே தனது கொலைபாதகச் செயல் முற்றிலும் இந்து தர்மத்தையும் பகவத் கீதையையும் அடிப்படையாக கொண்டதாக கூறியதோடு,  சிந்து அகண்ட பாரதத்தில் ஓடும் நிலை வரை தனது சாம்பல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், இந்துஸ்தான் என்ற பெயரில் இந்நாடு அழைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தான். சரஸ்வதியை தேடிக்கொண்டிருக்கும் பாஜக அரசு என்றென்றுமே சாம்பலை கரைக்க முடியாமல்போகும் என்பதால் கோட்சேவுக்கும், கோட்சே ஆப்தே இருவரின் சந்திப்புக்குப் பின்னர் “வெற்றியோடு திரும்புங்கள்” என்று ஆசீர்வதித்த சாவார்க்கருக்கும் பாரத ரத்னா வழங்கக்கூடும்.  இத்தருணத்தில் கோட்சேயின் கருத்துக்கு மாறாக காந்திஸ்தான் என்ற பெயரில் இந்நாடு அழைக்கப்பட வேண்டும் என்று தென்னாட்டு பெரியவர் ஒருவரின் கோரிக்கையை இணைத்துப் பார்க்க வேண்டியது அவசியமானது.  ஆம். காந்தியடிகள் இந்துத்துவ சக்திகளால் கொலை செய்யப்பட்டு தேசமே மிகவும் கொந்தளிப்பாக இருந்த நேரத்தில் இன்றைய தினம் அமித் ஷா, ஆதித்யநாத் தொடங்கி இந்துத்துவ சக்திகள் எவையுமே கைவைக்க அஞ்சக்கூடிய யோசனையொன்றை ஒருவர் முன்வைக்கிறார்.

அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டிக்கும், பண்டிட் நேரு, ராஜகோபாராச்சாரியார், பட்டேல், ராஜேந்திர பிரசாத், ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோருக்கு இதை கடிதமாகவும் எழுதுகிறார். அது மட்டுமின்றி அன்றைய தினம் துணிச்சலாக எதிர்வினையாற்றிய அவரை காந்தியடிகளின் நினைவு நாளன்று நினைவு கூறாமல் இருக்க முடியாது.  இத்தனைக்கும் இத்துத்வ சக்திகளைப் போலவே அவரும் காந்தியடிகளை எதிர்த்து வந்தவர்தான். இன்னும் சொல்லப்போனால் கருத்தின் அடிப்படையில் எதிர்ப்பதாக வெளிப்படையாக கூறி சமரசத்துக்கு இடமின்றி தீவிரத்துவத்துடன் எதிர் வினையாற்றி வந்தவர். காந்தியடிகள் கொலையுற்ற பதினைந்தாவது நாளில் காந்தியாருக்கு ஞாபகச் சின்னம் ஏற்படுத்துவது அவசியமென்றும் அது நிரந்தரமானதாகவும் அதிசயமான பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிக்கையொன்றை விடுத்து அதில் நான்கு யோசனைகளை முன் வைக்கிறார். இதைத்தான் கடிதமாக அனுப்பி வைக்கிறார்.

1.    இந்தியாவுக்கு இந்துஸ்தான் என்கின்ற பெயருக்குப் பதிலாக காந்தி தேசம் அல்லது காந்திஸ்தான் என்று பெயரிடலாம்.
2.    இந்து மதம் என்பதற்கு பதிலாக காந்திமதம் அல்லது காந்தியிசம் என்பதாக மாற்றப்படலாம்.
3.    இந்துக்கள் என்பதற்குப் பதிலாக மெய்ஞ்ஞானிகள் அல்லது சத்ஞானஜன் என்று பெயர் மாற்றப்படலாம்.
4.    காந்தி மதக் கொள்கையாக இந்தியாவில் ஒரே பிரிவு மக்கள்தான் உண்டு. வருணாசிரம தர்மமுறை அனுசரிக்கப்பட மாட்டாது. ஞானமும் (அறிவும்) பட்சமும் (அன்பும்) அடிப்படையாகக் கொண்டது.  சத் அதாவது சத்தியமே நித்தியமானது என்பதான சன்மார்க்கங்களைக் கொண்டதாகும் என்பதாக ஏற்படுத்தி கிருஸ்து ஆண்டு என்பதற்குப் பதிலாக காந்தி ஆண்டு என்று துவக்கலாம்.   
காந்தியடிகள் மீது மட்டுமின்றி  நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீதும் மிகுந்த நம்பிக்கையும் வெகுவான அக்கறையும் கொண்டிருந்ததன் வெளிப்பாடுதான் இக்கோரிக்கை. 


காந்தியடிகள் கோட்சேயின் துப்பாக்கிக்கு இரையான தருணம். சாதாரண மக்கள் மட்டுமின்றி காந்தியடிகளின் பாதையை பின்பற்றி வந்த பெருந்தலைவர்களும் சர்வதேச பிரமுகர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். அன்றைய தினம் அகில இந்திய வானொலியில் மாலை ஆறு  மணிக்கு அதிகார பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படுகிறது. உள்துறையின் அறிவுறுத்தலுக்கிணங்க மராட்டிய மாநில சித்பாவன பிராமணர் ஒருவரால் கொலை செய்யப்பட்டார் என்று அரைமணிக்கொரு முறை அறிவிப்பு வந்த வண்ணம் இருக்கிறது.  இருப்பினும் இன்றைய பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒன்றுபட்ட மாகாணம், மத்திய மாகாணம், பம்பாய் ஆகியவற்றில் இஸ்லாமியர் குறிவைத்து தாக்கப்பட்டனர். அதே தருணத்தில் அன்றைய தினம் சென்னையில் மத மோதலை தடுத்திடும் வகையில் ஒலி பெருக்கி பொருந்திய வண்டியில் நகரின் பல பகுதிகளுக்கும் சென்று சுட்டவர் இஸ்லாமியரல்ல இந்துதான் என்று உண்மையை எடுத்துரைத்த மறைந்த வி.பி.சிந்தன், மாயாண்டி பாரதி ஆகியோரின்  உடனடிச் செயல்பாடென்பது கம்யூனிச இயக்கத்தின் பாரம்பரியத்தைக் கொண்டதாகும்.  

காந்தியடிகளுக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில் பலரது உரையை அகில இந்திய வானொலி ஒலிபரப்பியது.   1948 ஜனவரி 31 அன்று திருச்சியில் தங்கியிருந்த காந்தியத்தை எதிர்க்கக்கூடிய இப்பெரியவரை உரை நிகழ்த்தும்படி கோரிக்கை விடுக்கிறது. அத்தருணத்தில் அவர் காலங்காலமாய் எதிர்த்து வந்த ஒரு சாதிப் பிரிவை சுட்டிக் காட்டி அவர்கள்தான் இக்கொலையை செய்தனர் என்றுரைத்து  தமிழகத்தில் கொந்தளிப்பையும் சாதிப் பகைமையையும் பரட்டையாய் பற்ற வைத்திருக்க முடியும். ஆயின் அவர் மிகுந்த பொறுப்புடனும் நிதானத்துடனும் மட்டுமின்றி கண்ணியத்துடனும் உரை நிகழ்த்துகிறார்.  “எந்த மக்களுக்காக உயிர் வாழ்ந்தாரோ அல்லும் பகலும் இடையின்றி பாடுபட்டாரோ அவர்களாலேயே இந்த முடிவு ஏற்பட்டதென்றால் இது வெகு வெகு வெறுக்கத்தக்க காரியம்.  இவ்விழிதரமான காரியத்துக்கு சுட்டவன் ஒருவனே பொறுப்பாளி என்று என்னால் கருதமுடியவில்லை...... பொதுவாகவே இந்நாட்டில் பொது ஒழுக்கம் ஏற்றவும் மோசமான தன்மை அடைந்து விட்டதை இச்சம்பவம் காட்டுகிறது. ஒரு நாகரிக நாட்டில் இப்படிப்பட்டவருக்கு இந்த மாதிரி சம்பவம் ஏற்படுவதென்பது சிறிதும் முடியாத காரியமாகும்...... திராவிட மக்கள் எப்படிப்பட்ட நிலையிலும் அமைதியுடனும் சகிப்புத் தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டுமென்பது எனது விண்ணப்பம்.” 

இது அவரது உரையின் ஒரு சில பகுதிகளே.  இத்தோடு அவர் நின்றுவிடவில்லை.  அறிவியல் மனோபாவம் இன்றி பிதற்றும் கும்பலையும், அவர்களுக்கு ஆதரவளிக்கும் சக்திகளையும் விடவில்லை. தன் தடியால் அடிக்கிறார்.  பதிவு செய்கிறார். காந்தியார் உயிர் நீத்த பின் அவரைப் பிழைக்க வைக்க தன்னால் முடியும் என்று ஒரு சாமியார் சென்னை பிரதமரிடம் வேண்டியிருக்கையில், டாக்டர் சுப்பராயனும் டாக்டர் அழகப்பா செட்டியாரும் விமானத்தில் அவரை டில்லிக்கு அழைத்துச் சென்றதைக் குறிப்பிட்டு சாடுகிறார். “காந்தியாரைக் கொலை செய்தவன் ஆரியன். அவனைத் தூண்டிவிட்டது இந்து(மத)மகா சபை. அதற்குப் பட்டாளம் ராஷ்டிரீய சுயம் சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்)...  அதை ஆதரித்து வந்தவை (தேசிய) காங்கிரஸ் ஏடுகள்” என்று நேரடியாக குற்றஞ்சாட்டும் அவர் காந்தியார் மறைவுக்கு தனது இயக்கம் சார்பில் ஒவ்வொரு ஊரிலும் ஒரே நாளில் அனுதாபக் கூட்டங்களை நடத்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்ததும் வித்தியாசமானதுதான். காந்தியார் அவர்கள் இயற்கைக்கு விரோதமாக கொல்லப்பட்டது குறித்து அனுதாபப்படவும் கொலைச் சம்பவத்தை கண்டிக்கவும் 29.02.1948 ஞாயிற்றுக்கிழமையன்று கண்டனக் கூட்டம் ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும், கூட்டத்திற்கு ஆடம்பரம் கூடாது, செலவு கூடாது, ஒலிபெருக்கிக் கூடாது, சொற்பொழிவு கூடாது, அனுதாபத் தீர்மானத்தைப் படித்ததும் பொது மக்கள் ஒரு நிமிடம் மவுனமாக இருந்து மிக அமைதியாக பிரிந்து விட வேண்டியது என்று அறிக்கை விடுக்கிறார். 

அனுதாபத் தீர்மானத்தின் இறுதிப் பகுதி அவருக்கே உரிய முறையில் அமைந்துள்ளது.  “இம்மரணத்துக்குக் காரணமாக இருந்த கொலை பாதகனையும், அவனுக்குப் பின்னால் ஆதரவாகவும் நடத்துபவர்களாகவும் இருந்த ஸ்தாபனங்களையும் மக்களையும் வெறுப்பு காட்டிக் கண்டிக்கிறது. இந்த பரிதாபகரமான நிகழ்ச்சியின் விளைவைப் படிப்பினையாகக் கொண்டு இந்நாட்டு மக்கள் யாவருமே சாதி மத இன வேறுபாடு காரணமாய் வேற்றுமை உணர்ச்சி இல்லாமல் ஒன்றுபட்டு வாழ்வோமாக!” காந்தியடிகளின் நினைவைப் போற்றி மக்கள் ஒற்றுமையையும் மத நல்லிணக்ககத்தையும் நிலை நாட்டும் வகையில் கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை குடியரசில் இடைவிடாது கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அதே நேரத்தில் இவற்றை  சீர்குலைத்திடுவோரை சாடிட அஞ்சியதில்லை என்பதை அக்கட்டுரைகள் வெளிப்படுத்துகின்றன.  செய்திகளை திரித்து வெளியிட்டு முஸ்லீம்கள் மீதும், காங்கிரசுக்கு மாறுபட்ட கருத்துக் கொண்டோர் மீதும் துவேஷத்தை உண்டாக்கும் வகையில் அயோக்கியத்தனமாக மறைத்து திருத்தியும் பிரசுரித்தவர்களை சுட்டிக் காட்டியுள்ளார். இந்துத்துவாவை மறைமுகமாக ஊக்குவிக்கும் காங்கிரசை பகிரங்கமாக குறைகூறினார். சாதி சங்கங்களை தடை செய்து அதனதன் தலைவர்களையும் பிரமுகர்களையும் பந்தோபஸ்தில் வைத்து அவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்யாமல் இந்து மகா சபை ஒழிக்கப்படாலும் சரி ராஷ்டிரிய சுயம் சேவக் சபை ஒழிக்கப்பட்டாலும் சரி மாறுதல் ஒன்றும் ஏற்படப் போவதில்லை என்பது தனது கல்போன்ற உறுதி என்று அழுத்தமாய் கூறுவது ஆச்சரியமானதுவே.  

வருணாசிரம தர்மத்தை காப்பதில் பிடிவாதமான கவலை கொண்டிருப்பதாக காந்தியடிகளை அவர்  கடுமையாக விமரிசனம் செய்து வந்த போதிலும், அவர் மறைவுற்ற தருணத்தில் கம்யூனிஸ்டுகளும் சமதர்மவாதிகளும் அவரிடத்தில் மதிப்பும் மரியாதையும் வைத்தவர்களாகவே இருந்து வந்திருப்பதை எடுத்துக்காட்டி திராவிட மக்கள் எப்படிப்பட்ட நிலையிலும் அமைதியுடனும் சகிப்புத் தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியதோடு காந்தியடியகளின் பதாகையை உயர்த்திப் பிடித்தவர் அம்மாமனிதர்.  அவர்தான் ஈ.வே.ரா.பெரியார்.  கடந்த காலங்களில் இந்துத்துவ சக்திகளையும் புரையோடிக்கிடக்கும் பழமைவாதத்தையும் எதிர்த்த பல்வேறு விடுதலைப் போராட்ட வீரர்களை, சீர்திருத்தவாதிகளை ஏன் அம்பேத்காரையும்  காவிப் படையினர் விட்டு வைக்கவில்லை.  தங்களின் சித்தாந்தத்துடன் நெருங்கியவர்களாக புதிய தலைமுறையினரிடம் சித்தரித்து வருகின்றனர். ஆயின் நாட்டின் பன்முகத் தன்மையை அங்கீகரித்து  மத நல்லிணக்கத்தை உறுதியுடன் பின்பற்றிவந்த காந்தியடிகளும்,  மூடப்பழக்க வழக்கங்களுக்கும் அறியாமைக்கும் எதிராக  ஒடுக்கப்பட்டோரை மேம்படுத்திட ஒரு கலகக்காரனாய் களத்தில் செயல்பட்ட பெரியாரும் காவிக் கும்பலால்  நெருங்க முடியாத ஒளிப் பிழம்பாகவே இன்னமும் இருந்து வருகின்றனர். இந்த அடிப்படையில்தான் இருவர் குறித்து எதிர்மறையான கருத்தோட்டம் கட்டவிழ்த்து விடப்படுகிறது.  இந்த அடிப்படையில் ஒற்றைத்தன்மை, மூடப்பழக்க வழக்கங்கள், அறியாமை ஆகியவற்றுக்கு எதிராக அணிதிரண்டிடவும் சாதி இனம் மொழி அடிப்படையில் ஒடுக்கப்படுவோருக்காக போராடிடவும், மத நல்லிணக்கத்தையும் மக்கள் ஒற்றுமையையும் பாதுகாத்திடவும் காந்தியடிகளையும் பெரியாரையும் இணைத்து எடுத்துச் செல்வது பொருத்தமாகவே இருக்கும். அதுவே இன்றைய தேவையாகும்.

;