நாமக்கல், ஜூன் 2-மத்திய பாஜக அரசு புதிய கல்விக்கொள்கையை அறிவித்து இந்தி திணிப்பை மேற்கொண்டுள்ளது மக்கள்விரோத செயலாகும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் எஸ்.கே.சேசாசலம் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் படம் திறப்பு நிகழ்ச்சி நாமக்கல் மாவட்டம்,திருச்செங்கோடு அடுத்துள்ள சூரியம்பாளையத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித் தார். அப்போது அவர் கூறியதாவது:இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள மத்திய பாஜகமோடி அரசு புதிய கல்விக் கொள்கையை அறிவித்து இந்தி திணிப்பை மேற்கொண்டுள்ளது. இது மக்கள் விரோதசெயலாகும். எனவே புதிய தேசிய கல்விக்கொள்கையை -மும்மொழிக் கொள்கையை விளக்கிக் கொள்ள வேண்டும்.மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கையை புதிய கல்விக் கொள்கை மீதான கருத்துக்களை பொதுமக்கள் தெரிவிப்பதற்கு ஒரு மாதம்மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கல்விக் கொள்கை அடங்கிய புத்தகம் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் உள்ளது. அதிகப் பக்கங்களைக் கொண்டு உள்ளதால் அவற்றை முழுவதும் அறிந்து கருத்து கூறுவதற்கு ஆறுமாதம் அவகாசம் அளிக்க வேண்டும்.தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவிமின் பொறியாளர் பணியிடங்களுக்கு 325 பேரில் 38 பேர் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களை நியமனம் செய்ய உள்ளது கண்டிக்கத்தக்கது. இந்திய ஆட்சிப் பணி பணிகளைத் தவிர தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் அரசு பணிகளுக்கு தமிழ் மொழி தெரியாதவர்களை பணிக்குஅமர்த்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2016 விதியில் வெளிமாநில பணியாளர்களை நியமிக்கலாம் என்ற விதிகொண்டுவரப்பட்டதை திருத்தம் செய்யவேண்டும். தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு தமிழர்களையே நியமனம் செய்ய வேண்டும்.
டிரம்புக்கு அடிபணியாதே!
ஈரான் நாட்டில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் போது குறைந்த விலையில் இந்திய ரூபாய் மதிப்பில் வர்த்தகம் செய்ய முடியும். இதனால் எண்ணெய் இறக்குமதியில் எவ்வித பிரச்சனையும் ஏற்படாது. ஆனால் அமெரிக்கா இதற்கு தடை விதித்துள்ளது ஏற்கத்தக்கதல்ல. சமீபத்தில் இந்திய பொருட்களுக்கு வரி சலுகைகளை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விலக்கிக் கொண்டுள் ளது. இந்திய -அமெரிக்க வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கும்.தேர்தலுக்கு முன்பிருந்தே மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, யாருக்கு வாக்களித்தோம் என்ற விவரத்தை மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் 50 சதவிகித பூத்துகளில் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என வலியுறுத்தி வந்தது. ஆனால் தொகுதிக்கு 5 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளை மட்டுமே எண்ணியது ஏற்கத்தக்கதல்ல.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீட் தேர்வுக்கு எதிராகவும் பேருந்து கட்டணம் உயர்வுக்கு எதிராகவும் மக்களை பாதிக்கின்ற பிரச்சனைகளுக்கு எதிராக தொடர்ந்து திமுக, இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்டவர்கள் தமிழகத்தில் போராடியதன் விளைவாக அதிமுக- பாஜகவை தோற்கடிக்கப் பட்டுள்ளது.இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.பேட்டியின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்டசெயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி ஆகியோர் உடனிருந்தனர்.